அயன் பிளமிங் என்ற பெயரை நான் கேள்விப் பட்டபோது எனக்குப்பன்னிரண்டு வயது இருக்கும். “The Man with the golden gun” என்ற புத்தகம்கண்ணில் பட்டது. யார் வாங்கி வைத்தார்களோ தெரியவில்லை. பிரபலமான வார இதழ்களில் வந்திருந்த கதைகள் கல்கி நா.பா.,அகிலன், ஜெகசிற்பியன்,லட்சுமி, ராஜம் கிருஷ்ணன் இவர்கள் எழுதி பைண்டிங் தொகுப்பாக இருந்த தமிழ் கதைகள் மட்டும் தான் அப்போது படித்திருந்தேன். ஆங்கிலப் புத்தகம் படித்ததில்லை. இந்தப் புத்தகத்தை எடுத்தேன் படிப்பதற்காக. மேலட்டை வழுவழு என்றிருந்தது. பக்கங்கள் ஒரு வித பழுப்பு நிறம். டீ டிகாக்ஷனில் தோய்த்து எடுத்தது போல. எடுத்துப் படித்தேன். சரளமாகத் தமிழ் நாவலைப் போல் கடக்க முடியவில்லை. கதை உலகம் புதிதாக இருந்தது. சாகசங்கள் நிரம்பி இருந்தது. ஜேம்ஸ் பாண்ட் 007, வந்தியத் தேவன், இளங்குமரன் இவர்களிடமிருந்து மாறுபட்டிருந்தார். உடைவாளை உருவவில்லை. துப்பாக்கியை அதை எங்கு மறைத்திருப்பாரோ தெரியாது, எடுத்து நீட்டுகிறார். கதையின் துவக்கம் திருப்பம் இறுதி எல்லாம் சுத்தமாக நினைவில்லை. ஆனால் அந்த வாசிப்பு அனுபவம் புதிதாக இருந்தது. பிரமிப்பைத் தந்தது. ஆங்கிலப் புத்தகம் படித்து விட்டோம் என்று பெருமையாக இருந்தது.
இந்த அயன் பிளமிங் கதைகள் தான் ஜேம்ஸ் பாண்ட் படங்களாக சக்கை போடு போட்டன என்று பிற்பாடு தெரிந்தது. ஸீன் கானெரி தான் ஜேம்ஸ் பாண்ட். நல்ல
உயரம். உடற்கட்டு. பழுப்பு நிறக் கண்கள். ஆந்தையின் கண்ணுக்குள் தோன்றி ஒரு அனாயசமான நடை- பக்கவாட்டில். சரேலென துப்பாக்கியை எடுத்து திரை வழியாகச் சுடுவார். திரை முழுதும் செந்நிறம் பரவும். ஒரு பிரத்யேக இசை. ஜேம்ஸ் பாண்ட் வந்தாயிற்று. சாகசங்கள் ஆரம்பமாகின்றன. ரகசிய உளவாளி 007 ஆட்டம் ஆரம்பம். I am Bond ,James Bond என்று இவர் அறிமுகம் செய்து கொள்வது ஓரு அழகு. பெண்களைக் கண்டவுடன் காதல். விதம் விதமான உபகரணங்கள். வட்டமாக காந்தம் போன்ற ஓன்றை இரும்புப் பெட்டி மேல் பொருத்துவார். நாம் சுதாரிப்பதற்குள் நெருப்புப் பொறி சிதறும். இரும்புப் பெட்டியைத் திறந்து ரகசிய ஆவணத்தை எடுப்பார். கண்கள் நான்கு பக்கம் சுழலும். காகிதம் மேல் கோட்டின் உட்புறம் சென்று விடும்.
