Skip to main content

மணலைப் பறிக்கும் அலைகள்

 அப்போது எனக்கு  எட்டு வயதிருக்கும். சித்தி வீட்டுக்குப் போகும்போது அந்த சினிமா சுவரொட்டியைப் பார்த்தேன்.

அது ஓரு மலையாளப் படம். அலைகளால் கரை ஒதுக்கப்பட்டு ஒரு ஆணும் பெண்ணும் தலை குப்புறக் கிடந்தார்கள். படத்தின் பெயர் செம்மீன். பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தால் அந்தப் படத்துக்கு அழைத்துச் செல்ல மாட்டார்கள் என்று தெரிந்தது. அந்த திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்தது. பெரியவன் ஆன பிறகு பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். வருடங்கள் ஓடின. பதினோராம் வகுப்பு படிக்கும்போது மறு திரையிடலில் என் நண்பன் சாரதி இந்தப் படத்தைப் பார்த்துவிட்டான். அவன் Sound of Music போன்ற படத்தை எல்லாம் ஏற்கனவே பார்த்திருந்தவன். செம்மீன் கதையை எனக்குச் சொன்னவன் அவனே.  முன்னதாக நான் சுவரொட்டியில் பார்த்தவர்கள் முறையே மது ஷீலா என்று அறிந்தேன். சத்யன் என்ற நடிகரைப் பற்றி நான் அறிந்தது சாரதியிடமிருந்து தான்.  சத்யன் போன்ற சதுர முகம் அவனுக்கு. சத்யன் போல கண்கள்.பதினாறு  வயதில் ரசனையோடு இந்தக் கதையைச் சொன்ன சாரதியின் வாழ்க்கை  அவனுடைய இருபத்து நாலு வயதில் முடிந்தது. 


இதற்கெல்லாம் பிறகு வெகுநாட்கள் கழித்து நண்பர் நரசிம்மன் வீட்டில் செம்மீன் திரைப்படத்தைப் பார்த்தேன். அது வீடியோ காசட்டுக்களின் காலம்.

மஸ்கட்டிலிருந்து அவருடைய சகோதரர் கொண்டு வந்திருந்தார். கோடுகள் கீறல்கள் இல்லாத தூய்மையான பிரிண்ட். கண்கள் இமைக்காத கவனத்துடன் பார்த்தேன்.

தகழி சிவசங்கரன் பிள்ளையின் கதை. சாகித்ய அகாடமி விருது பெற்ற கதை.

ராமு கரியத் இயக்கத்தில் அற்புதமான திரைக்காவியமாக உருமாறியிருந்தது.

வண்ணப் படம். கதையை  காட்சிப் படுத்த மார்க்கஸ் பட்லேயின் ஒளிப்பதிவு. அவர் காமிரா மூலம் தீட்டிய ஓவியங்கள்தான் என்ன என்ன!

அலைகள் கரையைத் தீண்டுகின்றன. நுரை அடங்குகிறது. அலைகள் மீள்கின்றன.  அலைகள் மீண்ட மணற்பரப்பில் தத்தித் தத்தி நடை பயில்கிறது வெண் பறவை. அடுத்த அலைகள் கரையைத் தீண்டும் போது ஜிவ்வென உயர்ந்து பறக்கிறது. மணலில் தோண்டிய வளையிலிருந்து நண்டு வெளியே வருகிறது. வானத்தில் செம்பருந்து உயர்ந்து பறக்கிறது. எழுகின்ற செஞ்சுடர் அலைகளில் கோலம் தீட்டுகிறது. பாய்கின்ற நிலவு அலைகளில் வெண்மையைப் பாய்ச்சுகிறது. பலபல காட்சிகள். பாத்திரங்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாய். கண்கள் சுழல டிவி திரை வழி அத்தனையும் பார்த்தேன்.



கருத்தம்மா எளிய மீனவப் பெண். காசாசை பிடித்த தந்தை. சகித்துக் கொண்டு வாழும் அம்மை. ஒரு தங்கை.

வலை வீசிப் பிடித்து மீனவர்கள் கொண்டு வரும் மீன்களுக்கு முன் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளும் கொச்சு முதலாளி பரீக்குட்டி. பரீக்குட்டிக்கு கருத்தம்மா மேல் மோகம். அலைகள் காலைச் சுற்றி அடிமணலைப் பறிப்பது போல் அவள் மனதைப் பறித்தபடி இருக்கிறான். வல்லத்தில் மறைவில் இருவரும் பேசிச் சிரித்து இருப்பதை அம்மை அறிகிறாள். அவனோடு உனக்கு என்னடி பேச்சு என்று கண்டிக்கிறாள். மீனவப் பெண் நெறி பிறழாது நின்றால் தான் கடலம்மை எல்லாம் தருவாள் என்கிறாள். இப்படி இருக்கையில் கருத்தம்மாவின் தந்தை கொச்சு முதலாளியிடம் வல்லம் வாங்க உதவி கேட்கிறான். முதலாளி பரீக்குட்டி உடனே உதவுகிறான். வல்லமும் வந்து சேருகிறது. ஆழக்கடலுக்குள் சென்று மீன்களை அள்ளி வருகிறான் கருத்தம்மாவின் தந்தை. உரிமையுடன்  மீன்கள் மேல் கை வைக்கும் கொச்சு முதலாளியை விரட்டுகிறான். காசை வைத்துவிட்டு மீன்கள் மேல் கை வை என்கிறான். முதலாளி செய்த உதவியை மறந்து. முதலாளியின் முகம் வாடுகிறது. தந்தையின் ஈனச் செயலைக் கண்டு கருத்தம்மாவும் அவள் அம்மையும் வருந்துகிறார்கள். 


