Skip to main content

விண்ணானாய் கண்ணா

 




நம்மாழ்வாரின் திருவிருத்தத்தைப் படித்துக் கொண்டிருந்தேன்- இந்தப் பாசுரம் என்னைக் கவர்ந்தது.


பலபல ஊழிகள் ஆயிடும் அன்றிஓர் நாழிகையைப்

பலபலகூறிட்ட கூறாயிடும் கண்ணன் விண்ணனையாய்

பலபல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்

பலபல சூழல் உடைத்து,அம்ம! வாழிஇப் பாய் இருளே


என்ன சொல்கிறார்? பொருள் கொள்ள வேண்டுமே.

இப்படி எழுதிப் பார்க்கலாம்.


கண்ணா!

விண்ணைப் போன்றவனே!

பலபல ஊழிகள் ஆகின்றன

ஒரு நாழிகை பலபல கூறு ஆகிறது

பின்னும் அது பல பல கூறிட்ட கூறாகிறது

பல நாட்கள் பல நாட்கள்

அன்பர் கூடுகிறார்

பிரிகிறார்

நான் மெலிகிறேன்

பலபல சூழ்நிலைகள்

பாய்கின்ற இருளே!

நீ வாழ்க!


நம்மாழ்வார் கண்ணனை இப்படி உணருகிறார்.

பாரதிக்கு கண்ணன் எப்படி அனுபவமாகிறான்

பார்க்கலாமா?


மாலைப் பொழுது. வானையும் கடலையும் பார்த்தபடி இருக்கிறார்

பாரதி. நேரம் போவதே தெரியவில்லை. பின்னால் ஆள் வந்து கண்ணை

மறைப்பதை உணருகிறார்.யாரது? கண்ணன்தான் பெண்ணுருவில் கண்ணன் கேட்கிறான்

“என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?

நீலமான ஆகாயத்தில், கடல் நுரையில்,

சின்னக்குமிழ்களில்,

என்னதான் பார்க்கிறாய்?”


பாரதி பதில் சொல்கிறார்.


“தெரித்த திரைக்கடலில் நின்முகம் கண்டேன்

நீல விசும்பினிடை நின்முகம் கண்டேன்

சின்னக்குமிழிகளில் நின்முகம் கண்டேன்

பிரித்துப் பிரித்து மேக மளந்தே

பெற்றது உன் முகமன்றிப் பிறிதொன்றில்லை”


நம்மாழ்வாருக்கு விண்ணாய் இருளாய் கண்ணன் ஆகின்றான். பாரதிக்கோ

கடலாய் கடலின் நுரையாய் சின்னக் குமிழிகளாய்த் தோற்றம்

 கொள்கிறான்.


பக்தியின் பான்மை இதுதான் அல்லவா?


தி சந்தானம்


Comments

  1. சூப்பர். எங்கும் வியாபித்திருக்கும் கண்ணன், எதோ ஒரு வகையில் ஒவ்வொருவருக்கும் ஓர் உருவில் தோன்றுகிறான். நகரும் மேகங்களில், யாகக் கொழுந்தில், காரை உதிர்ந்த சுவற்றில் என. அவனயே எண்ணும் போது அவனே அனைத்திலும் தெரிகிறான்.

    ReplyDelete
  2. கவிதை நயம் இசைந்து ஓடுகிறது

    ReplyDelete
  3. பக்தியோடு எப்படி பார்க்கிறோமோ அப்படி கண்ணன் தெரிகிறான். எழுத்தில் காட்சி தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். பார்க்கும் மரங்கள் எல்லாம் கண்ணனின் பச்சை நிறம் பாரதிக்குத் தோன்றியது அல்லவா?

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...