Skip to main content

ஏழை படும் பாடு

 பள்ளிக்கு ஆய்வாளர் வரவிருந்தார்.

நான் எட்டாவது வகுப்பில் இருந்தேன். வகுப்பு ஆசிரியைக்கு ஒரு யோசனை.

பாடத்திலிருந்து ஒரு பகுதியை ஆய்வாளர் முன்பு நடித்துக் காட்டலாம் 

என்று. பாடப்பகுதியை நாடகமாக்கி நடித்துக் காட்டும் பொறுப்பை ஆசிரியை என்னிடம் ஒப்படைத்தார். அது ஒரு கதை. சிறு சிறு வசனங்களாகப் பிரித்து ஐந்து நிமிட நாடகமாக்க முடிந்தது. அந்தக் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். சிறை வாசம் முடிந்து அந்த ஊருக்கு வருகிறான் அவன். செய்த குற்றம் ரொட்டித் துண்டை திருடியது. வெகு தூர நடைக்கும் பின் அங்கு வருகிறான். களைத்திருக்கிறான். பசித்திருக்கிறான். கடுங் குளிர். எங்கும் தங்க இடமில்லை. இல்லை.. இடம் தர மனமில்லை. பசிக்கு உணவு தருவாரில்லை. காரணம் அவன் சிறையிலிருந்து மீண்ட குற்றவாளி. நாயைப் போல விரட்டப்படுகிறான். இறுதியில் ஒரு வீட்டை அடைகிறான். தள்ளியவுடன் கதவு திறக்கிறது.  உள்ளே இருப்பது ஒரு பாதிரியார். அவருடைய சகோதரி. உதவிக்கு இருக்கும் ஒரு பெண்மணி. பெண்கள் அவன் தோற்றத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள். பாதிரியாரோ நெடுநாள் பழகிய நண்பனிடம் பேசுவது போல பேசுகிறார். அவன் இரவு தங்க இடமும் உணவும் கேட்கிறான். பணம் இருக்கிறது. சிறையில் உழைத்ததற்கு கிடைத்த கூலி. தருகிறேன் என்கிறான். பாதிரியார் கூறுகிறார். நண்பரே! இது கடவுள் இல்லம். நீங்கள் தங்கலாம். உணவருந்தலாம். பணம் தரத் தேவையில்லை.  வெள்ளித் தட்டில் உணவு பரிமாறப்படுகிறது. பசியாற உண்கிறான். களைப்பு தீர பாதிரியார் அருகிலேயே கட்டிலில் படுத்து உறங்குகிறான். பின்னிரவில் கண் விழிக்கிறான். பாதிரியார் அமைதியாக உறங்குகிறார். மெல்லப் பதுங்கி நடக்கிறான். வெள்ளித் தட்டு மற்றும் கரண்டிகளைக் கவர்கிறான். தோட்டத்தின் வழியே மறைகிறான். விடிந்த சில மணிநேரத்திலேயே காவலரிடம் பிடிபடுகிறான். பாதிரியாரிடம் இழுத்து வருகிறார்கள்.

"நண்பரே! வாருங்கள் இந்த வெள்ளி விளக்குகளை நான் தந்தேனே? எடுத்துச் செல்ல மறந்து விட்டீர்களே? "என்று சொல்கிறார்.  காவலர்கள் கூறுகிறார்கள். "இந்த மனிதன் வெள்ளித் தட்டு தாங்கள் தந்தது என்று சொன்னான். உண்மையே கூறியிருக்கிறான். மன்னியுங்கள் "என்று கூறிச் செல்கின்றனர். பாதிரியார் அந்த மனிதனிடம் சொல்கிறார். "வெள்ளிப் பொருட்களை விற்றுக் காசாக்கி நேர்மையான வாழ்க்கை வாழுங்கள்" என்று. அந்த மனிதனுக்குத் தலை சுற்றுகிறது.



விக்டர் ஹூயூகோ எழுதிய கதை லே மிஸரபிலே (Les Miserables). பிரெஞ்சுக் கதை.  ஜான் வல் ஜான்  என்ற உழைப்பாளி ஏழை ஆனான். ஏழை திருடன் ஆனான். திருடன் மனிதன் ஆனான். இதைச் சொன்ன கதை.

