ஜான்ஸி ராணி பூங்கா என்று மதுரையில் ஒரு இடம் உண்டு. மேல ஆவணி மூல வீதியும் நேதாஜி ரோடும் சந்திக்கும் இடத்தில் இருக்கிறது. அது பூங்காவாக இருந்ததும் உண்டு. பின்னர் கார்கள் நிறுத்தும் இடமாக ஓரு புறமும் நவீனக் கழிப்பறையாக மறுபுறமும் ஆனது. இப்போது ஸ்மார்ட் சிடி திட்டத்தில் அது ஜான்ஸி ப்ளாஸா ஆகப் போகிறது என்று செய்தி படித்தேன். குதிரை வண்டிகள் மதுரையில் புழங்கிய காலம். அங்கே ஒரு தண்ணீர் தொட்டி இருக்கும். குதிரைத் தொட்டி என்று நாங்கள் அழைப்போம். குதிரைகளுக்கு சேணம் கண்களுக்குப் பட்டை கட்டாயம். சில குதிரைகளுக்கு இப்போதெல்லாம் பொருட்காட்சியில் கிடைக்கும் நீளமான பஞ்சு மிட்டாய் போன்ற ஒன்றை நெற்றிப் பட்டையில் செருகி இருப்பார்கள். குதிரையின் ஓட்டத்திற்கு ஏற்ப அது அசைந்தாடுவது பார்க்க அழகாக இருக்கும். குதிரை வண்டிக்கு லைசென்ஸ் உண்டு. மேலே குறிப்பிட்ட குதிரைத் தொட்டியில குதிரைகளுக்கு தண்ணீர் காட்டுவார்கள். குதிரைகளின் ஆபரணங்கள் களையப்பட்டு அங்கே குளிப்பாட்டுவதும் உண்டு.
சிறுவர்களான நாங்கள் அங்கே நின்று வேடிக்கை பார்ப்பது வாடிக்கை. குதிரைச் சாணமும் புல் வாசனையும் கலந்து ஒரு வினோதமான மணம் அங்கே எழும்
ஜான்ஸி ராணி பூங்கா பின்புறம் நியூ சினிமா என்று ஒரு தியேட்டர். நியூ என்ற வார்த்தைக்குப் பொருளான எதையும் நான் அங்கே பார்த்ததில்லை. நெரிசலான
இடம். சினிமா முடிந்து கூட்டத்தில் மிதந்துதான் வர வேண்டும். அங்கங்கே வீதிகளில் கூட்டம் கிளை பிரியும் வரை. இந்தத் தியேட்டரில் தான் “குடியிருந்த
கோயில்” என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். அப்போது எனக்குப் பத்து வயது.
என்னுடைய ஒன்று விட்ட அண்ணன் கூட வந்திருந்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து படம் பார்த்தது அனேகம். அது எம்ஜியார் படமாக இருப்பது அபூர்வம்.
எம்ஜியார் படங்கள் என்றால் ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாக இருக்கும்.அதிலும் இந்தப் படத்தில் எம்ஜியார் இரட்டை வேடம். வண்ணப் படம்.
துவக்கத்தில் இரட்டையர்களின் தந்தையின் சாட்சியத்தால் நம்பியார் சிறை
செல்கிறார். சிறையிலிருந்து தப்பி விடுகிறார். எதிராகச் சாட்சி சொன்னவரைத் தேடி வருகிறார். ராமனாதா.. என்று இவருக்கே உரித்தான குரலில் அழைக்கிறார். ராமநாதனை ஓடவிட்டு கத்தி எறிந்து கொல்கிறார். சிறுவர்கள் பிரிந்து விடுகிறார்கள். ஒருவன் அம்மாவுடன் நல்லவனாக வளருகிறான். இன்னொருவன் நம்பியார் வசம் வளருகிறான். கெட்டவனாக. நம்பியார் சொல்லும் எதையும் செய்பவனாக. முரட்டு சுபாவம் கொண்டவனாக. எம்ஜியார் அறிமுகம் ஆகும் முதல் காட்சியில் விசில் கூரையைப் பிய்க்கும். ஓட்டைப் பிரித்து உள்ளே குதிப்பார். அங்கே இருப்பவர்களை உதைத்துத் துவைப்பார் பீரோவைத் திறந்து ஓரு காகிதத்தை எடுத்துக் கொண்டு செல்வார். போலீஸ் துரத்தும். பரபரப்பான காட்சிகள். அந்தக் காகிதம் என்னவென்று இப்போது நினைவில்லை.
நல்ல எம்ஜியார் அறிமுகமாகும்போதே ஒரு பாடல். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்கும் பாடல்கள் புதுமையாக இருக்கும். எம்ஜிஆரின் அறிமுகப் பாடல். இளமை துள்ளும் பாடல். பாடலில் அவர் தன்னைப் பற்றிச் சொல்வார் சிரித்துப் பழகும் ரசிகன். நல்ல ரசிகன். கவலையை மறக்கச் செய்யும் கவிஞன் என்றெல்லாம். சிறுவனாக இருந்தபோது இசைத் தட்டாக சுழன்று ஒலிபெருக்கி குழாய் வழி அதிகம் கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. மகிழ்ச்சி தரக் கூடிய பாடல். இசையும் எம்ஜியாரின் சுறுசுறுப்பான அசைவுகளும் நாயகியாக நடித்த ஜெயலலிதாவின் இளமைத் தோற்றமும் மறக்க முடியாதவை.
