Skip to main content

என்னைத் தெரியுமா

 ஜான்ஸி ராணி பூங்கா என்று மதுரையில் ஒரு இடம் உண்டு. மேல ஆவணி மூல வீதியும் நேதாஜி ரோடும் சந்திக்கும் இடத்தில் இருக்கிறது. அது பூங்காவாக இருந்ததும் உண்டு.  பின்னர் கார்கள் நிறுத்தும் இடமாக ஓரு புறமும் நவீனக் கழிப்பறையாக மறுபுறமும் ஆனது.  இப்போது ஸ்மார்ட் சிடி திட்டத்தில் அது ஜான்ஸி ப்ளாஸா ஆகப் போகிறது என்று  செய்தி படித்தேன். குதிரை  வண்டிகள் மதுரையில் புழங்கிய காலம். அங்கே ஒரு தண்ணீர் தொட்டி இருக்கும். குதிரைத் தொட்டி என்று நாங்கள் அழைப்போம். குதிரைகளுக்கு சேணம் கண்களுக்குப் பட்டை கட்டாயம். சில குதிரைகளுக்கு இப்போதெல்லாம் பொருட்காட்சியில் கிடைக்கும் நீளமான பஞ்சு மிட்டாய் போன்ற ஒன்றை நெற்றிப் பட்டையில் செருகி இருப்பார்கள். குதிரையின் ஓட்டத்திற்கு ஏற்ப அது அசைந்தாடுவது பார்க்க அழகாக இருக்கும்.  குதிரை வண்டிக்கு லைசென்ஸ் உண்டு. மேலே குறிப்பிட்ட குதிரைத் தொட்டியில குதிரைகளுக்கு தண்ணீர் காட்டுவார்கள். குதிரைகளின் ஆபரணங்கள் களையப்பட்டு அங்கே குளிப்பாட்டுவதும் உண்டு. 

சிறுவர்களான நாங்கள் அங்கே நின்று வேடிக்கை பார்ப்பது வாடிக்கை. குதிரைச் சாணமும் புல் வாசனையும் கலந்து ஒரு வினோதமான மணம் அங்கே எழும்




ஜான்ஸி ராணி பூங்கா பின்புறம் நியூ சினிமா என்று ஒரு தியேட்டர். நியூ என்ற வார்த்தைக்குப் பொருளான எதையும் நான் அங்கே பார்த்ததில்லை. நெரிசலான

இடம்.  சினிமா முடிந்து கூட்டத்தில் மிதந்துதான் வர வேண்டும். அங்கங்கே வீதிகளில் கூட்டம் கிளை பிரியும் வரை. இந்தத் தியேட்டரில் தான் “குடியிருந்த

கோயில்” என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். அப்போது எனக்குப் பத்து வயது.

என்னுடைய ஒன்று விட்ட அண்ணன் கூட வந்திருந்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து படம் பார்த்தது அனேகம். அது எம்ஜியார் படமாக இருப்பது அபூர்வம்.

எம்ஜியார் படங்கள் என்றால் ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாக இருக்கும்.அதிலும் இந்தப் படத்தில் எம்ஜியார் இரட்டை வேடம். வண்ணப் படம்.

துவக்கத்தில் இரட்டையர்களின் தந்தையின் சாட்சியத்தால் நம்பியார் சிறை

செல்கிறார். சிறையிலிருந்து தப்பி விடுகிறார். எதிராகச் சாட்சி சொன்னவரைத் தேடி வருகிறார். ராமனாதா.. என்று இவருக்கே உரித்தான குரலில் அழைக்கிறார். ராமநாதனை ஓடவிட்டு கத்தி எறிந்து கொல்கிறார். சிறுவர்கள் பிரிந்து விடுகிறார்கள். ஒருவன் அம்மாவுடன் நல்லவனாக வளருகிறான். இன்னொருவன் நம்பியார் வசம்  வளருகிறான். கெட்டவனாக. நம்பியார் சொல்லும் எதையும் செய்பவனாக. முரட்டு சுபாவம் கொண்டவனாக. எம்ஜியார்  அறிமுகம் ஆகும் முதல் காட்சியில் விசில் கூரையைப் பிய்க்கும். ஓட்டைப் பிரித்து உள்ளே குதிப்பார். அங்கே இருப்பவர்களை உதைத்துத் துவைப்பார்  பீரோவைத் திறந்து ஓரு காகிதத்தை எடுத்துக் கொண்டு செல்வார். போலீஸ் துரத்தும். பரபரப்பான காட்சிகள். அந்தக் காகிதம் என்னவென்று இப்போது நினைவில்லை.


நல்ல எம்ஜியார் அறிமுகமாகும்போதே ஒரு பாடல்.  எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்கும் பாடல்கள் புதுமையாக இருக்கும். எம்ஜிஆரின் அறிமுகப் பாடல். இளமை துள்ளும் பாடல். பாடலில் அவர் தன்னைப் பற்றிச் சொல்வார் சிரித்துப் பழகும் ரசிகன். நல்ல ரசிகன். கவலையை மறக்கச் செய்யும் கவிஞன் என்றெல்லாம். சிறுவனாக இருந்தபோது இசைத் தட்டாக சுழன்று ஒலிபெருக்கி குழாய் வழி அதிகம் கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. மகிழ்ச்சி தரக் கூடிய பாடல். இசையும் எம்ஜியாரின் சுறுசுறுப்பான அசைவுகளும் நாயகியாக நடித்த ஜெயலலிதாவின் இளமைத் தோற்றமும் மறக்க முடியாதவை.


