அவர் சொன்னார்.
பிறப்பு இறப்பு எல்லாம் வெறும் கோட்பாடுகளே மரணமில்லை.
பயமில்லை. அவை உண்மையில்லை
அவர் பெயர் திக் நியட் ஹன். வியட்நாமைச் சேர்ந்த புத்தத் துறவி. அமைதிச் செயல்பாட்டாளர். கவி. மார்ட்டின் லூதர் கிங்கால் நோபல் அமைதிப் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டவர். திக் நியட் ஹன்னின் ஒவ்வொரு நாடியும்
ஒவ்வொரு நரம்பும் வியட்நாம் போரை எதிர்த்தன. அவர் எழுதினார்.
இதைக் கேட்பவர்களே எனக்குச் சாட்சி
இந்தப் போரை நான் ஏற்கவில்லை.
ஒரு பொழுதும். ஒருபொழுதும் ஏற்க மாட்டேன்.
ஆயிரம் முறை இதைச் சொல்வேன்.
நான் கொல்லப்படுவதன் முன்பு.
நான் ஒரு பறவை.
தனது துணைக்காக உயிர் இழக்கும் பறவை.
இந்தப் பறவையின் உடைந்த அலகுகளிலிருந்து
ரத்தம் சொட்டும்.
அதன் குரல் இப்படி ஒலிக்கும்.
எச்சரிக்கை.
திரும்பிப் பார்.
உன்னுடைய அசலான எதிரிகள்
வன்முறை வெறுப்பு பேராசை
அவர் வியட்நாமிலிருந்து விரட்டப்படுகிறார். பிரான்ஸுக்கு புலம் பெயர்கிறார். பிளம் வில்லேஜ் என்ற இடத்தில் மடாலயத்தை நிறுவுகிறார்.
நடையோடு தியானம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்துகிறார்.
நடையும் மூச்சும் ஒத்திசைவு கொள்ள வேண்டும். முகத்தில் லேசான புன்னகை. நடக்கும்போது.ஒவ்வொரு அடியிலும் லேசாக உணர முடியும். பாதுகாப்பாக உணர முடியும். கவலைகள் துயரங்கள் கழன்று விழும். அமைதியும் ஆனந்தமும் இதயத்தில் நிரம்பி விடும். யாரும் இதைச் செய்யலாம். கொஞ்சம் கவனம். கொஞ்சம் மகிழ்ச்சியாக இருப்பேன் என்ற விழைவு. இவை போதும்.
இவ்வாறு நடை தியானத்திற்காக உருவாக்கிய கையேட்டில் குறிப்பிடுகிறார்.
The long road turns to Joy என்பது அதன் பெயர். இந்தக் கையேடு என்னிடம் இருக்கிறது. மேலும் அவர் எழுதிய Being Peace என்ற புத்தகமும். திக் நியட் ஹன்
பற்றிய எனது முந்தைய பதிவு “புன்னகையும் அமைதியும் “என்ற தலைப்பில் வந்தது. அதில் அவரது சில கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்திருந்தேன்.
மேலும் ஓரிரண்டு மொழிபெயர்ப்புகள் கீழே.
நீரூற்று
கொடியே
நீ உன்னைத் தனியாக உணராதே
இந்த நீரூற்று வருவது
வானத்திலிருந்து
இந்த நீர்தான் உலகாய் அமைகிறது
பல ஜன்மங்களாக
நாம் சேர்ந்துதானே இருக்கிறோம்
நீரும் சூரியனும்
இந்த செடிக்கு பசுமை சேர்க்கிறது
கருணை என்ற மழையில்
பாலைவனம் கூட பெரிய
பசிய கடலாகிவிடும்
நான் புத்தாவிடம் என்னை ஒப்புவிக்கிறேன்
புத்தா என்னிடம் தன்னை
நான் பூமிக்கு என்னை ஒப்புவிக்கிறேன்
பூமி என்னிடம் தன்னை
இன்னொரு கவிதை
வாக்குக் கொடு
வாக்குக் கொடு இந்த நாளில்
மேலே சூரியன் காய்ந்திருக்க
மலை போன்ற வெறுப்பு கொண்டு
மலை போன்ற வன்முறை கொண்டு
உன்னை அவர்கள் தாக்கும்போது
உன்னை அவர்கள் வீழ்த்தும்போது
நினைவு கொள் சகோதரா
மனிதன் நமக்கு எதிரி அல்ல
உனது விழிகளின் கருணை
மலரும் பூவாக உன் புன்னகை
அன்பர்கள் உன்னை நோக்கியபடியே இருப்பர்
ஆயிரம் பிறப்பிலும் இறப்பிலும்
ஒரு வாரம் முன்பு டிவி சானல்கள் வேக வேகமாக மாறும்போது ஓரு ஆங்கில
சானலில் மின்னலாக ஒரு செய்தி ஓடி மறைந்தது. அது திக் நியட் ஹன் தனது 95வது வயதில் வியடநாமில் மறைந்த செய்தி.
அவருடைய ஒரு கவிதையின் துவக்க வரி இவ்வாறு
நாளை நான் கிளம்புகிறேன் என்று சொல்லாதே
ஏனென்றால் இன்று கூட நான் வந்தபடி இருக்கிறேன்
ஆமாம். ஞானிகள் கிளம்பிச் செல்வதில்லை. வருகை தந்தபடியே இருக்கிறார்கள்
தி சந்தானம்
நல்ல கவிதைகள். சந்தானத்தின் ஒவ்வொறு பதிவும் பொலிவேறிக் கொண்டிருக்கின்றன. வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி ராம். தொடர்ந்து படிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும்
Deleteராம் Being Peace என்ற புத்தகத்தை வாங்க ஆசை. கையில் காசு போதவில்லை. நீங்கள் தான் சட்டையின் உட்புற பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்துத் தந்து வாங்கிக் கொள்ளச் சொன்னீர்கள்
ReplyDeleteஅவ்வளவு நினைவில்லை.
Delete