அப்போது எனக்கு எட்டு வயதிருக்கும். சித்தி வீட்டுக்குப் போகும்போது அந்த சினிமா சுவரொட்டியைப் பார்த்தேன்.
அது ஓரு மலையாளப் படம். அலைகளால் கரை ஒதுக்கப்பட்டு ஒரு ஆணும் பெண்ணும் தலை குப்புறக் கிடந்தார்கள். படத்தின் பெயர் செம்மீன். பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தால் அந்தப் படத்துக்கு அழைத்துச் செல்ல மாட்டார்கள் என்று தெரிந்தது. அந்த திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்தது. பெரியவன் ஆன பிறகு பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். வருடங்கள் ஓடின. பதினோராம் வகுப்பு படிக்கும்போது மறு திரையிடலில் என் நண்பன் சாரதி இந்தப் படத்தைப் பார்த்துவிட்டான். அவன் Sound of Music போன்ற படத்தை எல்லாம் ஏற்கனவே பார்த்திருந்தவன். செம்மீன் கதையை எனக்குச் சொன்னவன் அவனே. முன்னதாக நான் சுவரொட்டியில் பார்த்தவர்கள் முறையே மது ஷீலா என்று அறிந்தேன். சத்யன் என்ற நடிகரைப் பற்றி நான் அறிந்தது சாரதியிடமிருந்து தான். சத்யன் போன்ற சதுர முகம் அவனுக்கு. சத்யன் போல கண்கள்.பதினாறு வயதில் ரசனையோடு இந்தக் கதையைச் சொன்ன சாரதியின் வாழ்க்கை அவனுடைய இருபத்து நாலு வயதில் முடிந்தது.
இதற்கெல்லாம் பிறகு வெகுநாட்கள் கழித்து நண்பர் நரசிம்மன் வீட்டில் செம்மீன் திரைப்படத்தைப் பார்த்தேன். அது வீடியோ காசட்டுக்களின் காலம்.
மஸ்கட்டிலிருந்து அவருடைய சகோதரர் கொண்டு வந்திருந்தார். கோடுகள் கீறல்கள் இல்லாத தூய்மையான பிரிண்ட். கண்கள் இமைக்காத கவனத்துடன் பார்த்தேன்.
தகழி சிவசங்கரன் பிள்ளையின் கதை. சாகித்ய அகாடமி விருது பெற்ற கதை.
ராமு கரியத் இயக்கத்தில் அற்புதமான திரைக்காவியமாக உருமாறியிருந்தது.
வண்ணப் படம். கதையை காட்சிப் படுத்த மார்க்கஸ் பட்லேயின் ஒளிப்பதிவு. அவர் காமிரா மூலம் தீட்டிய ஓவியங்கள்தான் என்ன என்ன!
அலைகள் கரையைத் தீண்டுகின்றன. நுரை அடங்குகிறது. அலைகள் மீள்கின்றன. அலைகள் மீண்ட மணற்பரப்பில் தத்தித் தத்தி நடை பயில்கிறது வெண் பறவை. அடுத்த அலைகள் கரையைத் தீண்டும் போது ஜிவ்வென உயர்ந்து பறக்கிறது. மணலில் தோண்டிய வளையிலிருந்து நண்டு வெளியே வருகிறது. வானத்தில் செம்பருந்து உயர்ந்து பறக்கிறது. எழுகின்ற செஞ்சுடர் அலைகளில் கோலம் தீட்டுகிறது. பாய்கின்ற நிலவு அலைகளில் வெண்மையைப் பாய்ச்சுகிறது. பலபல காட்சிகள். பாத்திரங்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாய். கண்கள் சுழல டிவி திரை வழி அத்தனையும் பார்த்தேன்.
கருத்தம்மா எளிய மீனவப் பெண். காசாசை பிடித்த தந்தை. சகித்துக் கொண்டு வாழும் அம்மை. ஒரு தங்கை.
வலை வீசிப் பிடித்து மீனவர்கள் கொண்டு வரும் மீன்களுக்கு முன் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளும் கொச்சு முதலாளி பரீக்குட்டி. பரீக்குட்டிக்கு கருத்தம்மா மேல் மோகம். அலைகள் காலைச் சுற்றி அடிமணலைப் பறிப்பது போல் அவள் மனதைப் பறித்தபடி இருக்கிறான். வல்லத்தில் மறைவில் இருவரும் பேசிச் சிரித்து இருப்பதை அம்மை அறிகிறாள். அவனோடு உனக்கு என்னடி பேச்சு என்று கண்டிக்கிறாள். மீனவப் பெண் நெறி பிறழாது நின்றால் தான் கடலம்மை எல்லாம் தருவாள் என்கிறாள். இப்படி இருக்கையில் கருத்தம்மாவின் தந்தை கொச்சு முதலாளியிடம் வல்லம் வாங்க உதவி கேட்கிறான். முதலாளி பரீக்குட்டி உடனே உதவுகிறான். வல்லமும் வந்து சேருகிறது. ஆழக்கடலுக்குள் சென்று மீன்களை அள்ளி வருகிறான் கருத்தம்மாவின் தந்தை. உரிமையுடன் மீன்கள் மேல் கை வைக்கும் கொச்சு முதலாளியை விரட்டுகிறான். காசை வைத்துவிட்டு மீன்கள் மேல் கை வை என்கிறான். முதலாளி செய்த உதவியை மறந்து. முதலாளியின் முகம் வாடுகிறது. தந்தையின் ஈனச் செயலைக் கண்டு கருத்தம்மாவும் அவள் அம்மையும் வருந்துகிறார்கள்.
