Skip to main content

கடலில் பரந்த நிலவு

 

கடல்புரத்தில். வண்ணநிலவன் எழுதிய கதை. எழுபதுகளில் கணையாழியில் தொடராக வந்திருக்கிறது. அப்போது படிக்கவில்லை. பிற்பாடு நர்மதா பதிப்பக வெளியீடாக வந்தது. அப்பொழுது வாங்கி நண்பர்கள் கூட்டமே படித்தோம். என் தங்கையும் படித்தாள். படித்ததை சில தினங்கள் முன்பு நினைவு கூர்ந்தாள்.மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. பழைய நினைவுகளில் மனம் தோய்ந்தது.

வண்ணநிலவன் எழுத்து நடை எளிமையாக இருக்கும். புதிய ஏற்பாடு படிப்பது போன்ற அனுபவம் தரும். வண்ணநிலவனை ஒரு முறை தொண்ணூறுகளில் “சுபமங்களா” அலுவலகத்தில் பார்த்தேன். இளைய பாரதி அறிமுகம் செய்து வைத்தார். சிரித்தேன். வண்ணநிலவன் அதிகம் பேசவில்லை.என்னை நோக்கிப் புன்னகை செய்தார். நானும் பேசவில்லை. இளைய பாரதி பேசியபடி இருந்தார்.   


மீண்டும் கடல்புரத்தின் சில பகுதிகளை வாசித்தேன். பலதும்  ஞாபகம் வந்தது.

பிலோமிக் குட்டிக்காக மனம் உருகியது.  கதையில் ஒரு கட்டம். அறுப்பின் பண்டிகை வரும். கோயிலில் கொடி ஏற்றியிருப்பார்கள். சிகப்புத் துணி காற்றில் சரிகையோடு அசையும்.  பிலோமி தனித்து இருப்பாள். பண்டியலுக்கு அண்ணன் செபாஸ்டி வரவில்லை. சிநேகிதி ரஞ்சி கணவனோடு வந்திருப்பாள். அவளைப் பார்க்க வேண்டும். பிலோமிக்கு சாமிதாஸ் ஞாபகம் வரும். சென்ற வருடம் எட்டாம் நாள் திருவிழாவின்போது அவனோடு பேசிச் சிரித்து மகிழ்ந்த ஞாபகம்.அப்பா குரூஸ்  குடித்து விட்டு வருகிறான். "வெள்ளியும் மறஞ்சு போச்சே.. கடலில் வீணாய் வல்லம் தவிக்கலாச்சே" என்ற பாடலைப் பாடுகிறான். இருமிக் கொண்டே கட்டிலில் விழுகிறான். பிலோமியின் உடல் நடுங்குகிறது. 

                                                                                           *******************                                                                                                                                                                                                                         


வெள்ளி வீதியாரின் ஓரு பாடல். நெய்தல் நிலப் பாடல். நற்றிணையில் வருகிறது. ஆற்றாமை மேலிடச் சொல்வதாய் அமைந்த பாடல். அது வருமாறு:




நிலவே, நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி,

பால் மலி கடலின், பரந்து பட்டன்றே;

ஊரே, ஒலி வரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி,

கலி கெழு மறுகின், விழவு அயரும்மே;

கானே, பூ மலர் கஞலிய பொழில் அகம்தோறும்

தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே;

யானே, புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு

கனை இருங் கங்குலும் கண்படை இலெனே:

அதனால், என்னொடு பொரும்கொல், இவ் உலகம்?

உலகமொடு பொரும்கொல், என் அவலம் உறு நெஞ்சே?


தலைவன்பால் அவா மிகுந்தது. அது தாங்காத தலைவி  கூறுகிறாள்.

நீல நிற ஆகாயம். நிலவு பல கதிர்களைச் செலுத்துகிறது. கடல் பால் போல பரந்து நிற்கிறது. ஊர் தெருவெங்கும் ஓசை எழத் திருவிழா கொண்டாடுகிறது. சோலையிலே வண்டுகள் பூக்களைத் தேடி அலைகின்றன. தனிமை கூடி வர என் வேதனை பெருகுகிறது. உறக்கம் கூடவில்லை. இந்த உலகம் என்னோடு போர் செய்யுமா? எனது நெஞ்சம் இந்த உலகத்தோடு போர் புரியுமா? எனக்கு ஒன்றும் தோன்றவில்லை.


                           *********************


பிலோமி கொண்ட நிலையும் வெள்ளி வீதியார் காட்டும் சங்ககாலப் பெண்ணின் நிலையும் ஒருபோலத் தொனிக்கின்றன.


தி சந்தானம்


ஓவியம் எஸ். பூஜிதா








Comments

  1. நல்லா இருக்கும். எனக்குப் பிடித்த கதை. பக்கங்களில் இருந்து உப்புக் காற்றும், மீன் வாசமும் கூடவே சிறிது கண்ணீரும் எட்டிப் பார்க்கும்.

    ReplyDelete
    Replies
    1. அழகான உணர்வுக் கோலம் அது. சின்னச் சின்ன வாக்கியங்களாக எழுதிப் போவார் வண்ணநிலவன்

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...