Skip to main content

இசை என்னும் மோகம்

 ஜீயெஸ் இப்பொழுது இல்லை. அவர் “அன்பு நண்பர் சந்தானத்துக்கு” என்று எழுதிக் கையொப்பமிட்டு ஒரு புத்தகத்தை என்னிடம் விட்டுச் சென்று விட்டார்.  அது “மோக முள்.” நல்ல பாடல்கள் மனதில் நிற்கிறது. ராகம் ஒரு ஓரத்தில் மெல்ல இழையோடுகிறது. புத்தகங்களும் பாடல்களும் ஞாபகங்களைக் கொண்டு சேர்க்கின்றன.  மோக முள் புத்தகத்தைப் பிரித்துப் பிரித்து விரல்களால் மெல்லத் தொட்டு உணருகிறேன். பல வருடங்கள் முன்னால் படித்த புத்தகம். பாபுவும் ராஜமும் யமுனாவும் ஏதோ கதை மாந்தர்களைப் போலத் தோன்றுவதில்லை. நம்மோடு நெருக்கம் கொண்டு ஆதுரத்துடன் பேசிப் பழகியவர்களாகவே காண்கிறார்கள். 842 பக்கங்கள் கொண்ட நாவல்.

ஐந்திணைப் பதிப்பகம்.


இந்த நாவலில் பாபு சங்கீதம் பயில ரங்கண்ணாவிடம் செல்கிறான். மிகுந்த பிரயாசைக்குப் பிறகே சிட்சை பெற வாய்க்கிறது. பாபு இசை பயிலச் செல்கிறான். ரங்கண்ணா தம்புராவில் சுருதி  சேர்க்கிறார். ஜானகிராமன் இப்படி எழுதுகிறார்.






“ தம்புராவின் நாதம் அலை அலையாக எழுந்து, செவியையும் உள்ளத்தையும் நிரப்பிற்று.


அப்பழுக்கில்லாத நாதமாகக்  கூடம் முழுவதும் கமழ்ந்தது அது.

சுருதி பரிபூரணமாகச் சேர்ந்திருந்தது.  தீயும் சூடும் போல. இரவும் இருளும் போல, நிலவும் தண்மையும் போல, வைகறையும் தூய்மையும் போலச் சேர்ந்திருந்தது. மகாகவியின் சொற்களில் எழுதுவது போல சொல்லாத காந்தாரம் சேர்ந்து தொனித்தது.


புலன்களைக் கூட்டி , ஒருமுகப்படுத்திற்று அந்த நாதம்.  புறத்தின் நினைவை அகற்றி, உள்ளத்தை மீற முடியாமல் கவ்விச் சென்றது.உடலையும் உலகையும் விட்டுச் சென்ற நினைவும், புத்தியிலே ஒலியும் பாவுமான அனுபவத்தின் மேலமர்ந்து, மாயக் கம்பளத்தில் அமர்ந்தது போல் பறந்தது.  திக்கும் எல்லையும் அற்ற  பெருவெளியில் உலவுவது போன்றிருந்தது அந்த நாத உணர்வு. “


மொகமுள் திரைப்படமாகி வேறொரு உருவம் பூண்டது. படத்திற்கு இசை இளையராஜா. பின்னணி இசைக் கோவை பிரமிக்க வைக்கும். நுட்பமான உணர்வுகள் இசையில் இழைந்து வரும். இசை பாடும் பாடலிலா?  கேட்கும் ஒலிகளிலா?  இந்தக் காணொளியைப் பாருங்கள்; கேளுங்கள்.






தி சந்தானம்



Comments

  1. புத்தகம் ரொம்ப காலத்துக்கு முன் படித்தது. சினிமா வந்தது எனக்கு தெரியாது. காணொலி பார்த்தேன். ரசித்தேன். மிக நல்ல பதிவு.

    ReplyDelete
  2. இளையராஜா ஒரு முறை பாகவதரின் பாட்டும் நாயின் சத்தம் ஒன்று தான் என்று சொன்னதாக நினைவு அது இந்தப் படத்தின் போதுதான் என்று நினைக்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. கேட்கும் ஒலியில் எல்லாம் நின்றன் கீதம் இசைக்குதடா என்பார் பாரதி. எல்லாவற்றிலும் இசை இருக்கிறது

      Delete
  3. அந்த மராட்டி இசைக் குழு வரும்.பகுதியும் அருமையா இருக்கும். நான் படம் பார்க்கலை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...