“ஒருவர் மட்டும் திரும்பவில்லை” (And One did not return) என்று ஒரு சிறுகதை-
எழுதியவர் கே.ஏ.அப்பாஸ். டாக்டர் துவாரக்நாத் கோட்னீஸ் என்பவரைப்
பற்றியது- இந்தக் கதையை கே.ஏ.அப்பாஸ் சாந்தாராமிடம் கொடுத்தார்.சாந்தாராம் படத்தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர். நடிகரும் கூட. (தோ ஆன்கேன் பாரா ஹாத் நினைவுக்கு வருகிறதா?) அந்தக் கதையை திரைப்படமாக்க முடிவு செய்தார் சாந்தாராம்- படத்தின் பெயர் டாக்டர் கோட்னீஸ்கீ அமர் கஹானி”. அதாவது டாக்டர் கோட்னீஸின் அழியாச் சரிதம்.கே. ஏ.அப்பாஸ் திரைக்கதை எழுத வசந்த் தேசாய் இசை அமைத்த படம்.
டாக்டர் கோட்னீஸ் கீ அமர் கஹானி- இந்தப் படப் பெயரை நான் அறிந்தது
அம்மாவிடமிருந்து. தனக்கே உரிய ஹிந்தி உச்சரிப்பில் அதைச் சொல்வார். அப்போது அவர் முகம் பிரகாசமாக இருக்கும். ஆனால் படத்தின் கதையைச் சொன்னதில்லை. நானும் கேட்டுக் கொள்ளவில்லை.
1946ல் வெளிவந்த இப்படத்தை யூ டியூபில் பார்த்தேன். இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாக ஓடியது.டாக்டர் துவாரக் நாத் கோட்னீஸ் என்பவரின் உண்மைக் கதை. சிறு வயதில் சினிமா தியேட்டர்களில் பாட்டுப் புத்தகம் விற்பார்கள். பாடல்களுக்கு முன்னால் திரைப்படத்தின் கதைச் சுருக்கம் இருக்கும். அது மிகவும் சுவாரசியமாக இருக்கும். கதையின் பல்வேறு முடிச்சுகளையும் திருப்பங்களையும் கண் முன்னே நிறுத்தி விடுவார் அதைஎழுதியவர். பின்பு பல கேள்விகளை எழுப்பிவிட்டு மிகுதியை வெள்ளித் திரையில் காண்க என்று முடித்து விடுவார். அவரே சிறந்த எழுத்தாளர் என்று தோன்றும்.
சரி. டாக்டர் கோட்னீஸின் கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
கோட்னீஸ் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு தன்னுடைய கிராமத்திற்கு
வருகிறார். அவருடைய தந்தை கிராம மக்களுக்குச் சேவை செய்யும் விதமாக
ஒரு ஆஸ்பத்திரியைக் கட்டி வைத்திருக்கிறார். ஆனால் கோட்னீஸுக்கு வேறு
பணி காத்திருப்பதைச் சொல்கிறார். அது இரண்டாம் உலகப் போர்க்காலம்.
சீனத்தில் ஜப்பான் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது. காயமுற்றவர்கள் சிகிச்சை பெற ஒரு மருத்துவக்குழு இந்தியாவிலிருந்து செல்கிறது. அதில் ஒருவராக கோட்னீஸ் செல்ல வேண்டும். இதைக் கேட்டவுடன்
தந்தைக்கு அதிர்ச்சி. இருந்தாலும் மகனுடைய நல்ல நோக்கத்தைப் புரிந்து
கொண்டு சம்மதிக்கிறார். கோட்னீஸ் சீனாவுக்குக் கப்பலில் பயணப்படுகிறார்.
சீனாவின் வடக்குப் பகுதி. சன்கிங் மாநிலத்திற்கு வந்து சேருகிறது மருத்துவக்
குழு. கடுமையான குண்டுப் பொழிவுக்கு நடுவில் பணி. காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவம். படு காயம் அடைந்தவர்களுக்கு அறுவை சிகிச்சை. வசதியோ குறைவு. ஆனால் கொண்ட லட்சியம் பெரிது. குறுகிய காலத்திலேயே டாக்டர் கோட்னீஸ் அனைவரின் அன்பிற்கும் பாத்திரமாகி விடுகிறார். ஒரு கட்டத்தில் மற்ற மருத்துவர்கள் தாயகம் திரும்பபி விடுவார்கள். ஆனால்கோட்னீஸ் தன் பணியைத் தொடருகிறார் ஜெனரல் பாங்( Fang) என்பவரின் படையோடு டாக்டர் கோட்னீஸ் இணைக்கப்படுகிறார். அவருக்கு உதவியாளர் பெண்மையின் சாயலோடு இருக்கிறார். உண்மையில் அவர் பெண்தான் என்று ஒரு கட்டத்தில் தெரிந்து விடுகிறது. நான்கின் படுகொலையில் அவருடைய குடும்பம் மொத்தமும் கொலையுண்டு விடுகிறது. இவர் ஒரு மருத்துவ மாணவி. ஆண் வேடமிட்டு அலைகிறார். பல கஷ்டங்களுக்குப் பிறகு மருத்துவ உதவியாளராக வந்து சேருகிறார். அவருடைய பெயர் சிங் லான். கோட்னீஸ் அவருடைய கதையைக் கேட்டு
மனம் கசிகிறார். ஆதரவாகப் பேசுகிறார். கடுங்குளிரின் நடுவே இளவெயில்
தோன்றுவது போல காதல் நேருகிறது அவர்களிடையே. பின்பு அவர்கள் மணம்
புரிகின்றனர். இணைந்து மருத்துவப் பணியைத் தொடருகின்றனர்.
