அது நூற்றாண்டுப் பழமையான பாடல். மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த பாடல். என்னோடு என்றும் இரு (Abide with me) என்ற பாடல்.குடியரசு தினக் கொண்டாட்டத்தின் இறுதியாக ஒரு சடங்கு நிகழும். அது Beating Retreat என்பது. அப்போது Abide with me என்ற பாடலை பாண்டு இசைப்பார்கள். அந்தப் பாடல் ஒரு பிரார்த்தனை போல ஒலிக்கும். பாடலை நான் தமிழில் இப்படி மொழிபெயர்த்தேன்.
என்னோடு இரு என்றும்
அந்தி வேகமாகச் சாய்கிறது
இருள் அடர்ந்து கொண்டிருக்கிறது
மற்றவர் உதவி தவறும் போது
சுகங்கள் விட்டு விலகும் போது
உதவியற்றவரின் உதவியே!
ஓ! நீ என்னோடு இரு என்றும்
முடியும் போது வேகத்தில்
வாழ்வின் இந்தச் சிறிய தினம்
அலைகள் போல உள்வாங்குகிறது
உலகின் ஆனந்தம் மங்குகிறது
அதன் பெருமைகள் மங்குகின்றன
மாற்றமும் அழிவும் எங்கும் காண்கின்றன
ஓ! நீ மாறாமல் இருக்கிறாய்
என்னோடு இரு என்றும்
உன்னுடைய இருப்பு
கடந்து செல்லும்
ஒவ்வொரு நாழிகையிலும் வேண்டும்
உனது அருளே சபலத்தின் சக்தியை சாய்க்கும்
உன்னைத் தவிர யார்
எனக்கு வழிகாட்ட?
மேகம் சூழும் போதும்
கதிரொளி வீசும் போதும்
என்னோடு இரு
நான் எதிரியைக் கண்டு அஞ்சவில்லை
உன் கைகள் இருக்குது ஆசி வழங்க
தீமைகள் என்னை அழுத்துவதில்லை
கண்ணீர்த் துளியில் கசப்பில்லை
இறப்பின் கொடுக்கு இருப்பதில்லை
கல்லறையே! உனக்கு வெற்றி இல்லை
நானே வெல்கிறேன் இன்னமும்
இறையே! நீ என்னுடன் இருந்தால்
மூடும் எந்தன் கண்கள் முன்னே
உனது சிலுவையை ஏந்திடு
இருளின் ஊடாக ஒளியைப் பாய்ச்சிடு
விண்ணை நோக்கி விரல்களைச் சுட்டு
சொர்க்கத்தின் காலை புலரட்டும்
பூமியில் நிழல்கள் ஓடட்டும்
வாழ்வில்
சாவில்
இறையே! என்னோடு இரு என்றும்
இந்த வரிகளை எழுதி முடித்ததும் நெஞ்சில் அளவிட முடியாத அமைதி ஊறியது.
இனி இந்தப் பாடல் கொண்டாட்டத்தின்
இறுதியில் ஒலிக்காது. வேறு ஒரு பாடல் இசைக்கப்படும்.
மாறுதல் தானே உலகின் நியதி.
மதி : அருமை, சந்தானம். உடனுக்குடன் burning issue பற்றி நன்கு எழுதியுள்ளாய்.
ReplyDeleteஇந்த பாடல் கிறிஸ்தவ பாடல் புஸ்தகம் " பாமலை"யில் 36 வது பாடலாக தமிழில்
உள்ளது.
நாங்கள் ஆலய ஆராதனையில் பாடுவோம்.
உன் மொழிபெயர்ப்பு அதனை ஒத்து உள்ளது. வாழ்த்துக்கள்.
நன்றி மதி. இது ஆராதனைப் பாடல் என்று தெரியாது. பாடலில் ஒரு பொதுவான தன்மை, universality இருப்பதாகக் கருதுகிறேன்
Delete