குஞ்ஞுண்ணி கவிதைகள். இந்தப் புத்தகம் மகிழகம் வெளியீடு.இது மதுரைப் பதிப்பகம். விலை பன்னிரண்டு ரூபாய். மலையாளக் கவிதைகளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் பா.ஆனந்தகுமார். முப்பது வருடங்களுக்கு முன்னால் வாங்கியிருக்கிறேன். பல ஊர்களுக்கு என்னோடு பயணம் செய்து தப்பிப்பிழைத்திருக்கிறது. புத்தக அலமாரியைக் குடையும் போது கிடைத்தது. மறுபடியும் வாசித்துப் பார்த்தேன். ஒரு வரியில் கவிதைகள். இரண்டு வரிகளில். நான்கு வரிகளில். ஐந்து வினாடிகள். அதிக பட்சம் பத்து வினாடிகளில் கவிதையைப் படித்து விட முடிகிறது. ஆனால் அதன் பொருள் மணியின் கார்வையைப் போல் மனதில் நீள்கிறது. நீண்டு ஒலிக்கிறது. ஊற்றுத் தண்ணீரைப் போல் மெல்லப் பெருகி வருகிறது. விவரிப்புகளைக் கடந்து நின்று நம்மைக் கண்டு பரிகசிக்கிறது. எத்தனை எளிமையோடு கூடி வருகிறது.
ஆவியிலே எளிமையுடையவன் பாக்கியவான் என்பது பைபிள் வாசகம்.
வார்த்தையை வசப்படுத்துவோன் வலியோன் என்கிறார் குஞ்ஞுண்ணி.
சில ஒரு வரிக்கவிதைகள் பழமொழி போலத் தொனிக்கின்றன.
இனி கவிதைகளைப் பார்ப்போம்.
நாட்டின் அகம் நாடகம். இது ஒரு கவிதை. ஒரு வரியில் முடிந்து விடுகிறது.
பின்னால் மட்டும் மடங்குகின்ற கால்கள் கொண்டல்லவா
முன்னால் பாய்கின்றான் மனிதன்.
2. ஒரு சிறிய மரம்
அதிலொரு பெரிய வனம்
அதுதான் என் மனம்
3. நாவே
நீ காதுள்ளவரோடு பேசாதே
என் காதே
நீ நாவுள்ளவர் அருகாமையை நாடாதே
4. நானொரு வாடகை வீடு
யாருடைய யார்
இதில் வசிப்பது
5. நானுமொரு பூ
சிறிய பூ
எல்லோருக்குமுள்ள பூ
நானுமொரு தீ
பெரிய தீ
எனக்குள்ள தீ
6. பூவின் முன்னால் செல்லும்போது
வண்டாய் மாறக்கூடாது நான்
வண்டென் முன்னால் வரும்போது
பூவாய் நான் மலர வேண்டுமே
7. ஆறாக ஓடும் ஆறும்
புழுவாக இழையும் பழுவும்
நானாக அலையும் நானும்
அற்புதமன்றோ உலகம்!
8. அகத்திலுள்ளது புறத்திலாகும்
புறத்திலுள்ளது அகத்திலாகும்
அகத்தும் புறத்துமில்லாதது
கவிதையிலாகும்
9. பெரிய இவ்வுலகம் முழுதும் நன்றாக
சிறிய ஒரு சூத்திரம்
செவியிலோதுவேன் நான்
சுயம் நன்றாவீர்
சுயம் நன்றாவீர்
சுயம் நன்றாவீர்
கவிதைகளில் படிமங்கள் இல்லை. நேரடியாகப் பேசுகின்றன. உண்மையைச்
சுட்டுகின்றன. காட்சி உடையவர்கள் காண்கிறார்கள்.
தி சந்தானம்
மிக எளிமையான கவிதைகள். ரசிக்கத்தக்கது.
ReplyDeleteஜீ! உங்கள் அலமாரியை இன்னும் குடைந்து பாருங்கள்.இந்த மாதிரியான பொக்கிஷங்கள் நிறைய இருக்கும். கவிதைகள் அருமை. உங்கள் பணி சிறக்கட்டும்.
ReplyDeleteநன்றி சுப்புராஜ். சுப்புராஜ் என்றே ஊகித்து அறிகிறேன்
Deleteஆஹா..
ReplyDeleteநன்றி
Delete