தொண்ணூறுகளில் லவ் பேர்ட்ஸ் என்று ஒரு திரைப்படம் வந்தது. உலகமயம்
தாராளமயம் என்று நாட்கள் மாறிக் கொண்டிருந்த நேரம். மாற்றங்கள். இசையில் ; இயக்கத்தில்.. மின்னணு வாத்தியங்களின் ஒலியில். இந்தப் படத்தில் “மலர்களே மலர்களே என்று ஒரு பாடல். இந்தப் பாடலில் சொற்ப வினாடி ஒரு காட்சி தோன்றி மறையும். நாயகன் புல் தரையில் கால் பதிப்பான். அவன் வைத்து எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் பூ மலரும். கிராபிக்ஸ்.
மன்னிக்கவும். நான் சொல்ல வந்தது கிராபிக்ஸ் பற்றியோ பிரபு தேவாவைப் பற்றியோ அல்ல.
திக் நியட் ஹன். என்பவரைப் பற்றி யார் இவர்? சொல்கிறேன். இவர் வியட்நாமைச் சேர்ந்த புத்தத் துறவி. புலம் பெயர்ந்து பிரான்ஸூக்குச் செல்கிறார். நடை தியானம் என்ற ஒன்றை பிரபலப்படுத்துகிறார். நடக்கும் போது ஒரு அரைப் புன்னகையுடன் நடக்க வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும் போதும் வெளிவிடும் போதும் அமைதியை உணர வேண்டும். மூச்சும் நடையும் ஒத்திசைவு கொள்ள வேண்டும். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் ஒரு பூ மலருவதாக கற்பனை செய்து கொள்ள வேண்டும். புத்தத் துறவிமார்களிடம் ஒரு பழக்கம் உண்டு. ஒவ்வொரு செய்கைக்கும் ஒரு சின்னக் கவிதை சொல்வார்கள்.
அதை “கதா” என்று சொல்வார்கள்.
நடையே தியானமாகும் பொழுது இப்படி ஒரு கவிதை.
1 காலடி
எண்ணம் செல்லும் ஆயிரம் திசையில்
எழிலான பாதையில் நடப்பேன் அமைதியில்
இட்ட அடி ஒவ்வொன்றிலும் மெல்லிய காற்றாக
எடுத்த அடி ஒவ்வொன்றிலும் ஒரு சிறிய மலராக
திக் நியட் ஹன் ஜென் குரு. அமைதிச் செயல்பாட்டாளர்.
ஒரு முறை நோபல் அமைதிப் பரிசுக்காக மார்ட்டின்
லூதர் கிங்கால் பரிந்துரைக்கப் பட்டவர். மேலும் கவிஞர்.
மாதிரிக்கு சில கவிதைகளைப் பார்ப்போம்
2 வெற்றுக் கால் தடங்கள்
பாதமும் பூமியும் தோடுகின்றன
ஒளி வீசும் சூரிய காந்திப் பூக்கள் கண்களை நிறைக்கின்றன
தொலைவில் இடி முழங்குகிறது.
வியர்வை கன்னங்களின் கீழே வழிகிறது
பிறப்பும் இறப்பும் ஆன உலகில் முழுதுமாகச் சேரும்
நம் கண்ணீர்த் துளிகள்
எல்லா உயிர்களுக்கும் ஊட்டம் சேர்க்கிறது
பிறப்பு இறப்பு எனும் உலகைக் கடந்து
வெற்றுக் காலடிகள்
எங்கோ செல்கிறது
3 மறு சுழற்சி
குப்பை ரோஜாவாக
ரோஜா உரமாக
எல்லாமே ஒர் மாறுதலில்
நிரந்தரம் கூட ஒரு நிரந்தரமின்மைதான்
இப்படி சின்னச் சின்னதாய் கவிதைகள் எழுதிப் போகிறார் திக் நியட் ஹன்.
உலகம் போற்றிய அந்த ஆன்மிக குரு தன் இறுதி நாட்களில் தான் விரட்டி
அடிக்கப்பட்ட வியட்நாமுக்கே திரும்புகிறார். எந்த ஆலயத்தில் முதன் முதலாகத் துறவறம் மேற்கொண்டாரோ அதே ஆலயத்திற்கு..எஞ்சிய நாட்கள
உலக அமைதிக்காகத் தியானம் செய்தபடியே இருப்பவராக.
தி சந்தானம்
அருமையான பதிவு
ReplyDeleteநன்றி ராம்.பகிர்கிறேன்.தொடர்ந்து
ReplyDeleteபடியுங்கள்
ஒரு நொடியில் கடந்து போகக் கூடிய திரைக் காட்சி, ஒரு அழகான பதிவைத் தந்திருக்கிறது. Thanks for sharing your knowledge and experience here santhanam. உன் கிட்ட நிறைய எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteநன்றி. தொடர்ந்து பதிவிட உத்தேசம்
Delete