Skip to main content

மரணமில்லை பயமில்லை

 அவர் சொன்னார்.

பிறப்பு இறப்பு எல்லாம் வெறும் கோட்பாடுகளே  மரணமில்லை.

பயமில்லை. அவை உண்மையில்லை 

அவர் பெயர் திக் நியட் ஹன். வியட்நாமைச் சேர்ந்த புத்தத் துறவி. அமைதிச் செயல்பாட்டாளர். கவி. மார்ட்டின் லூதர் கிங்கால்  நோபல் அமைதிப் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டவர். திக் நியட் ஹன்னின் ஒவ்வொரு நாடியும்

ஒவ்வொரு நரம்பும் வியட்நாம் போரை எதிர்த்தன. அவர் எழுதினார்.


இதைக் கேட்பவர்களே எனக்குச் சாட்சி

இந்தப் போரை நான் ஏற்கவில்லை.

ஒரு பொழுதும். ஒருபொழுதும் ஏற்க மாட்டேன்.

ஆயிரம் முறை இதைச் சொல்வேன்.

நான் கொல்லப்படுவதன் முன்பு.

நான் ஒரு பறவை.

தனது துணைக்காக உயிர் இழக்கும் பறவை.

இந்தப் பறவையின் உடைந்த அலகுகளிலிருந்து 

ரத்தம் சொட்டும்.

அதன் குரல் இப்படி ஒலிக்கும்.

எச்சரிக்கை.

திரும்பிப் பார்.

உன்னுடைய அசலான எதிரிகள்

 வன்முறை வெறுப்பு பேராசை





 அவர் வியட்நாமிலிருந்து விரட்டப்படுகிறார். பிரான்ஸுக்கு புலம் பெயர்கிறார். பிளம் வில்லேஜ் என்ற இடத்தில் மடாலயத்தை நிறுவுகிறார்.

நடையோடு தியானம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்துகிறார்.


 நடையும் மூச்சும் ஒத்திசைவு கொள்ள வேண்டும்.  முகத்தில் லேசான புன்னகை. நடக்கும்போது.ஒவ்வொரு அடியிலும் லேசாக உணர முடியும். பாதுகாப்பாக உணர முடியும். கவலைகள் துயரங்கள் கழன்று விழும். அமைதியும் ஆனந்தமும் இதயத்தில் நிரம்பி விடும். யாரும் இதைச் செய்யலாம். கொஞ்சம் கவனம். கொஞ்சம் மகிழ்ச்சியாக இருப்பேன் என்ற விழைவு. இவை போதும்.


இவ்வாறு நடை தியானத்திற்காக உருவாக்கிய கையேட்டில் குறிப்பிடுகிறார்.

The long road turns to Joy என்பது அதன் பெயர். இந்தக் கையேடு என்னிடம் இருக்கிறது. மேலும் அவர் எழுதிய Being Peace என்ற புத்தகமும்.  திக் நியட் ஹன்

பற்றிய எனது முந்தைய பதிவு “புன்னகையும் அமைதியும் “என்ற தலைப்பில் வந்தது. அதில் அவரது சில கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்திருந்தேன்.

மேலும் ஓரிரண்டு மொழிபெயர்ப்புகள் கீழே.





நீரூற்று


கொடியே

நீ உன்னைத் தனியாக உணராதே

இந்த நீரூற்று வருவது

வானத்திலிருந்து


இந்த நீர்தான் உலகாய் அமைகிறது


பல ஜன்மங்களாக

நாம் சேர்ந்துதானே இருக்கிறோம்


நீரும் சூரியனும்

இந்த செடிக்கு பசுமை சேர்க்கிறது


கருணை என்ற மழையில்

பாலைவனம்  கூட பெரிய

பசிய கடலாகிவிடும்


நான் புத்தாவிடம் என்னை ஒப்புவிக்கிறேன்

புத்தா என்னிடம் தன்னை


நான் பூமிக்கு  என்னை ஒப்புவிக்கிறேன்

பூமி என்னிடம் தன்னை




இன்னொரு கவிதை


வாக்குக் கொடு

வாக்குக் கொடு இந்த நாளில்


மேலே சூரியன் காய்ந்திருக்க


மலை போன்ற வெறுப்பு கொண்டு

மலை போன்ற வன்முறை கொண்டு

உன்னை அவர்கள் தாக்கும்போது

உன்னை அவர்கள் வீழ்த்தும்போது


நினைவு கொள் சகோதரா

மனிதன் நமக்கு எதிரி அல்ல


உனது விழிகளின் கருணை

மலரும் பூவாக உன் புன்னகை

அன்பர்கள் உன்னை நோக்கியபடியே இருப்பர்

ஆயிரம் பிறப்பிலும் இறப்பிலும்


ஒரு வாரம் முன்பு டிவி சானல்கள்  வேக வேகமாக மாறும்போது ஓரு ஆங்கில

சானலில் மின்னலாக ஒரு செய்தி ஓடி மறைந்தது. அது திக் நியட் ஹன் தனது 95வது வயதில் வியடநாமில் மறைந்த செய்தி.


அவருடைய ஒரு கவிதையின் துவக்க வரி இவ்வாறு


நாளை நான் கிளம்புகிறேன் என்று சொல்லாதே

ஏனென்றால் இன்று கூட நான் வந்தபடி இருக்கிறேன்


ஆமாம். ஞானிகள் கிளம்பிச் செல்வதில்லை. வருகை தந்தபடியே இருக்கிறார்கள்



தி சந்தானம்






Comments

  1. நல்ல கவிதைகள். சந்தானத்தின் ஒவ்வொறு பதிவும் பொலிவேறிக் கொண்டிருக்கின்றன. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ராம். தொடர்ந்து படிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும்

      Delete
  2. ராம் Being Peace என்ற புத்தகத்தை வாங்க ஆசை. கையில் காசு போதவில்லை. நீங்கள் தான் சட்டையின் உட்புற பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்துத் தந்து வாங்கிக் கொள்ளச் சொன்னீர்கள்

    ReplyDelete
    Replies
    1. அவ்வளவு நினைவில்லை.

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...