பள்ளிக்கு ஆய்வாளர் வரவிருந்தார்.
நான் எட்டாவது வகுப்பில் இருந்தேன். வகுப்பு ஆசிரியைக்கு ஒரு யோசனை.
பாடத்திலிருந்து ஒரு பகுதியை ஆய்வாளர் முன்பு நடித்துக் காட்டலாம்
என்று. பாடப்பகுதியை நாடகமாக்கி நடித்துக் காட்டும் பொறுப்பை ஆசிரியை என்னிடம் ஒப்படைத்தார். அது ஒரு கதை. சிறு சிறு வசனங்களாகப் பிரித்து ஐந்து நிமிட நாடகமாக்க முடிந்தது. அந்தக் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். சிறை வாசம் முடிந்து அந்த ஊருக்கு வருகிறான் அவன். செய்த குற்றம் ரொட்டித் துண்டை திருடியது. வெகு தூர நடைக்கும் பின் அங்கு வருகிறான். களைத்திருக்கிறான். பசித்திருக்கிறான். கடுங் குளிர். எங்கும் தங்க இடமில்லை. இல்லை.. இடம் தர மனமில்லை. பசிக்கு உணவு தருவாரில்லை. காரணம் அவன் சிறையிலிருந்து மீண்ட குற்றவாளி. நாயைப் போல விரட்டப்படுகிறான். இறுதியில் ஒரு வீட்டை அடைகிறான். தள்ளியவுடன் கதவு திறக்கிறது. உள்ளே இருப்பது ஒரு பாதிரியார். அவருடைய சகோதரி. உதவிக்கு இருக்கும் ஒரு பெண்மணி. பெண்கள் அவன் தோற்றத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள். பாதிரியாரோ நெடுநாள் பழகிய நண்பனிடம் பேசுவது போல பேசுகிறார். அவன் இரவு தங்க இடமும் உணவும் கேட்கிறான். பணம் இருக்கிறது. சிறையில் உழைத்ததற்கு கிடைத்த கூலி. தருகிறேன் என்கிறான். பாதிரியார் கூறுகிறார். நண்பரே! இது கடவுள் இல்லம். நீங்கள் தங்கலாம். உணவருந்தலாம். பணம் தரத் தேவையில்லை. வெள்ளித் தட்டில் உணவு பரிமாறப்படுகிறது. பசியாற உண்கிறான். களைப்பு தீர பாதிரியார் அருகிலேயே கட்டிலில் படுத்து உறங்குகிறான். பின்னிரவில் கண் விழிக்கிறான். பாதிரியார் அமைதியாக உறங்குகிறார். மெல்லப் பதுங்கி நடக்கிறான். வெள்ளித் தட்டு மற்றும் கரண்டிகளைக் கவர்கிறான். தோட்டத்தின் வழியே மறைகிறான். விடிந்த சில மணிநேரத்திலேயே காவலரிடம் பிடிபடுகிறான். பாதிரியாரிடம் இழுத்து வருகிறார்கள்.
"நண்பரே! வாருங்கள் இந்த வெள்ளி விளக்குகளை நான் தந்தேனே? எடுத்துச் செல்ல மறந்து விட்டீர்களே? "என்று சொல்கிறார். காவலர்கள் கூறுகிறார்கள். "இந்த மனிதன் வெள்ளித் தட்டு தாங்கள் தந்தது என்று சொன்னான். உண்மையே கூறியிருக்கிறான். மன்னியுங்கள் "என்று கூறிச் செல்கின்றனர். பாதிரியார் அந்த மனிதனிடம் சொல்கிறார். "வெள்ளிப் பொருட்களை விற்றுக் காசாக்கி நேர்மையான வாழ்க்கை வாழுங்கள்" என்று. அந்த மனிதனுக்குத் தலை சுற்றுகிறது.
விக்டர் ஹூயூகோ எழுதிய கதை லே மிஸரபிலே (Les Miserables). பிரெஞ்சுக் கதை. ஜான் வல் ஜான் என்ற உழைப்பாளி ஏழை ஆனான். ஏழை திருடன் ஆனான். திருடன் மனிதன் ஆனான். இதைச் சொன்ன கதை.