கருத்தம்மையின் தந்தை ஓருநாள் கடலில் போகும் போது பழனியைப் பார்க்கிறான். அவன் துடுப்பை வலிக்கும் விதமும் கடலைப் பற்றிய அவனது அறிவும் வியக்க வைப்பதாக இருக்கிறது. நீ தானடா கடலம்மையின் மகன் என்று பாராட்டுகிறான். பழனி யாருமற்ற அனாதை என்று தெரிந்து கொள்கிறான். மகள் கருத்தம்மாவிற்கு மணம் பேசி முடிக்கிறான்.  மணம் முடித்து பக்கத்து கடலோர கிராமத்திற்கு கருத்தம்மா செல்வதைக் கலங்கிய விழிகளோடு கொச்சு முதலாளி பரீக்குட்டி பார்த்தபடி இருக்கிறான். கடற்கரை எங்கும் அவனது சோகம் பாடலாய் ஒலிக்கிறது..


பழனி கருத்தம்மா மேல் அன்பாகத்தான் இருக்கிறான். கருத்தம்மாவும் அவன் தேவைகளைப் பூர்த்தி செய்பவளாய் இருக்கிறாள். ஆனால் ஊரில் சிலர் கருத்தம்மாவையும் கொச்சு முதலாளியையும் இணைத்து பழனியின் காதில் பட வம்பு பேசுகிறார்கள். ஏறிச் செல்லும் கட்டுமரம் போல அவன் மனம் ஆடி அலைகிறது. அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. மீண்டும் மீண்டும் வம்புப் பேச்சுகளைக் கேட்டு மனம் பொங்கும் பழனி கருத்தம்மாவிடம் உனக்கு அவன் மேல் காதலா? என்று கேட்கிறான். இந்தக் குழந்தை யாருடையது என்று அவன் கேட்டவுடன் மனம் நொறுங்கி விடுகிறாள். பழனி ஆத்திரத்துடன் சீறும் கடலுக்குள் கட்டுமரம் ஏறிச் செல்கிறான். அவன் வேறு எங்கு செல்ல முடியும்? அவனுக்குத் தெரிந்ததும் அவனைப் புரிந்ததும் கடல் தானே?


இங்கே கடற்கரையில் கொச்சு முதலாளியின் பாடல் ஒலிக்கிறது. கருத்தம்மா குடிசையில் இருந்து வெளியேறி கொச்சு முதலாளியின் கையில் தன்னை ஒப்புவிக்கிறாள். அங்கே மீன் என்று எண்ணி வலை வீச திமிங்கிலம் பழனியை இழுத்து சுழலுக்குள் தள்ளி விடுகிறது. கருத்தம்மே என்று குரல் எழுப்பியபடி சுழலில் மூழ்கி மறைகிறான். கரையில் கருத்தம்மா பரீக்குட்டி இருவரின் உடல்களும் தலை கவிழ்ந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன.


ஓரு காட்சியில் பரீக்குட்டி (மது) கருத்தம்மா(ஷீலா) விடம் கேட்பார்.

"கருத்தம்மைக்கு என்னோடு இஷ்டமானல்லோ". கருத்தம்மா (ஷீலா) சொல்வார் "மரிக்கின்னது வர" இது ஒரு எளிய வசனம். ஆனால் மனதைத் தொடுவதாக இருக்கும். கருத்தம்மா  என்று விளிக்கும் மதுவின் குரலும் ஷீலாவின் கலங்கிய கண்களும் பல இரவுகள் என்னைத் தொடர்ந்தபடி இருந்தன. சலீல் செளத்ரியின் இசையை என்னவென்று சொல்வது?


பாடலைக் கேளுங்கள். காணொளியைப் பாருங்கள்.


தி சந்தானம்





Comments

  1. சந்தானம்,
    ஒரு ரம்மியமான சூழலில் நாம் இந்த படம் பற்றி பேசினோம். சில குறுக்கிடுகளால், தொடர முடியவில்லை.
    அதே ரசனையோடு இப்போதும் எழுதுகிறாய்.
    ஆச்சரியம்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Replies
    1. அற்புதமான கணங்களை நினைவு கூர்ந்தாய். நன்றி மதி. காலங்கள் மாறினாலும் ரசனைகள் இற்றுத் தேய்வதில்லையே.

      Delete
  3. நா இன்னும் பாக்கல. அழகா எழுதி இருக்க.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. முடிந்தால் பாரு

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...