பாரதி சுதேசமித்திரனில் எழுதிய கட்டுரைகள் செறிவானவை. எளிய நடை,கருத்துத் தெளிவு கூடி வந்தவை. பன்முகத் தன்மை வாயந்தவை. “ஹொக்கு” அதாவது ஹைக்கு(haiku) பற்றி “ஜப்பானியக் கவிதை என்ற தலைப்பில் எழுதுகிறார்- சிறிய வடிவம். பெரிய பொருள். சுருங்கச் சொல்லி விளக்குதல். அதுதான் ஹொக்கு. “மாடர்ன் ரிவ்யூ” என்ற பத்திரிகையில் நோகுச்சி என்ற ஜப்பானியக் கவிஞரின் கட்டுரை அடிப்படையில் இதை எழுதியிருக்கிறார்.
சொல் சிக்கனத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் மிஸ் ரீஸ் என்ற அமெரிக்கப்பெண் கவியின் பெயர் வருகிறது.
“ அமெரிக்காவில் மிஸ் ரீஸ் (Lizette Woodworth Reese) என்பதோர் கவிராணியிருக்கிறார். வேண்டாதவற்றைத் தள்ளி விடுவதில் அந்த மிஸ் ரீஸ் என்ற புலவர் பெயர் வாங்கியிருக்கிறார். அநாவசியமானப் பதச் சேர்க்கை,அநாவசியமான கருத்து விளக்கம் என்ற இரண்டுமில்லாமல் முத்துப் போலே பதங்கள் கோக்கும் நல்ல தொழிலாளியாகிய அக்கவிராணி இங்கிலீஷ் பாஷையில் எழுதியிருக்கும் அடிகள்...... “ என்று பாரதி எழுதிச் செல்கிறார்
மிஸ் ரீஸின் கவிதைகளில் எனது தேர்வாக இரண்டு கவிதைகள்.தமிழில் செய்தேன்.
1
நான் மகிழ்கிறேன்
நான் நானாக வாழ்வதற்கு
வானம் நீலம் தரிப்பதற்கு
கிராமத்துத் தெருக்களுக்கு
பனி மெல்லச் சொரிவதற்கு
வெயில் பின்பு மழை
மழை பின்பு வெயில்
இதுவே வாழ்வின் வழி
வினைகள் தீரும் வரை
தாழ்ந்தாலும் உயர்ந்தாலும்
நாம் செய்ய வேண்டியது
வானத்திற்கு மிக அருகில்
நாம் வளர்வதை உறுதி செய்வது
2
நான் நேசிக்கிறேன்...நினைவுகள்..
ஒரு சமயம் துயருற்ற நினைவுகள்..
இப்பொழுதும் நன்கு நினைவு கூரும் போது
துயரம் தருவதில்லை
இருள் சேர்த்த, ஏமாற்றம் தந்த எல்லாவற்றிலிருந்தும்
எனது உயிர் விடுதலை பெற்று
உயர்ந்து எழுகிறது
மென்மையான கணங்கள்
ஒரே கதையை மறுபடி சொல்கிறது.
கடல் ஒரே தெய்வீக ராகத்தை
இழைக்கிறது; இசைக்கிறது
எனது மேகங்கள் எல்லாப் புகழோடும்
கிளர்ந்து எழுகிறது.
நான் நேசிக்கிறேன்
இந்த உலகம் எனதாகிறது
தி சந்தானம்
அருமை.. சின்ன கல்லு பெத்த லாபம் (பஞ்சதந்திரம் டயலாக்) :)
ReplyDeleteநன்றி
Delete