Skip to main content

நிலவும் நிழலும்

 இளையராஜா, மன்னிக்கவும் இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடந்தது. அரசே நடத்திய விழா. சிகரம் தொட்ட தமிழன் என்று அதற்குப் பெயரிட்டிருந்தார்கள். சிம்பனி என்ற மேற்கத்திய இசை வடிவத்தை உருவாக்கியதைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழா. இந்த விழாவில் பேசியவர்கள் பெரிதாக சிம்பனி பற்றிப் பேசவில்லை. உணர்ச்சிப் பெருக்கில் இளையராஜாவால் சரியாகப் பேச முடியவில்லை. இதை அவரே தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். மூகாம்பிகை மேல் கொண்ட பக்தி குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க முடியாமல் போனது பற்றி எல்லாம் பேசியவர் ரஜினிகாந்தோடு சேர்ந்து குடித்ததைப் பற்றிக் கூற முயன்றார். சரிவர அதைச் செய்ய முடியாமல் போனது. அவருக்கு உதவி செய்ய ரஜினிகாந்த் மன்னிக்கவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மைக்கைப் பிடித்தார். பெருத்த ஆரவாரம். ரஜினிகாந்த் மகேந்திரன் மற்றும் இளையராஜாவோடு சேர்ந்து குடித்ததை பெருங்கூட்டத்தோடு பகிர்ந்து கொண்டார். எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். 


இசைதான் வாழ்வு என்று ஆனபின் இளையராஜா மிகுந்த ஈடுபாடு மற்றும் முனைப்புடன் தனது வேலையைச் செய்தார். தொடர்ந்து கற்றுக் கொண்டே இருந்தார். தனிப்பட அவரிடம் இருந்த ஒழுங்கு கட்டுப்பாடு மற்றும் சிரத்தை யாவும் அவருக்காக வாசிக்கும் இசைக் கலைஞர்களிடம் கூட அவரால் கொண்டு வர முடிந்தது. இசைக் குறிப்புகளை எழுதி அதைப் பார்த்து கலைஞர்கள் வாசிக்கும் முறை அவரால் வந்தது.


அவரது பாடல்கள் சிறப்பாக அமைந்தன. சாமான்ய மக்களும் அதை ரசித்துக் கொண்டாடினார்கள். நாட்டுப்புற இசையும் மேற்கத்திய இசையும் கலந்து பரிணமித்தது. பாடல்கள் அழகாக உருவானது போல அவரது பின்னணி இசையும் சிறப்பாக அமைந்தது. அதற்காக அவர் மெனக்கிட்டார். அவரது ஆரம்ப காலப் படங்களிலேயே அவரது திறமை பளிச்சிட்டது. நான் நிறைய அதை அனுபவித்திருக்கிறேன். கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் டைட்டில் இசை மற்றும் பல காட்சிகளின் பின்னணி இசை இன்றளவும் நினைவில் உண்டு. 




திரை இசை ஒரு புதுத்தடத்தில் பயணப்பட்டது. எல்லா இசையமைப்பாளர்களும் அதே பாட்டையில் பயணிக்க முற்பட்டார்கள். 


மெல்ல மெல்ல ராஜா என்கிற இளையராஜா இசை ஞானி, இசைக் கடவுள், இசை அவதாரம் என்றென்றெல்லாம் கொண்டாடப்பட்டார்.

ஒரு புனிதத் தன்மை அவர் விரும்பியோ விரும்பாமலோ அவர் மேல் ஏற்றப்பட்டது.

அவரை வழிபடத் தொடங்கியது திரை உலகம். ரஜினிகாந்த் அவரை சாமி என்றே அழைத்தார். எழுத்தாளர் ஜெயமோகன் அவரை mystic என்று கொண்டாடினார்.


பாராட்டு விழாவில் கொஞ்சம் அந்தப் புனிதத் தன்மையை சற்றுக் கீழே இறக்கி வைத்து விட்டு நானும் சாதாரணமானவன் குடிக்க எல்லாம் செய்திருக்கிறேன் என்று இளையராஜா சொல்ல நேர்ந்திருக்கிறது.


சமீபத்தில் ஒரு சீனக் கவிதை படித்தேன் அதை பகிரத் தோன்றியது. 



மலர்களின் நடுவே இருந்து

மதுக் கோப்பையை நான் எடுக்கிறேன்

தனியே குடிக்கிறேன்

நண்பர்கள் யாரும் இல்லை


நான் கோப்பையை நிலவை நோக்கி உயரத்தினேன் 

இப்போது நிலவு, நான், எனது நிழல் மூவர்


ஆனால் நிலவு குடிக்கவில்லை

எனது நிழலோ என்னையே பின்பற்றுகிறது


நான் நிலவோடும் நிழலோடும் பயணப்பட்டேன் 

வசந்தத்தின் இறுதி வரை ஆனந்தம் கொண்டேன்


நான் பாடினேன், நிலவு ஆடியது

நான் ஆடினேன், எனது நிழலும் ஆடியது


சாதாரணமாக இருக்கும் போது வாழ்வின் சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்கிறோம்

குடித்து விட்டாலோ அவரவர் அவரவர் வழியில்


என்றும் நண்பர்கள், எங்கே அலைந்தாலும்

மீண்டும் பால்வீதியில் நாம் சந்திப்போம்


லீ தாய் போவின்

சீனக் கவிதை

ஆங்கிலம் வழியாகத் தமிழில் 

தி சந்தானம்


Comments

  1. நானும் அந்த விழாவைப் பார்த்தேன்.இசைஞியைப் பற்றி இசையைப்பற்றி அது சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் பற்றி பேசினால் நன்றாக இருந்திருக்கும். அதை விடுத்து எல்லோரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
    சிம்பனியைத்தவிர மற்ற எல்லாம் சொதப்பல்.

    ReplyDelete
  2. சீனக்கவிதையும் படித்தேன். நன்றி

    ReplyDelete
  3. என் பதிவில் இசைஞானி என்று இருக்க வேண்டும்.

    ReplyDelete
  4. இளையராஜாவின் ஆரம்பகாலப் பாடல்களை உத்தம பாளையம் ஞானாம்பாள் லாட்ஜ்க்கு கீழே உள்ள டீக்கடையில் நிதானமாக ரசித்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். அற்புதமான நாட்கள்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...