Skip to main content

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன்

நீரின் தூய்மை

கனியின் இனிமை

குளிர்ந்த காற்று

பயிரின் பசுமை

எல்லாம் நீயே 

தாயே உன்னை வணங்குகிறேன்


வெண்ணிற நிலவில்

சிலிர்க்கும் இரவு

மலரும் பூக்கள்

மரங்களின் அழகு

மென்னகை புரிவாய்

இன்சொல் அருள்வாய்

சுகமே தருவாய்

வரமே அருள்வாய்

தாயே உன்னை வணங்குகிறேன்


கோடி கோடி கண்டங்கள்

ஒலியின் ஆரவாரம்

கோடி கோடியாய்

கூர்வாள் ஏந்தும் கைகள்

அபலை என்று

யார் உன்னைச் சொல்வார்

பெருவலி கொண்டு

எமைக் காப்பவள் நீ

எதிரியின் படைகள்

பொடிப் பொடியாக்கும் 

தாயே உன்னை வணங்குகிறேன்


நீயே வித்தை

நீயே தருமம்

நீயே இதயம்

நீயே ஜீவன்

நீயே என் உயிர் மூச்சு

என் கரங்களின் சக்தி

இதயத்தில் பக்தி

கோயில் தோறும் 

விளங்கும் சிலை நீ

தாயே உன்னை வணங்குகிறேன்


பத்துக் கைகள் கொண்ட துர்க்கை

தாமரை மலரில் அருளும் இலக்குமி

ஞானம் வழங்கும் தெய்வ வாணி

நிகரில்லாத் தூய்மை

திகழும் செழுமை

போற்றினேன் உன்னை

தாமரை தன்னை


நீரின் தூய்மை

கனியின் இனிமை

தாயே உன்னை வணங்குகிறேன்


வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை படித்திருக்கிறேன். அதை உள்வாங்கிக் கொண்டு எளிமையான தமிழ் மொழியாக்கம் செய்தேன். அது தான் மேலே காண்பது.


வந்தே மாதரம் வங்க மொழியில் காலையில் ரேடியோவில் ஒலிக்கும். ஒரு நிமிடம் ஒலிக்கும். சிறு வயதிலிருந்து கேட்டு மனதில் ஏறிய பாடல். பொருள் அறிந்தது இல்லை. வளர்ந்த பின் பாரதியைப் படித்த பின் ஒருவாறு பொருள் உணர முடிந்தது.

வந்தே மாதரம். சுதந்திரப் போராட்டத்தின் போது ஒலித்த எழுச்சி முழக்கம். எல்லாத் தரப்பினரையும் அது போராட்ட களத்துக்கு இழுத்து வந்தது. கப்பலோட்டிய தமிழன் என்ற திரைப்படத்தில் வ.உ.சி யாக நடித்த சிவாஜி கணேசனும் சுப்ரமணிய சிவாவாக நடித்த டி.கே.ஷண்முகமும் பெருங்குரல் எடுத்து இந்த கோஷத்தை முழங்குவார்கள். 

வந்தே மாதரம் முழங்க முழங்க அவர்கள் காவலரால் இழுத்துச் செல்லப்படுவார்கள்.சிறு வயதில் மனதில் பதிந்த உணர்ச்சிகரமான காட்சியது.

தாயென நாட்டை வணங்குவதும், தாயென மொழியைப் போற்றுவதும் அப்படி வணங்கிப் போற்றி உணர்ச்சியும் பெருமிதமும் கொள்வதும் இயல்பான ஒன்று.

வந்தே மாதரம் பாடலுக்கு மெட்டமைத்தது ரவீந்திரநாத் தாகூர். முதலாக அதைப் பொது வெளியில் பாடியதும் அவரே. வந்தே மாதரம் வெறும் கோஷம் அல்ல. மக்களின் உணர்வோடு கலந்த ஒன்று. அந்தப் பாடல் எல்லாத் தரப்பினரும் நெஞ்சில் கொள்ளும் ஓரு தேசியப் பாடலாக ஆனது. ஆனால் பாடலின் நான்கு ஐந்தாம் பத்திகள் உருவ வழிபாட்டை சொல்வதாக இருந்தது. ரவீந்திர நாத் தாகூர் பிரம்ம சமாஜ மரபைச் சார்ந்தவர். உருவ வழிபாட்டை ஏற்றுக் கொண்டவர் அல்லர். அதே போலவே உருவ வழிபாட்டை ஏற்காத பிரிவினர் நாட்டில் இருந்தனர். தேசப் பற்று கொண்ட எல்லோரும் பாடும் விதமாக முதல் இரண்டு பத்திகளை மட்டும் பாடுவது சரியாக இருக்கும் என்று தாகூர் கருதினார். அவரது கருத்து அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.

வானொலியில் கேட்டுப் பழகி மனதில் பதிந்த இரண்டு பத்திகளே இன்றளவும் நினைவில் இருக்கிறது.

தமிழில் மொழியாக்கம் செய்து பார்த்த போது முதல் இரண்டு பத்திகளை ஏற்றுக் கொண்ட தாகூரின் கவி உள்ளம் புரிந்தது. 


Comments

  1. 👌 எளிய மொழி பெயர்ப்பு.
    வந்தே மாதரம் குறிப்பு அருமை.

    ReplyDelete
  2. அருமையான மொழி பெயர்ப்பு. இதுவரை தெரிந்து கொண்டதில்லை. வாழ்த்துக்கள் சந்தானம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...