Skip to main content

வாடிய ரோஜா மலர்ந்த போது

எனக்கு சத்யஜித் ரேயின் படங்கள் பிடிக்கும். அநேகமாக அவரது எல்லாப் படங்களும் பார்த்திருக்கிறேன். சத்யஜித் ரேக்கு நேருவைப் பிடிக்கும். அவர் நேருவைப் பற்றிச் சொல்வார்.




"நான் நேருவுக்கு மிக நெருக்கமாகவே உணருகிறேன். எனக்கு நேருவை ரொம்பப் பிடிக்கும். நான் அவரை நன்கு புரிந்து கொண்டேன். நானும் ஒரு விதத்தில் கிழக்கும் மேற்கும் சேர்ந்த கலவை தான். சுதந்திரப் போக்கு, மேற்கத்திய மதிப்பீடுகளின் மீது ஒரு புரிதல், கீழை மற்றும் மேலை மதிப்பீடுகளின் சேர்க்கை நேருவிடம் இருந்தது. அது காந்தியிடம் இல்லை. ஆனால் ஒரு மனிதனாக, ஒரு குறியீடாக, பல்லாயிரம் பேரை காந்தி தொட்டு அடைந்தது அசாதாரணமான ஒன்று. ஆனால் ஒரு மனிதனாக நேரு என்ன செய்கிறார் என்பது எனக்குப் புரிந்தது. எப்போதும். தாகூரைப் புரிந்தது போல. இந்த முக்கோணத்தில் தாகூரை விட்டு விட முடியாது."


உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? சத்யஜித் ரே Sight and sound என்ற பத்திரிக்கைக்கு 1970 ம் வருடம் கொடுத்த பேட்டியில் இவ்வாறு சொன்னார் என்று Mainstream என்ற பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தார்கள். ஐ.ஏ.எஸ் பரீட்சைக்கு படிப்பவர்கள் அப்போது எல்லாம் Mainstream படிப்பார்கள். நான் ஐ.ஏ.எஸ் பரீட்சைக்குப் படித்தவன் அல்ல. அரசியல் அறிவு வேண்டி அதைப் படித்தேன். அரசியல், இலக்கியம், தத்துவம் என்று பேச நண்பர்கள் குறைவாகவே இருந்தார்கள். அவர்களோடு செலவிட்ட நேரமும் குறைவு. ஆனால் அறிந்தது அதிகம்.



சத்யஜித் ரே நேருவை விரும்பியிருக்கிறார். பலரும் விரும்பி இருக்கிறார்கள். விமர்சித்து இருக்கிறார்கள். அவரோடு விவாதித்து இருக்கிறார்கள். யாரும் அவரை வெறுத்தது இல்லை. 


கேட்டும் படித்தும் அறியாத காலத்திலே நான் நேருவைப் பார்த்தேன். ஆறு வயது. தெரு முனையில் நேரு வந்தார். மாலை நேரம். திறந்த ஜீப்பில் வந்தார். முன்னேயும் பின்னேயும் ஒலி செய்தபடி பறக்கும் வாகனங்கள் இல்லை. சாதாரணமான வேகத்தில் அந்த ஜீப் வந்தது. கடந்தும் போய் விட்டது. நான் பார்த்த நேரு களைத்து இருந்தார். ரோஜா போன்ற நிறம். சற்றே வாடிய ரோஜா. குழந்தைகளான எங்களைக் கண்ட உடன் அந்த வாடிய ரோஜா மலர்ந்து சிரித்தது. கைகளை அசைத்து மகிழ்ச்சியைத் சொன்னது. காட்சியிலிருந்து மறைந்து போனது. நேரு மாமாவை பிடித்துப் போயிற்று. பார்த்தவுடனே ஏற்படும் பிடித்தம். சிலரோடு தான் அது நிகழும்.


நேரு தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு மெய்யானவராக இருந்தார். ஏற்றுக் கொண்ட தலைவருக்கு உண்மையானவராக இருந்தார். அவரை வியந்து ரசிப்பவராக இருந்தார். அவரோடு முரண்பட்டு தவிப்பவராகவும் இருந்தார். 


அவர் சிறப்பாக எழுதினார். பொங்கும் உணர்ச்சியில் அவருடைய வார்த்தைகள் அழகாகப் பெருகி ஓடியது. அதில் எப்போதும் ஒரு நேர்மை இருந்தது. யாருக்கு எழுதினாலும். ஒரு கவிஞனின் உள்ளம் அவரிடம் இருந்தது. அவர் மண்ணையும் மக்களையும் உண்மையாக நேசித்தார். அன்பாகக் கடிந்து கொள்பவராகவும் இருந்தார்.


வசை பாடுவது அவருக்குத் தெரியாது. திறந்த உள்ளம் அவருடையது. விமர்சனங்களை நேர்கொண்டார்.


“வையத்தலைமை கொள்” என்றார் பாரதி. நேரு அவர் வாழும் காலத்தில் உலகம் மதிக்கும் தலைவராக இருந்தார். விடுதலைக்காக ஒலிக்கும் குரல் அது எந்த நாட்டுடையதாக இருந்தாலும் சேர்ந்து ஒலிக்கும் குரல் அவருடையதாக இருந்தது.


அவருடைய சாதனைகள் அதிகம். அதைப் பற்றி எவ்வித விளம்பரமோ பிரகடன முழக்கங்களோ அவர் செய்தது கிடையாது.


மாறாக I am after all a Prime Minister என்று சொல்லும் அடக்கம் அவரிடம் இருந்தது.


செய்து முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது… போக வேண்டிய தூரம் நீண்டு இருக்கிறது.. என்ற தெளிவு இறுதி வரை அவரிடம் இருந்தது.


மே 27 2026 நேருவின் அறுபத்தி இரண்டாவது நினைவு நாள்.

Comments

  1. 👌அருமை.
    சமீபகாலமாக நேருவை வசை பாடி, தங்களது தோல்விகளை மறைக்க முயற்சித்தவர்களையே பார்த்தவர்களுக்கு, இந்த அஞ்சலி சிறப்பு.
    நான் நிறைய நண்பர்களுக்கு இதை அனுப்பியுள்ளேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. I am proud to say that I am a fan of both Nehru and Ray .Beautifully written.

    ReplyDelete
    Replies
    1. Thank you Ram. If I remember correct you owned a copy of Our films, Their films by Satyajit Rai

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...