கருத்தம்மையின் தந்தை ஓருநாள் கடலில் போகும் போது பழனியைப் பார்க்கிறான். அவன் துடுப்பை வலிக்கும் விதமும் கடலைப் பற்றிய அவனது அறிவும் வியக்க வைப்பதாக இருக்கிறது. நீ தானடா கடலம்மையின் மகன் என்று பாராட்டுகிறான். பழனி யாருமற்ற அனாதை என்று தெரிந்து கொள்கிறான். மகள் கருத்தம்மாவிற்கு மணம் பேசி முடிக்கிறான். மணம் முடித்து பக்கத்து கடலோர கிராமத்திற்கு கருத்தம்மா செல்வதைக் கலங்கிய விழிகளோடு கொச்சு முதலாளி பரீக்குட்டி பார்த்தபடி இருக்கிறான். கடற்கரை எங்கும் அவனது சோகம் பாடலாய் ஒலிக்கிறது..
பழனி கருத்தம்மா மேல் அன்பாகத்தான் இருக்கிறான். கருத்தம்மாவும் அவன் தேவைகளைப் பூர்த்தி செய்பவளாய் இருக்கிறாள். ஆனால் ஊரில் சிலர் கருத்தம்மாவையும் கொச்சு முதலாளியையும் இணைத்து பழனியின் காதில் பட வம்பு பேசுகிறார்கள். ஏறிச் செல்லும் கட்டுமரம் போல அவன் மனம் ஆடி அலைகிறது. அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. மீண்டும் மீண்டும் வம்புப் பேச்சுகளைக் கேட்டு மனம் பொங்கும் பழனி கருத்தம்மாவிடம் உனக்கு அவன் மேல் காதலா? என்று கேட்கிறான். இந்தக் குழந்தை யாருடையது என்று அவன் கேட்டவுடன் மனம் நொறுங்கி விடுகிறாள். பழனி ஆத்திரத்துடன் சீறும் கடலுக்குள் கட்டுமரம் ஏறிச் செல்கிறான். அவன் வேறு எங்கு செல்ல முடியும்? அவனுக்குத் தெரிந்ததும் அவனைப் புரிந்ததும் கடல் தானே?
இங்கே கடற்கரையில் கொச்சு முதலாளியின் பாடல் ஒலிக்கிறது. கருத்தம்மா குடிசையில் இருந்து வெளியேறி கொச்சு முதலாளியின் கையில் தன்னை ஒப்புவிக்கிறாள். அங்கே மீன் என்று எண்ணி வலை வீச திமிங்கிலம் பழனியை இழுத்து சுழலுக்குள் தள்ளி விடுகிறது. கருத்தம்மே என்று குரல் எழுப்பியபடி சுழலில் மூழ்கி மறைகிறான். கரையில் கருத்தம்மா பரீக்குட்டி இருவரின் உடல்களும் தலை கவிழ்ந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன.
ஓரு காட்சியில் பரீக்குட்டி (மது) கருத்தம்மா(ஷீலா) விடம் கேட்பார்.
"கருத்தம்மைக்கு என்னோடு இஷ்டமானல்லோ". கருத்தம்மா (ஷீலா) சொல்வார் "மரிக்கின்னது வர" இது ஒரு எளிய வசனம். ஆனால் மனதைத் தொடுவதாக இருக்கும். கருத்தம்மா என்று விளிக்கும் மதுவின் குரலும் ஷீலாவின் கலங்கிய கண்களும் பல இரவுகள் என்னைத் தொடர்ந்தபடி இருந்தன. சலீல் செளத்ரியின் இசையை என்னவென்று சொல்வது?
பாடலைக் கேளுங்கள். காணொளியைப் பாருங்கள்.
தி சந்தானம்
சந்தானம்,
ReplyDeleteஒரு ரம்மியமான சூழலில் நாம் இந்த படம் பற்றி பேசினோம். சில குறுக்கிடுகளால், தொடர முடியவில்லை.
அதே ரசனையோடு இப்போதும் எழுதுகிறாய்.
ஆச்சரியம்.
வாழ்த்துக்கள்.
By மதி.
ReplyDeleteBy மதி
ReplyDeleteஅற்புதமான கணங்களை நினைவு கூர்ந்தாய். நன்றி மதி. காலங்கள் மாறினாலும் ரசனைகள் இற்றுத் தேய்வதில்லையே.
Deleteநா இன்னும் பாக்கல. அழகா எழுதி இருக்க.
ReplyDeleteநன்றி. முடிந்தால் பாரு
Delete