Skip to main content

மறதி என்னும் மலர்

 இஸுமி ஷிகிபு ஜப்பானியப் பெண் கவி. இவர் பிறந்து வாழ்ந்து மறைந்தது பத்தாவது  பதினோராம் நூற்றாண்டுக் காலங்களில்- இஸுமி என்ற மாகாணத்தின் ஆளுநரை மணக்கிறார். இஸுமி இவர் பெயரோடு இப்படித்தான் ஒட்டிக் கொள்கிறது. அவருடைய கணவர் பெயர் டச்சிபானா. திருமணம் ஆகும்போது இஸுமி ஷிகிபுவுக்கு வயது இருபது. கணவர் இவரை விட பதினேழு வயது பெரியவர். சில நாட்களுக்குப் பின் திருமணம் முறிகிறது. பின்பு ஒரு ராஜகுமாரனை மணக்கிறார். பின்பு.... சரி.. இவருடைய திருமணங்களை விட்டு விட்டு இவர் எழுதிய கவிதைகளைப் பார்க்கலாம். காதல் வயப்பட்ட மனம் இவருடையது. அதே நேரம் அந்த மனத்தில் ஒரு புத்தன் இருக்கிறான். புத்தன் என்றால் விழிப்பு நிலை அடைந்தவன் அல்லவா?   மடை தாண்டிப் பெருகும் காதலும் விழிப்பும்  தரிசனமும் இவர் கவிதைகளில் விரவியிருக்கிறது.




இனி கவிதைகள். ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்.


பொழிவு


நீண்ட மழை 

எங்கும் எப்போதும்

பொழிந்து கொண்டிருப்பதையே

நினைந்து கொண்டிருக்கிறாய்


என் இதயத்திலும் மழை பொழிகிறது

நீண்ட துயர நாட்கள்


நிலவைப் பார்த்து


ஆளில்லாத அவளது வீட்டில்

நிலவைப் பார்த்தபடி இருக்கிறாள்

அவன் வரவில்லை

அவள் மனதில் இருப்பதைச் சொல்ல முடியவில்லை

கேட்பதற்கும் யாரும் இல்லை


பிறப்புக்கு முன்பு


நான் இலையிலிருந்து தொங்கும் பனித்துளி

எனிலும் எனக்குச் சஞ்சலம் இல்லை

இந்தக் கிளையில்

வெகு நாட்களாக இருப்பதாகத் தோன்றுகிறது.

உலகம் பிறப்பதற்கு முன்பிருந்தே



தீவு


நீதான் நீதான்

நான் எப்போதும்

காத்திருக்கப் பார்த்திருந்த தீவு

எந்த அலைகள் அதை

அடித்துச் செல்ல முடியும்?


பறிக்க நினைத்தேன்


மறதி என்னும் மலரை

பறிக்க நினைத்தேன்

எனக்காக

ஆனாலும் ஞாபகமாக

அதைக் கண்டு கொண்டேன்


காட்சி


புலரும் பொழுது

நிலவைப் பார்த்தேன்

தனியாக-நடு வானில்

முழுதும் என்னை அறிந்தேன்

துளி பிசகாமல்


என்ன செய்ய


வெகு நாளாய்  பார்க்க

காத்திருக்கும் ஒருவர்

இப்போது வந்தால்

நான் என்ன செய்ய வேண்டும்?

காலையில் தோட்டம்

பனி மூடிய அழகு

நிரம்ப அழகு

கால் தடங்களால் கலையலாகாது


ஏன் மறைந்தாய்


ஏன் வெறுமையான வானத்தின் ஊடே

மறைந்து போனாய்?

மெல்லிய பனி கூட

வீழும் போது

பூமியில் தானே விழுகிறது?

                 *************


இலையில் தொங்கும் பனித்துளி எப்போதிலிருந்து அங்கே இருக்கிறது?

மறதி என்னும் மலரைப் பறிக்க முடிந்ததா? 


இன்னும் எத்தனை எத்தனை நுட்பமான கேள்விகள்!

ஆழமான பார்வைகள்!!


நெஞ்சில் மழை பொழிகிறது.

பனி குவியக் குவிய அழகு சூழ்கிறது.


தி சந்தானம்








Comments

  1. கவிதை ஓட்டம் ரசிக்கத் தக்கதாக இருந்தது. பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  2. அருமை. தொடர்ந்து படிக்க துவங்குகிறேன்.

    ReplyDelete
  3. ஜப்பானிய கவிதை அறிமுகத்திற்கு நன்றி. எப்பவும் போல அருமை உன் மொழியாக்கம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...