“உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்”
சிறு வயதில் வானொலிப் பெட்டியில் ஒலித்த பாடல் நினைவுக்கு வருகிறது.
அந்த வயதில் இந்தப் பாடலைக் கேட்கும்பொது ஏனோ ஒரு பயம் தோன்றும்.
ரகசியம் என்றால் என்னவென்று அறியாத வயது. அதிலும் அந்த அடுத்த வரி-
“ஒருவரிடம் சொல்லி விடாதே” ஆணைகளைக் கேட்டே வளரும் பருவம்.
“சட்டைப் பொத்தானைப் போடு”, நகத்தைக் கடிக்காதே” சோற்றை சிந்தாதே”
இப்படி எல்லாம். ஆணைகளைக் கேட்டு பிள்ளை மனம் தயங்கிக் குழம்பும் காலம். சொல்லி விடாதே என்று பாடும் அக்காவின் குரல் கவலையோடு கூட ஒரு பொறுப்புணர்வையும் தந்து விடும்.
ரகசியங்கள் ரகசியங்களாகவே பெரும்பாலும் இருக்கின்றன. இருக்க வேண்டும். நெஞ்சோடு வைத்து நெருப்போடு போவதில்லை. ரகசியம் மிக அரிதாக பகிரவும் படுகிறது. அப்படிப் பகிர நேர்ந்தால் மிக நெருக்கம் என்று நினைக்கும் ஓரிருவருடனே மட்டும் பகிரப் படுகிறது. ரகசியங்கள் உடைக்கப்படலாகாது. பெரும் நம்பிக்கை கொண்டு நம்மிடம் ஒப்படைக்கப்படுபவை அல்லவா? அடைக்கலம் வந்த பறவை என்று நினைத்து இறுதி வரை காக்க வேண்டும். ரகசியங்கள் பாதுகாக்கப் படாவிட்டால் நட்புக்கும் நெருக்கத்திற்கும் அர்த்தம் தான் ஏது?
“இரு கோடுகள்” என்ற திரைப்படம் நினைவுக்கு வருகிறது. காசியில் தான் மணந்த தமிழ்ப் பெண் இறந்து விட்டாள் என்று மொழி புரியாமல் தவறாகப் புரிந்து கொள்கிறான் நாயகன். தென்னகம் வந்து வேறொரு பெண்ணை மணந்து கொள்கிறான். காலம் உருண்டோடுகிறது. இரண்டு குழந்தைகள். கலெக்டர் ஆபீஸில் வேலை. வாழ்க்கை சாதாரணமாகச் சென்று கொண்டிருக்கிறது.
ஒரு நாள் இவன் வேலை பார்க்கும் அலுவலத்திற்கே மாற்றலாகி வருகிறாள் அவன் முதல் மனைவி. அவள் கலெக்டர். இவன் தலைமை குமாஸ்தா. கலெக்டரின் உதவியாளர் இவனை அறிமுகப்படுத்தும் போது” இந்த அலுவலகத்தின் அதி முக்கியமான ரதசியமான கோப்புகளைப் பராமரிக்கிறார்”என்று கூறுகிறார். ஒரு வினாடி நாயகனை ஏறிட்டுப் பார்க்கிறாள் நாயகி. கடந்த காலம் இருவரின் கண்களில் நிழலாடி மறைகிறது. சுதாரித்தபடி நாயகி வாய் திறக்கிறாள். “ரகசியங்களைத் தொடர்ந்து காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்” நாயகன் மெளனமாகத் தலை அசைக்கிறான். சிக்கலான நிலைமை ஆரம்பமாகிறது. தடுமாற்றங்களும். நாயகனால் ரகசியத்தை எத்தனை நாள் காக்க முடியும்?
என்ன செய்வது? ரகசியம் ரகசியம் தானே? அதை ஒருவருக்கும் சொல்லிவிடக் கூடாது அல்லவா?
தி சந்தானம்

அருமை 👌🏻
ReplyDeleteஅச்சா😀😀
ReplyDeleteஅச்சா வேறு வேறாக ஒலிக்கும் ஜானகியிடமும் ஜயந்தியிடமும்
ReplyDeleteரகசியம் பரம ரகசியம்
ReplyDeleteஅப்படித்தானே
DeleteSabitha Srikanth
ReplyDeleteSabitha SrikanthVery very interesting. I liked the way of writing. பஹுத் அச்சா
ReplyDeleteThank you Ma
Delete