கடல்புரத்தில். வண்ணநிலவன் எழுதிய கதை. எழுபதுகளில் கணையாழியில் தொடராக வந்திருக்கிறது. அப்போது படிக்கவில்லை. பிற்பாடு நர்மதா பதிப்பக வெளியீடாக வந்தது. அப்பொழுது வாங்கி நண்பர்கள் கூட்டமே படித்தோம். என் தங்கையும் படித்தாள். படித்ததை சில தினங்கள் முன்பு நினைவு கூர்ந்தாள்.மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. பழைய நினைவுகளில் மனம் தோய்ந்தது.
வண்ணநிலவன் எழுத்து நடை எளிமையாக இருக்கும். புதிய ஏற்பாடு படிப்பது போன்ற அனுபவம் தரும். வண்ணநிலவனை ஒரு முறை தொண்ணூறுகளில் “சுபமங்களா” அலுவலகத்தில் பார்த்தேன். இளைய பாரதி அறிமுகம் செய்து வைத்தார். சிரித்தேன். வண்ணநிலவன் அதிகம் பேசவில்லை.என்னை நோக்கிப் புன்னகை செய்தார். நானும் பேசவில்லை. இளைய பாரதி பேசியபடி இருந்தார்.
மீண்டும் கடல்புரத்தின் சில பகுதிகளை வாசித்தேன். பலதும் ஞாபகம் வந்தது.
பிலோமிக் குட்டிக்காக மனம் உருகியது. கதையில் ஒரு கட்டம். அறுப்பின் பண்டிகை வரும். கோயிலில் கொடி ஏற்றியிருப்பார்கள். சிகப்புத் துணி காற்றில் சரிகையோடு அசையும். பிலோமி தனித்து இருப்பாள். பண்டியலுக்கு அண்ணன் செபாஸ்டி வரவில்லை. சிநேகிதி ரஞ்சி கணவனோடு வந்திருப்பாள். அவளைப் பார்க்க வேண்டும். பிலோமிக்கு சாமிதாஸ் ஞாபகம் வரும். சென்ற வருடம் எட்டாம் நாள் திருவிழாவின்போது அவனோடு பேசிச் சிரித்து மகிழ்ந்த ஞாபகம்.அப்பா குரூஸ் குடித்து விட்டு வருகிறான். "வெள்ளியும் மறஞ்சு போச்சே.. கடலில் வீணாய் வல்லம் தவிக்கலாச்சே" என்ற பாடலைப் பாடுகிறான். இருமிக் கொண்டே கட்டிலில் விழுகிறான். பிலோமியின் உடல் நடுங்குகிறது.
*******************
வெள்ளி வீதியாரின் ஓரு பாடல். நெய்தல் நிலப் பாடல். நற்றிணையில் வருகிறது. ஆற்றாமை மேலிடச் சொல்வதாய் அமைந்த பாடல். அது வருமாறு:
நிலவே, நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி,
பால் மலி கடலின், பரந்து பட்டன்றே;
ஊரே, ஒலி வரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி,
கலி கெழு மறுகின், விழவு அயரும்மே;
கானே, பூ மலர் கஞலிய பொழில் அகம்தோறும்
தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே;
யானே, புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு
கனை இருங் கங்குலும் கண்படை இலெனே:
அதனால், என்னொடு பொரும்கொல், இவ் உலகம்?
உலகமொடு பொரும்கொல், என் அவலம் உறு நெஞ்சே?
தலைவன்பால் அவா மிகுந்தது. அது தாங்காத தலைவி கூறுகிறாள்.
நீல நிற ஆகாயம். நிலவு பல கதிர்களைச் செலுத்துகிறது. கடல் பால் போல பரந்து நிற்கிறது. ஊர் தெருவெங்கும் ஓசை எழத் திருவிழா கொண்டாடுகிறது. சோலையிலே வண்டுகள் பூக்களைத் தேடி அலைகின்றன. தனிமை கூடி வர என் வேதனை பெருகுகிறது. உறக்கம் கூடவில்லை. இந்த உலகம் என்னோடு போர் செய்யுமா? எனது நெஞ்சம் இந்த உலகத்தோடு போர் புரியுமா? எனக்கு ஒன்றும் தோன்றவில்லை.
*********************
பிலோமி கொண்ட நிலையும் வெள்ளி வீதியார் காட்டும் சங்ககாலப் பெண்ணின் நிலையும் ஒருபோலத் தொனிக்கின்றன.
தி சந்தானம்
ஓவியம் எஸ். பூஜிதா

நல்லா இருக்கும். எனக்குப் பிடித்த கதை. பக்கங்களில் இருந்து உப்புக் காற்றும், மீன் வாசமும் கூடவே சிறிது கண்ணீரும் எட்டிப் பார்க்கும்.
ReplyDeleteஅழகான உணர்வுக் கோலம் அது. சின்னச் சின்ன வாக்கியங்களாக எழுதிப் போவார் வண்ணநிலவன்
Delete