நம்மாழ்வாரின் திருவாய் மொழி. இந்தப் பாசுரம் ஓரு தரிசனம்.
யானும் நீ தானே ஆவது மெய்யே
அருநரகு அவையும்நீ ஆனால்
வானுயர்ந்த இன்பம் எய்திலென்? மற்றை
நரகமே எய்திலென்? எனினும்
யானும் நீ தானாய்த் தெளிதொறும் நன்றும்
அஞ்சுவன் நரகம் நான் அடைதல்
வானுயர்இன்பம் மன்னி வீற்றிருந்தாய்
அருள் நின் தாள்களை எனக்கே
"அடியேன் சிறிய ஞானத்தன்" என்பார் நம்மாழ்வார். நாம் எம்மாத்திரம்?
ஒருவாறு பொருள்கொள்வோம்.காக்கை வாயிலும் கட்டுரை கொள்க.
நானும் நீ தான் என்பது உண்மை.
நரகமும் நீயே என்றால், வான் போல் உயர்ந்த இன்பம் அடைந்தால் என்ன?
நரகத்தை அடைந்தால் தான் என்ன?
என்றாலும் நானும் நீ என்ற தெளிவு வரும் வரை நரகம் அடைவதற்கு நான் பயப்படுவேன். வான் போன்ற இன்பத்தில் நிலை பெற்று வீற்றிரூப்பவனே!
உனது தாள்களை எனக்கு அருளுக!
தெளிவாகியது. இன்பம் வந்தால் என்ன? நரகமே அடைந்தால் என்ன?
எல்லாம் நீ என்னும்போது ஏது மயக்கம்? உனது தாள்களே போதும் பற்றிக் கொள்ள.
பக்தி துவளாது. யாவற்றிலும் பரமனைக் காணும்.
*********************************************
சாக்ரடீஸுக்கு விஷம் குடித்து சாக வேண்டும் என்று தண்டனை. முதியவர்.
த்த்துவ ஞானி. காவலாளி சொல்கிறான்.” உடனே குடிக்க வேண்டியதில்லை.
கொஞ்ச நேரம் வாழலாம் “ என்கிறான். சாக்ரடீஸ் சொல்கிறார். “கால தாமதம்
செய்யாதே. உடனே கொடுத்துவிடு. ஒருவேளை அதற்குள் இயற்கையாக நான்
இறந்துவிட்டால் கிரேக்கப் பெருமன்றம் தந்த தண்டனை நிறைவேறாது போய்
விடுமே?””. சாக்ரடீஸுக்கு ஹெம்லக் என்ற விஷம் தரப்படுகிறது. காவலாளியிடம் சாக்ரடீஸ் கேட்கிறார். “இதை எப்படி அருந்துவது? முறைகள்
என்ன?" காவலாளி சொல்கிறான் “விஷத்தை அருந்த வேண்டும். அருந்தியவுடன் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.. சிறிது நேரம் கழித்து கை கால்கள் மரத்துவிடும். உயிர் பிரிந்துவிடும்” சாக்ரடீஸ் கோப்பையை கைகளில் வாங்குகிறார். அவருடைய நண்பர் கேட்கிறார். இத்தனை திடமாக இருக்கிறீர்களே? மரணத்தைக் கண்டு பயமில்லையா? இதற்கு சாக்ரடீஸ் சொன்ன பதில் மகத்தானது. அவர் சொல்கிறார். “ நமது மரணத்திற்குப் பின் ஆத்மா எஞ்சுவதில்லை. அதுவும் இறந்துவிடும் என்கிறார்கள் நாத்திகர்கள்.. இது உண்மையானால் கவலைப்பட என்ன இருக்கிறது? ஆஸ்திகர்கள் “உடல்தான் இறக்கிறது. ஆத்மா இறக்காது. அதற்கு அழிவில்லை என்கிறார்கள். இது இப்படி என்றால் மரணத்தைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்?"
ஞானிகள் அப்படித்தான். அவர்களுக்கு எல்லாம் சமம்.
கீழே ஒரு காணொளி. சாக்ரடீஸ் பற்றிய நாடகம். ராஜா ராணி என்ற திரைப்படத்தில். என்ன குரல் வளம். என்ன உடல் மொழி. பாருங்கள்.
சாக்ரடீஸ் நாடகம் பார்த்தேன். என்ன ஒரு அழுத்தமான பேச்சு. திருவாய்மொழியும் சாக்ரடீஸ் கடைசிக்கால ஒப்புமையும் அருமை.
ReplyDeleteநன்றி ராம். நீங்கள் படித்து விட்டு எழுதுவது நாம் பேசிய அற்புதத் தருணங்களை நினைவுபடுத்துகிறது
Delete