காலங்கள் சென்ற பிறகு இசை வகைகள் என்ன என்னவென்று ஏதோ கொஞ்சம் பிடிபட்டது. ஜாஸ் என்று ஒரு வகை இசை. பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் வளர்ந்து வந்தது. ஆரம்பத்தில் கறுப்பினத்தவர்கள் தோட்டங்களில் அடிமைகளாக வேலை செய்யும் போது பாடும் பாடல்கள் ஜாஸ் என்று வடிவம் பூண்டது. அது நம்ம ஊர் 'எசப்பாட்டு' போல. ஒருவர் அழைக்க ஓருவர் மறுமொழி சொல்வதாக. காலம் செல்லச் செல்ல இசைக்கருவிகள் சேர்ந்து ஜாஸ் பிறிதொரு பரிமாணம் கொண்டது. பியானோ, கிடார், ட்ரம்பட்

சாக்ஸபோன் என்ற கருவிகள் குரலோடு இணைந்து பிரபலம் அடைந்தது. இந்தியத் திரைப்படங்களில் தொடர்ந்து அதன் செல்வாக்கை செலுத்தியபடியேஇருந்தது. 


எம்ஜியாரின் அறிமுகப் பாடலுக்கு வருவோம். "என்னைத் தெரியுமா" என்று TMS குரலில் துவங்குகிறது. பியானோ பின்னணியில் தொடர்ந்தபடியே இருக்கும். ஊடு இசையில் கிடார். தொடர்ந்து பியானோ. சில வினாடிகள் வயலின். TMS குரல் தொடரும். நான் புதுமையானவன் என்று. அப்போது தாளத்தில் ஒலிப்பது பாங்கோஸ். இந்தக் காலம் உதவி செய்ய என்ற வரி வரும்போது போது தாள கதி மாறுகிறது.

தபலா ஒலிக்கிறது.  இசையிலே மிதக்கலாம் என்ற வரி வரும்போது மீண்டும் தாள கதியில் மாற்றம். ஜாஸ் இசையின் பிரத்யேக அம்சமாக  இந்த Poly rhythm pattern  ஐ சொல்கிறார்கள். இரண்டாவது சரணத்தில் கிடாருக்குப் பதிலாகக் குரல்கள்.  கைதட்டல் தாள லயத்தில்.  ட்ரம்ஸ் துடிப்பு. பின்பு டிரம்பட் எடுப்பு. ஜெயலலிதாவை நடனமாட உற்சாகப் படுத்தும் எம்ஜியார். அப்பப்பா!


ஜாஸ். அப்பட்டமான ஜாஸ். அப்படித்தான் எனக்கு இப்போது தோன்றுகிறது. 


பாடலைக் காணொளியோடு பார்ப்போம்.

.






Comments

  1. அன்னிக்கே நீ எழுதறத பார்த்து இந்த பாட்டு ஞாபகம் வந்தது. ரசிகன் நல்ல ரசிகன் நீ.

    பி.கு ஒண்ணு விட்ட அண்ணா ஒளியும் ஒலியும்ல எம் ஜி ஆர் பாட்டு வந்தாலே பாக்க விட மாட்டாரே.. (ஆனா அதுவும் கரெக்ட்டுதான் :) :))

    ReplyDelete
  2. நாராயணன் சொல்வார், எம் ஜி ஆர் படம்லாம் தியேட்டர்ல பாக்கறது செம்ம அனுபவம்னு. நா டீ வி ல யே பாக்க மாட்டேன் அப்றம் எங்க தியேட்டர்

    ReplyDelete
    Replies
    1. தியேட்டரில் பார்த்த எம்ஜியார் படங்கள் சொற்பம்.. எம்ஜியார் ரசிகர்களோடு பார்க்கும் போது கொஞ்ச நேரம் நாமும் அப்படி இருப்போம்

      Delete
  3. அருமையான பாடல். மிக மிக ரசிக்கத்தக்கது. என்ன குரல் என்ன இசை. என்ன காட்சி. அதில் எம்ஜிஆர். ஆஹா அருமையோ அருமை.

    ReplyDelete
  4. நியூ சினிமாவுக்குப் பக்கத்தில் உள்ள ஸௌராஷ்ட்ர செகண்டரி பள்ளியில் தான் நான் 9,10,11 வகுப்புகள் படித்தேன். மேலும் தெற்கு ஆவணி மூல வீதியில் தான் எங்களது வீடு இருந்தது. 1985 வருடம் வரை அங்கு தான் வசித்து வந்தோம்.

    ReplyDelete
  5. ஜான்சிராணி பூங்கா அதில் நடக்கும் அரசியல் கூட்டங்கள் நின்று கேட்ட அநுபவவும் நினைவு கூறத்தக்கது. பூங்கா, பள்ளி, வீடு , அங்கு இருந்த ஒரு பிள்ளையார் கோவில் எனது வாழ்க்கையின் பெரும்பகுதி அங்கு தான் கழிந்தது. மறக்க முடியாத பகுதி. ஜான்சிராணி பூங்கா மற்றும் சினிமாவை நினைவு கூர்ந்ததற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. எழுதும் போதே தெற்காவணி மூல வீதி உங்களுடைய பூர்விக வீடு ஞாபகம் வந்தது

      Delete
  6. ஆமாம். ஜான்ஸி ராணி திடல் என்று அழைக்கப்பட்ட காலம் உண்டு. அரசியல் கூட்டங்கள் நடந்ததும் நினைவில் இருக்கிறது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...