கையிலிருந்த ரோஜாவை அவள் கூந்தலில் சூட்டிய பின், ஒரு விநாடி அமைதியாக அவள் முகத்தையும், மலர் சூடிய கூந்தலின் அழகையும் பார்த்தான்; தொடர்ந்துசொன்னான் அவன்; “இதோ இந்தப் பூ, செடியிலே இருக்கறப்போ நல்லாத்தான் இருந்தது. இது நல்லா இருக்கே பறிக்காம இருப்போம்னு விட்டுட்டா, அது உதிராம இருக்கப் போகுதா? இப்ப நான் அதைப் பறிச்சு உன் தலையிலே வெச்சிருக்கேன்…நீ அதைப் பறிச்சி உனக்கு இஷ்டமான ஒரு தெய்வத்துக்கு மாலை கட்டிப் போடறே… அதிலேதான் அந்தப் பூவுக்கு… உதிர்ந்து போகிற சாதாரணப் பூவுக்கு ஒரு மகத்தான அர்த்தம் இருக்கு… இல்லியா?… அது மாதிரிதான், மனுஷன்னு பொறந்தா..பூத்திருக்கிற மலர் உதிர்ந்து போகிற மாதிரி… மனுஷனும் ஒரு நாளைக்கு செத்துத்தான் போவான்… அப்படி விதி முடிஞ்சி, வியாதி வந்து சாகிற மனுஷன் அந்த உயிரை, தான் நேசிக்கிற தேசத்துக்காக, தான் விரும்பும் ஒரு லட்சியத்துக்காக அர்ப்பணம் பண்ணினா, அவன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கு இல்லியா? பெண்ணின் கூந்தலை அலங்கரிக்கும் பூவைப்போல, புனிதமான தெய்வத்துக்கு அர்ச்சிக்கப்பட்ட மலரைப் போல… கௌரி, பூ…உதிரும்…மனுஷனும் சாவான்…” என்று அவன் சொல்லிக்கொண்டே இருக்கையில், தானும் தன் எதிரே நிற்கும் கணவனும், தங்களைச் சுற்றிலும் பூத்துச் சிரிக்கும் மலர்களும்… எல்லாமே ஒவ்வொரு சோகமாய் அவள் நெஞ்சில் கனத்தன…
கௌரியின் கண்கள் கலங்குவதையும் உதடுகள் சிவந்து துடிப்பதையும் கண்ட சோமநாதன் ‘பூ-உதிரும்’ என்பது மட்டுமல்ல; புதிய புதிய பூக்கள் மலரும் என்பதும் உண்மை என்று கூறிவிட்டுப் பேச்சை வேறு விஷயங்களில் திருப்பினான்.
ஜெயகாந்தன் எழுதிய பூ உதிரும் என்ற கதையில் பட்டாளத்துக்காரனான சோமுவுக்கும் அவனுடைய மனைவி கெளரிக்கும் நடக்கும் உரையாடல் அது.
கோவாவில் போர்த்துகீசிய அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி நடந்த காலமது. இந்தியா தலையிட்டு கோவாவை இணைத்துக் கொண்டது. பின்பு சீனப் போர். இந்தப் பிண்ணனியில் 1960-1962 காலகட்டத்தில் இந்தக் கதை எழுதப் பட்டிருக்கலாம்.
கெளரிக்கும் சோமுவிற்கும் திருமணம். இரண்டு மாதங்கள். ஒரு மணி நேரம் கூடப் பிரியாமல் இருக்கிறான். லீவு முடிந்து புறப்படுகிறான். அடுத்த முறை லீவுக்கு வரும் போது அழைத்துச் செல்வதாகச் சொல்கிறான். பதினைந்து நாள் சென்ற பின் அவனிடமிருந்து கடிதம் வருகிறது.
ஜெயகாந்தன் எழுதுவதைப் பாருங்கள்.
தனது தனியறையின் ஏகாந்தத்தில்…. அவனே வந்து எட்டிப் பார்ப்பது போல், ஜன்னலருகே வளைந்திருக்கும் சண்பக மரக் கிளையில் பூத்துச் சிரிக்கும் மலர்களுக்கு அந்தக் கடிதத்தில் இருந்த ரகசியங்களைப் படித்துக் காட்டிக் கொண்டிருந்தாள் கௌரி.
