இஸுமி ஷிகிபு ஜப்பானியப் பெண் கவி. இவர் பிறந்து வாழ்ந்து மறைந்தது பத்தாவது பதினோராம் நூற்றாண்டுக் காலங்களில்- இஸுமி என்ற மாகாணத்தின் ஆளுநரை மணக்கிறார். இஸுமி இவர் பெயரோடு இப்படித்தான் ஒட்டிக் கொள்கிறது. அவருடைய கணவர் பெயர் டச்சிபானா. திருமணம் ஆகும்போது இஸுமி ஷிகிபுவுக்கு வயது இருபது. கணவர் இவரை விட பதினேழு வயது பெரியவர். சில நாட்களுக்குப் பின் திருமணம் முறிகிறது. பின்பு ஒரு ராஜகுமாரனை மணக்கிறார். பின்பு.... சரி.. இவருடைய திருமணங்களை விட்டு விட்டு இவர் எழுதிய கவிதைகளைப் பார்க்கலாம். காதல் வயப்பட்ட மனம் இவருடையது. அதே நேரம் அந்த மனத்தில் ஒரு புத்தன் இருக்கிறான். புத்தன் என்றால் விழிப்பு நிலை அடைந்தவன் அல்லவா? மடை தாண்டிப் பெருகும் காதலும் விழிப்பும் தரிசனமும் இவர் கவிதைகளில் விரவியிருக்கிறது.
இனி கவிதைகள். ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்.
பொழிவு
நீண்ட மழை
எங்கும் எப்போதும்
பொழிந்து கொண்டிருப்பதையே
நினைந்து கொண்டிருக்கிறாய்
என் இதயத்திலும் மழை பொழிகிறது
நீண்ட துயர நாட்கள்
நிலவைப் பார்த்து
ஆளில்லாத அவளது வீட்டில்
நிலவைப் பார்த்தபடி இருக்கிறாள்
அவன் வரவில்லை
அவள் மனதில் இருப்பதைச் சொல்ல முடியவில்லை
கேட்பதற்கும் யாரும் இல்லை
பிறப்புக்கு முன்பு
நான் இலையிலிருந்து தொங்கும் பனித்துளி
எனிலும் எனக்குச் சஞ்சலம் இல்லை
இந்தக் கிளையில்
வெகு நாட்களாக இருப்பதாகத் தோன்றுகிறது.
உலகம் பிறப்பதற்கு முன்பிருந்தே
தீவு
நீதான் நீதான்
நான் எப்போதும்
காத்திருக்கப் பார்த்திருந்த தீவு
எந்த அலைகள் அதை
அடித்துச் செல்ல முடியும்?
பறிக்க நினைத்தேன்
மறதி என்னும் மலரை
பறிக்க நினைத்தேன்
எனக்காக
ஆனாலும் ஞாபகமாக
அதைக் கண்டு கொண்டேன்
காட்சி
புலரும் பொழுது
நிலவைப் பார்த்தேன்
தனியாக-நடு வானில்
முழுதும் என்னை அறிந்தேன்
துளி பிசகாமல்
என்ன செய்ய
வெகு நாளாய் பார்க்க
காத்திருக்கும் ஒருவர்
இப்போது வந்தால்
நான் என்ன செய்ய வேண்டும்?
காலையில் தோட்டம்
பனி மூடிய அழகு
நிரம்ப அழகு
கால் தடங்களால் கலையலாகாது
ஏன் மறைந்தாய்
ஏன் வெறுமையான வானத்தின் ஊடே
மறைந்து போனாய்?
மெல்லிய பனி கூட
வீழும் போது
பூமியில் தானே விழுகிறது?
*************
இலையில் தொங்கும் பனித்துளி எப்போதிலிருந்து அங்கே இருக்கிறது?
மறதி என்னும் மலரைப் பறிக்க முடிந்ததா?
இன்னும் எத்தனை எத்தனை நுட்பமான கேள்விகள்!
ஆழமான பார்வைகள்!!
நெஞ்சில் மழை பொழிகிறது.
பனி குவியக் குவிய அழகு சூழ்கிறது.
தி சந்தானம்
கவிதை ஓட்டம் ரசிக்கத் தக்கதாக இருந்தது. பதிவுக்கு நன்றி
ReplyDeleteநன்றி ராம்
Deleteஅருமை. தொடர்ந்து படிக்க துவங்குகிறேன்.
ReplyDeleteநன்றி ஆர்க்கே
Deleteஜப்பானிய கவிதை அறிமுகத்திற்கு நன்றி. எப்பவும் போல அருமை உன் மொழியாக்கம்.
ReplyDeleteநன்றிகள பல
Delete