.அதில் ஒரு பகுதிதான் மேலே சொன்னது.  நாடகமாக்க முனைந்தது. இந்தக் கதையை கவியோகி சுத்தானந்த பாரதி தமிழாக்கம் செய்தார். "ஏழை படும் பாடு" என்ற பெயரில். ஜெயகாந்தன் அமெரிக்கா சென்றார். அங்கே "வாழ்வின் மகத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அந்த உரையில் சொன்னார். பள்ளியில் படித்தது ஐந்தாம்  வகுப்பு வரை. நான் படித்தது பாரதியை. புதுமைப் பித்தனை. பின்பு கவியோகி சுத்தானந்த பாரதி எழுதிய ஏழை படும் பாடு.  பின்பு வாழ்க்கையைப் பயின்றது ரிக் ஷாக் காரர்களிடம். எளிய மனிதர்களிடம்.  ஏழை படும் பாடு கதையில் வந்தது போல் ஒரு சம்பவம் ஜெயகாந்தன்

வாழ்வில் நடந்தது. வீட்டில் தென்னை மரம் காய்த்தது. பகலெல்லாம் தேடியும் ஏறிப் பறிக்க ஆள் கிடைக்கவில்லை. "நள்ளிரவு நேரம். ஒருவன் தென்னை மரத்தில் ஏறிக் காய் பறிக்கும் ஓசை. சன்னல் வழியே குரல் கொடுத்தேன்.

அப்பா உன்னைப் பகலெல்லாம் தேடினேன். வரவில்லை.நல்லது இப்போதாவது வந்தாயே. வேண்டியதை எடுத்துக் கொண்டு மிகுதியை விட்டுச் செல் என்றேன். காலையில் ஒவ்வொரு தென்னையின் கீழும் தேங்காய் குவிக்கப்பட்டு இருந்தது. கூலியாகக் கூட அந்த மனிதன் தேங்காய் எடுத்துச் செல்லவில்லையோ என்று மனம் புழுங்கியது" . இப்படி ஜெயகாந்தன் அந்த உரையில் சொன்னார்.





ஏழை படும் பாடு திரைப்படமாக 1950ல் வெளிவந்தது. நாகையா,லலிதா பத்மினி எல்லாம் நடித்திருந்தார்கள். கண்டிப்பான போலீஸ் அதிகாரி ஜாவராக சீதாராமன் நடித்திருந்தார். ஜாவர் சீதாராமன் ஆனார். இவர்பட்டணத்தில் பூதம் என்ற படத்தில் சீபூம்பா வாக நடித்தார்.


சரி. எங்கள் பள்ளி நாடகத்துக்கு வருவோம். ஒத்திகை என்ற பேரில் நாங்கள் பட்ட பாடு வேறு விதம். குறிப்பிட்ட தினத்தில்  வகுப்புக்கு ஆய்வாளர் வந்தார். தலைமை ஆசிரியர் உடனிருந்தார். நாங்கள் தயாராக இருந்தோம். ஆய்வாளர் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். அடுத்த வகுப்புக்குச் சென்று விட்டார். பாதிரியார் வேடம் போட இருந்த நானோ மற்றவர்களோ பெரிதாக வருந்தவில்லை. 


தி சந்தானம்


Comments

  1. //பாதிரியார் வேடம் போட இருந்த நானோ மற்றவர்களோ பெரிதாக வருந்தவில்லை. // 😀😀

    ReplyDelete
  2. அதிலும் முக்கியமாக ரகுபதி வருந்தவில்லை

    ReplyDelete
  3. வேடம் போட்டு தயாராக இருந்தும் என்ன பண்ணுவது. It is a miserable thing only.

    ReplyDelete
  4. வேடமிடவில்லை. சீருடையோடே வசனம் பேசி நடிக்கும் ஓரங்க நாடகம்

    ReplyDelete
  5. ஆய்வாளர் பள்ளிக்கு வருவது என்பது ஒரு சடங்கு தான். கதை அருமையாக இருந்தது. நல்ல பதிவு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...