சண்பகத்துக்குப் பக்கத்தில், மலர்ச்சியின் ரகசியத்தை மறைத்துக் கொண்டு,….முற்றாக மறைக்க முடியாமல்…. தாங்கொணாத் தவிப்புடன், கனத்துக் கிடக்கும் மொட்டுக்களைத் தாங்கி நிற்கும் ரோஜாவைப் பார்த்து அவள் சிரிக்கும் போது ‘உன் கதை இன்னும் ஒரு மாதத்தில் தெரியும்? என்று ‘பளீரெனச் சிரித்துச் சிதறிய முல்லைக் கொடியிலிருந்து பூக்கள் உதிர்ந்த ரகசியம் அவளுக்கு அப்போது புரியவில்லை.
இரண்டு மாதங்களுக்குப் பின், சண்பகத்தையும் ரோஜாவையும் மடி கனக்கக் கட்டிக்கொண்டிருக்கும் உணர்வுடன் மனமும் உடலும் கூசிச் சிலிர்க்க அந்த விஷயத்தை அவனுக்கு அவள் எழுதும்போது…..
எப்ப வருவீங்க என்ற அவளது இதயத் துடிப்புக்கு சோமுவிடமிருந்து பதில் வருகிறது. ஏழாவது மாதப் பூச்சூட்டலுக்கு மூன்று மாத விடுப்பில் வருவதாக எழுதுகிறான். வரவில்லை. எல்லையில் பதற்றமே காரணம். அப்பாவுக்கும் கெளரிக்கும் தனித்தனியாக கடிதம் எழுதுகிறான். பூச்சூட்டலை அவன் இல்லாமலே நடத்திக் கொள்ளுமாறு சொல்கிறான்.
கெளரிக்கு எழுதிய கடிதம்
பொய்மை கலந்த குதூகலத்தோடும், தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் விதத்தில் உற்சாகம் மிகுந்திருப்பது போல் காட்டிக் கொள்ளும் வகையிலும் எழுதப் பட்டிருந்ததால்–சிற்சில இடங்களில் ‘விரசம்’ போலும் வெறியுற்றது போலும் அமைந்திருந்தது.
நீள நீளமாக வார்த்தைகளைக் கோர்த்து கோர்த்து எழுதும் ஜெயகாந்தனின் எழுத்து நடை. சில இடங்களை வாய் விட்டு உரக்கப் படித்துப் பார்த்தேன். அது ஒரு சுகமான அனுபவம். பாடும் போது மூச்சை எந்த இடத்தில் நிறுத்துவது என்பதற்கு ஒரு பயிற்சி வேண்டும். உரக்கப் படிக்கும் போது வரிகள் தந்த உணர்ச்சியில் எங்கே மூச்சை நிறுத்த வேண்டும் என்பது மறந்து போனது. வெள்ளப் பெருக்கு கல்லும் மணலும் புரட்டிக் கொணர்வது போல் ஜெயகாந்தனின் எழுத்து வேகத்தில் சொல்லும் பொருளும் மனதில் புரண்டு வந்தது.
உணர்ச்சிகரமான இந்தக் கதையின் முடிவு என்னவென்று சொல்லத் தேவையில்லை.
'பூ உதிரும்' - நான் படித்ததில்லை. இந்த எழுத்துக் குறிப்பு கண்ணதாசனின் பாடல் வரிகளை நினைவூட்டுகின்றது -
ReplyDelete"இந்த மானிடக் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்"
-சீனு
சீனு, google playa ல ஜெயகாந்தன் சிறுகதைகள் இருக்கு. நீ அங்க படிக்கலாம்.
Deleteமறுபடி படித்தேன். தி ஜா வையும் ஜெயகாந்தனையும் யாராவது நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இருவருடைய எழுத்தும் பொக்கிஷம்.
ReplyDeleteநினைவில் எப்பொழுதும் கொள்ளத் தக்கதாக அவர்களுடைய எழுத்து இருப்பதால்
DeleteBeautifully written. Appreciating art is an art in itself.
ReplyDeleteThank you
Delete