.அதில் ஒரு பகுதிதான் மேலே சொன்னது. நாடகமாக்க முனைந்தது. இந்தக் கதையை கவியோகி சுத்தானந்த பாரதி தமிழாக்கம் செய்தார். "ஏழை படும் பாடு" என்ற பெயரில். ஜெயகாந்தன் அமெரிக்கா சென்றார். அங்கே "வாழ்வின் மகத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அந்த உரையில் சொன்னார். பள்ளியில் படித்தது ஐந்தாம் வகுப்பு வரை. நான் படித்தது பாரதியை. புதுமைப் பித்தனை. பின்பு கவியோகி சுத்தானந்த பாரதி எழுதிய ஏழை படும் பாடு. பின்பு வாழ்க்கையைப் பயின்றது ரிக் ஷாக் காரர்களிடம். எளிய மனிதர்களிடம். ஏழை படும் பாடு கதையில் வந்தது போல் ஒரு சம்பவம் ஜெயகாந்தன்
வாழ்வில் நடந்தது. வீட்டில் தென்னை மரம் காய்த்தது. பகலெல்லாம் தேடியும் ஏறிப் பறிக்க ஆள் கிடைக்கவில்லை. "நள்ளிரவு நேரம். ஒருவன் தென்னை மரத்தில் ஏறிக் காய் பறிக்கும் ஓசை. சன்னல் வழியே குரல் கொடுத்தேன்.
அப்பா உன்னைப் பகலெல்லாம் தேடினேன். வரவில்லை.நல்லது இப்போதாவது வந்தாயே. வேண்டியதை எடுத்துக் கொண்டு மிகுதியை விட்டுச் செல் என்றேன். காலையில் ஒவ்வொரு தென்னையின் கீழும் தேங்காய் குவிக்கப்பட்டு இருந்தது. கூலியாகக் கூட அந்த மனிதன் தேங்காய் எடுத்துச் செல்லவில்லையோ என்று மனம் புழுங்கியது" . இப்படி ஜெயகாந்தன் அந்த உரையில் சொன்னார்.
ஏழை படும் பாடு திரைப்படமாக 1950ல் வெளிவந்தது. நாகையா,லலிதா பத்மினி எல்லாம் நடித்திருந்தார்கள். கண்டிப்பான போலீஸ் அதிகாரி ஜாவராக சீதாராமன் நடித்திருந்தார். ஜாவர் சீதாராமன் ஆனார். இவர்பட்டணத்தில் பூதம் என்ற படத்தில் சீபூம்பா வாக நடித்தார்.
சரி. எங்கள் பள்ளி நாடகத்துக்கு வருவோம். ஒத்திகை என்ற பேரில் நாங்கள் பட்ட பாடு வேறு விதம். குறிப்பிட்ட தினத்தில் வகுப்புக்கு ஆய்வாளர் வந்தார். தலைமை ஆசிரியர் உடனிருந்தார். நாங்கள் தயாராக இருந்தோம். ஆய்வாளர் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். அடுத்த வகுப்புக்குச் சென்று விட்டார். பாதிரியார் வேடம் போட இருந்த நானோ மற்றவர்களோ பெரிதாக வருந்தவில்லை.
தி சந்தானம்
//பாதிரியார் வேடம் போட இருந்த நானோ மற்றவர்களோ பெரிதாக வருந்தவில்லை. // 😀😀
ReplyDeleteஅதிலும் முக்கியமாக ரகுபதி வருந்தவில்லை
ReplyDeleteவேடம் போட்டு தயாராக இருந்தும் என்ன பண்ணுவது. It is a miserable thing only.
ReplyDelete😂
ReplyDeleteவேடமிடவில்லை. சீருடையோடே வசனம் பேசி நடிக்கும் ஓரங்க நாடகம்
ReplyDeleteஆய்வாளர் பள்ளிக்கு வருவது என்பது ஒரு சடங்கு தான். கதை அருமையாக இருந்தது. நல்ல பதிவு
ReplyDeleteநன்றி ராம்
Delete