ஜீயெஸ் இப்பொழுது இல்லை. அவர் “அன்பு நண்பர் சந்தானத்துக்கு” என்று எழுதிக் கையொப்பமிட்டு ஒரு புத்தகத்தை என்னிடம் விட்டுச் சென்று விட்டார். அது “மோக முள்.” நல்ல பாடல்கள் மனதில் நிற்கிறது. ராகம் ஒரு ஓரத்தில் மெல்ல இழையோடுகிறது. புத்தகங்களும் பாடல்களும் ஞாபகங்களைக் கொண்டு சேர்க்கின்றன. மோக முள் புத்தகத்தைப் பிரித்துப் பிரித்து விரல்களால் மெல்லத் தொட்டு உணருகிறேன். பல வருடங்கள் முன்னால் படித்த புத்தகம். பாபுவும் ராஜமும் யமுனாவும் ஏதோ கதை மாந்தர்களைப் போலத் தோன்றுவதில்லை. நம்மோடு நெருக்கம் கொண்டு ஆதுரத்துடன் பேசிப் பழகியவர்களாகவே காண்கிறார்கள். 842 பக்கங்கள் கொண்ட நாவல்.
ஐந்திணைப் பதிப்பகம்.
இந்த நாவலில் பாபு சங்கீதம் பயில ரங்கண்ணாவிடம் செல்கிறான். மிகுந்த பிரயாசைக்குப் பிறகே சிட்சை பெற வாய்க்கிறது. பாபு இசை பயிலச் செல்கிறான். ரங்கண்ணா தம்புராவில் சுருதி சேர்க்கிறார். ஜானகிராமன் இப்படி எழுதுகிறார்.
“ தம்புராவின் நாதம் அலை அலையாக எழுந்து, செவியையும் உள்ளத்தையும் நிரப்பிற்று.
அப்பழுக்கில்லாத நாதமாகக் கூடம் முழுவதும் கமழ்ந்தது அது.
சுருதி பரிபூரணமாகச் சேர்ந்திருந்தது. தீயும் சூடும் போல. இரவும் இருளும் போல, நிலவும் தண்மையும் போல, வைகறையும் தூய்மையும் போலச் சேர்ந்திருந்தது. மகாகவியின் சொற்களில் எழுதுவது போல சொல்லாத காந்தாரம் சேர்ந்து தொனித்தது.
புலன்களைக் கூட்டி , ஒருமுகப்படுத்திற்று அந்த நாதம். புறத்தின் நினைவை அகற்றி, உள்ளத்தை மீற முடியாமல் கவ்விச் சென்றது.உடலையும் உலகையும் விட்டுச் சென்ற நினைவும், புத்தியிலே ஒலியும் பாவுமான அனுபவத்தின் மேலமர்ந்து, மாயக் கம்பளத்தில் அமர்ந்தது போல் பறந்தது. திக்கும் எல்லையும் அற்ற பெருவெளியில் உலவுவது போன்றிருந்தது அந்த நாத உணர்வு. “
மொகமுள் திரைப்படமாகி வேறொரு உருவம் பூண்டது. படத்திற்கு இசை இளையராஜா. பின்னணி இசைக் கோவை பிரமிக்க வைக்கும். நுட்பமான உணர்வுகள் இசையில் இழைந்து வரும். இசை பாடும் பாடலிலா? கேட்கும் ஒலிகளிலா? இந்தக் காணொளியைப் பாருங்கள்; கேளுங்கள்.
தி சந்தானம்
புத்தகம் ரொம்ப காலத்துக்கு முன் படித்தது. சினிமா வந்தது எனக்கு தெரியாது. காணொலி பார்த்தேன். ரசித்தேன். மிக நல்ல பதிவு.
ReplyDeleteஇளையராஜா ஒரு முறை பாகவதரின் பாட்டும் நாயின் சத்தம் ஒன்று தான் என்று சொன்னதாக நினைவு அது இந்தப் படத்தின் போதுதான் என்று நினைக்கின்றேன்
ReplyDeleteகேட்கும் ஒலியில் எல்லாம் நின்றன் கீதம் இசைக்குதடா என்பார் பாரதி. எல்லாவற்றிலும் இசை இருக்கிறது
Deleteஅந்த மராட்டி இசைக் குழு வரும்.பகுதியும் அருமையா இருக்கும். நான் படம் பார்க்கலை.
ReplyDelete