பிளேக் நோய் தீவிரமாகப் பரவுகிறது. மக்களைக் காக்க கோட்னீஸின் மனம்
பதைக்கிறது. பாதிக்கப்பட்ட நோயாளியின் உடலிருந்து கிருமியைத் தன்
உடம்பில் செலுத்திக் கொண்டு தக்க மருந்தையும் கண்டுபிடிக்கிறார் கோட்னீஸ். பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. இடையில் அவர்களுக்கு
ஆண் குழந்தை பிறக்கிறது. ஒரு கட்டத்தில் டாக்டர் கோட்னீஸ் 72 மணி நேரம்
கண் உறக்கமின்றி குண்டுக் காயம் பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்த
வண்ணம் இருக்கிறார். அவருக்கு வலிப்பு நோய் கண்டுவிடுகிறது. ஆனால்
பணி தொடர்ந்தபடியே இருக்கிறது.
இந்தியா மீது ஜப்பான் தாக்குதல் நடத்தப் போவதாகச் செய்தி வருகிறது.
கோட்னீஸ் மனைவி குழந்தையுடன் தாயகம் திரும்ப எண்ணுகிறார்.
உடல் நலம் குன்றுகிறது. தாய் மண்ணை நினைத்தபடியே உயிர் துறக்கிறார்.
மனைவியும் குழந்தையும் இந்தியாவில் கோட்னீஸின் கிராமத்துக்குத் திரும்புகின்றனர். கதை முடிகிறது.
படம் பார்த்து முடித்தவுடன் மனம் கனத்துப் போயிருந்தது. சாந்தாராம்
கோட்னீஸாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சிங் லான்
பாத்திரம் ஏற்ற ஜெயஶ்ரீயும் அழகாக நடித்திருப்பார். தொழில் நுட்ப வசதிகள்
அதிகம் இல்லாத காலம். பெரும்பாலும் செட் போட்டுதான் எடுத்திருக்கிறார்கள்.
ஆனால் ஒளியமைப்பு மற்றும் காமிரா கோணங்கள் பிரமிக்க வைக்கின்றன.மேலும் வசந்த் தேசாயின் இசை. மெய் மறக்க வைக்கிறது. சில இடங்களில் சீன இசைக்கருவிகளையே உபயோகித்து இருக்கிறார்.
இந்தப் படம் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பெருமை பெற்றிருக்கிறது.
நாடுகள் எல்லைகளால் பிரிந்து இருக்கின்றன. ஆனால் அன்பும் கரிசனமும்
சேவை உணர்ச்சியும் எல்லைகளைக் கடந்து விரிகின்றன. “உலகம் தழீஇய
தொட்பம் “ என்று வள்ளுவர் சொல்லவில்லையா?
அம்மா இந்தக் கதையைச் சொல்லவில்லை. நான் தான் தேடி அறிய நேர்ந்தது.
அம்மா சோல்லியிருக்கலாம். நதி ஓட்டம் கூழாங்கல்லோடு பேசுவது போல்
பேசுபவராயிற்றே? அப்பா சொல்லியிருக்க வாய்ப்பில்லை.அவர் பாறை
போல் இறுகிய மெளனம் கொண்டவர். அப்பாவும் அம்மாவும் திருமணம் முடிந்தபின் பார்த்த முதல் படம் இதுதானாம்.இதை மட்டும் அம்மா சொன்னார்கள்-
.
அருமையான கதை. படித்தபின் ஒரு கனத்த இதயம். அம்மா அப்பா பார்த்தது என்பது சற்று விஷேஷமானது. பழைய படத்தை கண் முன் கொண்டு நிறுத்தியதிற்கு நன்றி.
ReplyDeleteநன்றி ராம். மனிதர்கள் எத்தனை நலலவர்களாக இருந்திருக்கிறார்கள்.
Deleteநல்ல லட்சியங்களுக்காக வாழ்ந்திருக்கிறார்கள்.
எண்ணும் போது மெய்சிலிர்க்கிறது
//நதி ஓட்டம் கூழாங்கல்லோடு பேசுவது போல்
ReplyDeleteபேசுபவராயிற்றே? // எவ்ளவ் அழகா எழுதிருக்க?
நன்றி படிப்பதற்கும் ரசிப்பதற்கும் பாராட்டுவதற்கும்
Delete