காலங்கள் சென்ற பிறகு இசை வகைகள் என்ன என்னவென்று ஏதோ கொஞ்சம் பிடிபட்டது. ஜாஸ் என்று ஒரு வகை இசை. பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் வளர்ந்து வந்தது. ஆரம்பத்தில் கறுப்பினத்தவர்கள் தோட்டங்களில் அடிமைகளாக வேலை செய்யும் போது பாடும் பாடல்கள் ஜாஸ் என்று வடிவம் பூண்டது. அது நம்ம ஊர் 'எசப்பாட்டு' போல. ஒருவர் அழைக்க ஓருவர் மறுமொழி சொல்வதாக. காலம் செல்லச் செல்ல இசைக்கருவிகள் சேர்ந்து ஜாஸ் பிறிதொரு பரிமாணம் கொண்டது. பியானோ, கிடார், ட்ரம்பட்
சாக்ஸபோன் என்ற கருவிகள் குரலோடு இணைந்து பிரபலம் அடைந்தது. இந்தியத் திரைப்படங்களில் தொடர்ந்து அதன் செல்வாக்கை செலுத்தியபடியேஇருந்தது.
எம்ஜியாரின் அறிமுகப் பாடலுக்கு வருவோம். "என்னைத் தெரியுமா" என்று TMS குரலில் துவங்குகிறது. பியானோ பின்னணியில் தொடர்ந்தபடியே இருக்கும். ஊடு இசையில் கிடார். தொடர்ந்து பியானோ. சில வினாடிகள் வயலின். TMS குரல் தொடரும். நான் புதுமையானவன் என்று. அப்போது தாளத்தில் ஒலிப்பது பாங்கோஸ். இந்தக் காலம் உதவி செய்ய என்ற வரி வரும்போது போது தாள கதி மாறுகிறது.
தபலா ஒலிக்கிறது. இசையிலே மிதக்கலாம் என்ற வரி வரும்போது மீண்டும் தாள கதியில் மாற்றம். ஜாஸ் இசையின் பிரத்யேக அம்சமாக இந்த Poly rhythm pattern ஐ சொல்கிறார்கள். இரண்டாவது சரணத்தில் கிடாருக்குப் பதிலாகக் குரல்கள். கைதட்டல் தாள லயத்தில். ட்ரம்ஸ் துடிப்பு. பின்பு டிரம்பட் எடுப்பு. ஜெயலலிதாவை நடனமாட உற்சாகப் படுத்தும் எம்ஜியார். அப்பப்பா!
ஜாஸ். அப்பட்டமான ஜாஸ். அப்படித்தான் எனக்கு இப்போது தோன்றுகிறது.
பாடலைக் காணொளியோடு பார்ப்போம்.
.
அன்னிக்கே நீ எழுதறத பார்த்து இந்த பாட்டு ஞாபகம் வந்தது. ரசிகன் நல்ல ரசிகன் நீ.
ReplyDeleteபி.கு ஒண்ணு விட்ட அண்ணா ஒளியும் ஒலியும்ல எம் ஜி ஆர் பாட்டு வந்தாலே பாக்க விட மாட்டாரே.. (ஆனா அதுவும் கரெக்ட்டுதான் :) :))
நாராயணன் சொல்வார், எம் ஜி ஆர் படம்லாம் தியேட்டர்ல பாக்கறது செம்ம அனுபவம்னு. நா டீ வி ல யே பாக்க மாட்டேன் அப்றம் எங்க தியேட்டர்
ReplyDeleteதியேட்டரில் பார்த்த எம்ஜியார் படங்கள் சொற்பம்.. எம்ஜியார் ரசிகர்களோடு பார்க்கும் போது கொஞ்ச நேரம் நாமும் அப்படி இருப்போம்
Deleteஅருமையான பாடல். மிக மிக ரசிக்கத்தக்கது. என்ன குரல் என்ன இசை. என்ன காட்சி. அதில் எம்ஜிஆர். ஆஹா அருமையோ அருமை.
ReplyDeleteநியூ சினிமாவுக்குப் பக்கத்தில் உள்ள ஸௌராஷ்ட்ர செகண்டரி பள்ளியில் தான் நான் 9,10,11 வகுப்புகள் படித்தேன். மேலும் தெற்கு ஆவணி மூல வீதியில் தான் எங்களது வீடு இருந்தது. 1985 வருடம் வரை அங்கு தான் வசித்து வந்தோம்.
ReplyDeleteஜான்சிராணி பூங்கா அதில் நடக்கும் அரசியல் கூட்டங்கள் நின்று கேட்ட அநுபவவும் நினைவு கூறத்தக்கது. பூங்கா, பள்ளி, வீடு , அங்கு இருந்த ஒரு பிள்ளையார் கோவில் எனது வாழ்க்கையின் பெரும்பகுதி அங்கு தான் கழிந்தது. மறக்க முடியாத பகுதி. ஜான்சிராணி பூங்கா மற்றும் சினிமாவை நினைவு கூர்ந்ததற்கு நன்றி.
ReplyDeleteஎழுதும் போதே தெற்காவணி மூல வீதி உங்களுடைய பூர்விக வீடு ஞாபகம் வந்தது
Deleteஆமாம். ஜான்ஸி ராணி திடல் என்று அழைக்கப்பட்ட காலம் உண்டு. அரசியல் கூட்டங்கள் நடந்ததும் நினைவில் இருக்கிறது
ReplyDelete