நேற்று (14.3.2026) மாலை செளந்தரராஜன் உயிர் பிரிந்தது. நட்புக்கு வயது உண்டா? அப்படி என்றால் நாற்பத்து மூன்று ஆண்டுகள் என்று சொல்லலாம். மரத்திலிருந்து இலை உதிர்வது போல ஒவ்வொருவராக நீங்குகிறார்கள்.
மூன்று நாட்களுக்கு முன்னால் என்னோடு பேசினார். சுகுமாரன் எழுதிய பெருவலி என்ற நாவலைப் பற்றி சொன்னார். வாசிப்பும் இலக்கியமும் ரசனையும் தானே எங்களை இணைக்கும் புள்ளிகளாக இருந்தன?
செளந்தர் புத்தகங்களை விரும்புபவர். விரும்பி வாசிப்பவர். வாசித்த புத்தகங்களைப் சேகரித்து வைப்பவர். சேகரித்த புத்தகங்களைத் தொட்டு உணர்ந்து மகிழ்பவர். ஆயிரக் கணக்கில் புத்தகங்கள் அவரது சேமிப்பில் உண்டு. அத்தனையும் படிக்கப்பட்டு அவருக்குப் பிரியமான பகுதிகளில் பென்சிலால் அடிக்கோடு இடப்பட்டிருக்கும்.
காலை பெங்களூர் விமான நிலையத்தில் ஸோனாவைப் பார்த்தேன். கோவை செல்வதற்கு Lay over ல் இருந்தாள். எனக்கும் அதே விமானம் தான். திகைப்பு பயம் சோகம் எல்லாம் அவள் முகத்தில் எழுதப் பட்டிருந்தது. பேசுவதற்கு வார்த்தை இல்லை. கண்களில் நீர் அரும்பியது. மெளனமான அசைவுகள் சோகத்தைப் பரிமாறிக் கொள்ள போதுமானதாக இருந்தன. ஸோனா செளந்தரின் ஒரே மகள்.
ஓரே விமானம். வேறு வேறு இருக்கைகள். எனக்கு அருகில் வர்ஷா. அவரவர் நினைவுகள்.
காலையில் செளந்தர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். குளிர் பெட்டிக் கண்ணாடிக்குள் செளந்தரின் தோற்றம். அவரது தன்னம்பிக்கையும் சுயமதிப்பும் அங்கே வீழ்த்தப் பட்டிருந்தன. நெற்றியில் பட்டையாகத் திருநீறு. அவர் திருநீறு எல்லாம் அணிபவர் அல்ல.
நல்லாத் தானேங்க இருந்தாரு..நேத்திக் காலைல என் கூடப் பேசினாரே..
அண்டை வீட்டுக்காரர்கள் பிரலாபங்கள்.
கண்ணாடிப் பெட்டியில் கை வைத்து கண்ணீர் உகுத்தேன். அரை மணிக்கு மேல் அங்கே அமர்ந்திருந்தேன். பின்பு இறுதியாக ஒரு முறை அமைதி ததும்பும் அந்த முகத்தைப் பார்த்தேன். கிளம்பி விட்டேன்.
எய்த்தார் எய்த்தார் என்று இல்லத்தாரும் புறத்தாரும் மொய்த்து ஆங்கலறி முயங்கத் தான் போகும் போது உன்மத்தர் போல் பித்தேயேறி அனுராகம் பொழியும் போது… என்ற திருவாய்மொழி மனதில் ஓடியது.
நீரில் குளித்தேன். நினைப்பு ஒழியவில்லை. அது ஒழியாது.
காலையில் சொளந்தரின் மறைவு குறித்து எனக்கு தகவல் வந்தபோது சற்று நிலைகுழைந்தேன். மேற்படி இரங்கல் பதிவைப் பார்த்தபின் சோகம் அதிகமானது. அவருடன் பேசிய நாட்கள் நிழலாடுகின்றன. அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்திக்கிறேன்
ReplyDeleteநிழலாடும் நாட்கள் மறைவதில்லை. நெஞ்சத்துள் நினைவெல்லாம் மறப்பதில்லை
ReplyDeleteபுகையோடும் முகில் கூட்டம் மூடுவதில்லை. புதிரான வாழ்வு ஒன்றும் புரிவதில்லை
ReplyDeleteகவித்துவமாக நிறையத் தோன்றுகிறது. நீர்க்குமிழிகள் போல உடைந்து விடுகிறது
ReplyDelete