30.1.1948. மாலைப் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு காந்தி செல்கிறார்.
அவருக்கு இருபுறம் பெண்கள் அபா மனு. மணி 5.20. மூன்று தோட்டாக்கள்.
நெஞ்சில். வயிற்றில். காந்தி கீழே சரிகிறார். ஹே ராம். அவர் உதடுகளிலிருந்து வார்த்தை பிரிகிறது.
காந்தியின் மறைவுச் செய்தியை அப்பா வானொலிப் பெட்டியில் கேட்டிருக்கிறார். அப்போது அவர் சென்னையில் இருந்திருக்கிறார். சைதாப்பேட்டையில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி இருந்தது. அங்கே அவர் படித்துக் கொண்டிருந்த காலம் அது. பெரிய கட்டிடம். இப்போது இல்லை. காந்தி பேசும் கூட்டத்திற்கு அப்பா போயிருக்க வேண்டும். காந்தி பேசும் போது கூட்டத்தில் ஒவ்வொருவரோடும் தனியே பேசுவது போல இருக்கும். இப்படி அப்பா சொல்வார். காந்தியின் குரல் எப்படி இருக்கும் என்று நான் யோசிப்பேன்.
அம்மா கரம் சந்த்ர மோ...ஹனதாஸ் காந்தீ… என்று துவங்கும் பாடலைப் பாடுவார்கள். அம்மா பாடக் கேட்டு சிறு வயதில் நானும் பாடுவேன். முழுப் பாடல் இப்போது மறந்து விட்டது.கெடுமதியாளர் தம் கொடுமைகள் சகித்தாய்… விடுதலை தந்தாய்… முடிவிலாக் கீர்த்தி கொண்டாய் பா..பூ..ஜீ.. என்றெல்லாம் வரிகள். அம்மா உருகிப் பாடுவார் மெல்லிய குரலில்..
பத்து வயது இருக்கும். எங்கள் வகுப்பு மாணவ மாணவிகளை காந்தி மியூசியத்திற்கு கூட்டிச் சென்றார்கள். அன்று பூராவும் காந்தியைப் பற்றி பாடம். எல்லோருக்கும் ஒரு புத்தகம். முகப்பில் காந்தியின் கோட்டுச் சித்திரம். நேர்த்தியாக அச்சிடப்பட்ட பக்கங்கள். வரி வரியாக அத்தியாயம் அத்தியாயமாக காந்தியின் வாழ்க்கை.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு சித்திரம். கோபுலு வரைந்திருந்தார். அதில் ஒரு சித்திரம் இன்றளவும் ஞாபகம் இருக்கிறது. காந்தி சிறு வயதில் தவறுகள் செய்கிறார். மனம் வருந்துகிறார். அப்பா கரம்சந்த் படுத்த படுக்கையாகி விட்டார். அவரிடம் நேரே சென்று சொல்ல பயம். ஒரு கடிதமாக எழுதி அப்பாவிடம் தருகிறார். இந்தக் காட்சியை கோபுலு உயிரோட்டமாக வரைந்திருப்பார். சிறுவன் மோகன் கைகளால் முகத்தை மூடிக் கொண்டிருப்பான். கட்டிலில் படுத்த நிலையில் கடிதத்தைப் படிப்பவராய் கரம்சந்த். நாள் முடிந்தபோது மனமெல்லாம் காந்தி இருந்தார். ஒரு சிறு தேர்வு வைத்தார்கள். சான்றிதழ் தந்தார்கள். எல்லோருக்கும் பருக பால் தந்தார்கள். காந்தியின் நினைவைப் பேணும் அமைப்பால் இதெல்லாம் நடந்தது.
1983. ரிச்சர்டு ஆட்டன்பரோ எடுத்த காந்தி திரைப்படம் பார்த்தேன். அலுவலக நண்பர்களோடு. படத்தின் துவக்கத்தில் காந்தி சுடப்படும் காட்சி வரும். இறுதியிலும் வரும். பின்னணி இசை பதைக்க வைக்கும். ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று உணர்த்துவதாய் இருக்கும்.
இதற்குப் பிறகு பல்வேறு சந்தர்ப்பங்கள். பலரோடும் ஒருமித்த உணர்வு கொண்டவர்களோடும் பார்க்க வாய்த்தது. ஒவ்வொன்றும் மறக்கமுடியாத அனுபவம். காந்தியின் நினைவைப் பேணும் அனுபவம்.
இந்த பதிவு போட்ட நாள் நினைவு கூறத்தக்கது. எனது தாத்தா காந்தியை நேரில் பார்த்திருக்கிறார். எனது சிறு வயதில் அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். காந்தி திரைப்படம் நாம் சேர்ந்து பார்த்த நினைவு. நல்ல பதிவு
ReplyDeleteநன்றி ராம் படித்ததற்கும் நினைவு கூர்ந்ததற்கும்
Deleteகாந்தியைப் பற்றி ஒரு கலவையான மனநிலை எனக்கு. சிறு வயதில் ஒரு பிம்பம், வளர்ந்து தெரிந்து கொண்டவை வைத்து ஒரு பிம்பமென. ஆனால் படித்து அறிந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கு. நேரமும் வாய்ப்பும் அமைய வேண்டும்.
ReplyDeleteபிம்பங்கள் பின்னே செல்லாமல் உண்மையை நோக்கி நடத்தல் நலம். நேரமும் வாய்ப்பும் அமையட்டும்
Delete