இவர் சிகரெட் புகைத்தால் கூட எதிராளி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சிகரெட்டில் இருந்து தோட்டா ஓசையின்றி கிளம்பும். தாக்கும். இவர் காதல் வார்த்தை பேசும் பெண்கள் மூலமே இவருக்கு ஆபத்து வந்து சேரும். ஆபத்து வந்த வேகத்திலேயே விலகி விடும். மரணத்தோடு விளையாடியபடியே இருப்பார். மயிரிழையில் உயிர் தப்புவார். இவர் இறந்து விட்டார் என்று எதிரிகள் நினைப்பார்கள். மீண்டு வந்து குட் ஈவினிங் என்பார். காரில் எதிரிகள் துரத்துவார்கள். இவர் ஓட்டும் கார் சாலையில் போகும். நதியில் மிதந்து செல்லும். எத்தனை எத்தனை திருப்பங்கள். எத்தனை எத்தனை சுவாரசியங்கள்.
ஸீன் கானரிக்குப் பிறகு பலர் ஜேம்ஸ் பாண்டாக நடித்து விட்டார்கள். ரோஜர்
மூர் என்று ஒருவர் நடித்தார். The Spy who loved me என்ற படம். பார்த்திருக்கிறேன். இன்றளவும் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் பிரமிப்பைத் தந்தபடியே இருக்கின்றன.
அயன் பிளமிங் பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். தங்க முலாம் பூசிய டைப்ரைட்டரை கதை எழுத பயன் படுத்தி இருக்கிறார். மொத்தம் பன்னிரண்டு நாவல்கள். முதலில் குறிப்பிட்ட "The Man with the golden gun"
அவர் இறந்த பின்பு 1964 ம் வருடம் பதிப்பைக் கண்டிருக்கிறது. நேர்த்தியாக உடுத்துவது இவருக்குப் பிடிக்கும். மேலும் உயர்ந்த வகை மது,சிகரெட் இவற்றில் தீவிர ஈடுபாடு. ஐம்பத்தாறு வயதில் மரணம் இவரை அழைத்துக் கொண்டது. ஹார்ட் அட்டாக்.” நீ இரண்டு முறை வாழ்கிறாய். ஒன்று பிறக்கும் போது. இன்னொன்று நீ மரணத்தை கண்ணோடு கண் பார்க்கும் போது”. இது பிளமிங் சொன்னது.
அயன் பிளமிங் மேலும் கூறுவார்.
" சாகசங்களை பெரிதும் விரும்பு. இல்லையென்றால் வாழ்க்கையில் உப்பு சப்பே இருக்காது." உண்மைதான். சாகசங்கள் செய்ய முடியாது. ஆனால் சாகசக் கதைகளை மனம் விரும்பும். இதில் ஆழமான உளவியல் இருக்கிறது.
தி சந்தானம்
அயன் பிளமிங் கேள்விப்பட்ட பெயர். கதைகள் படித்ததில்லை. ஸீன்கானரி ரோஜர் மூர் இருவரும் தற்போது உயிரோடு இல்லை. ஆனால் அவர்கள் நடித்த படம் பார்த்திருக்கிறேன். அவர்கள் படம் பார்ப்பது ஒரு கெத்து. அதன் பின் தென்னக ஜேம்ஸ்பாண்ட் படம். அவர்கள் நடிப்பு ஸ்டைலிஷாக இருக்கும்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
நன்றி ராம். தென்னக ஜேம்ஸ் பாண்டை மறக்க முடியுமா? பாளையம் தங்கவேல் தியேட்டரில் நான் பார்த்த முதல் படம் பழைய ஜேம்ஸ் பாண்ட் படம் தான்
Deleteதென்னக ஜே பா. யூ மீன் ஜெய்? தமிழ்லயும் நம்ம சிலபஸ் இல்லியே. :)
Deleteஜெய் தான். கன்னத்தில் துப்பாக்கியை உரசியபடி சிறிய கண்களால் குறி பார்க்கும் ஸ்டில் பிரபலம்.
Deleteமாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு. வேதாவின் இசை
எல்லார் ஜேம்ஸ்பாண்டிலும் சீன் கானரிக்கு தனி இடம் உண்டு அவருடைய கெத்து தனி கெத்து
ReplyDeleteகரெக்ட். சீன் கானரி மாதிரி வராது
Deleteஇது என் ஸிலபஸ்ல கிடையாது. :)
ReplyDeleteஸிலபஸ் மாறிப் போச்சு
Delete