உலகமே பெரிய கனவு. அந்தக் கனவிலும் ஒரு கனவு.
உண்டு உறங்கி இடர் செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்வு. ஒளி பொருந்திய நெற்றியில் திலகம் அணிந்த பெண்ணிடம் கொள்ளும் மையல் தெய்வீக கனவு. அது சில தினங்கள் ஆனாலும் உயிர்க்கு அமுதம் சேர்க்கிறது. இப்படிச் சொன்னது பாரதி.
பாரதி ஸ்வசரிதை என்று ஒரு செய்யுள் நூலை 1910ம் ஆண்டு பதிப்பித்தார்-
கதாநாயகன் தன் கதையைத் தானே சொல்லும் நடை. இது நவீனமானது
என்று நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இதில் தான் தனது பிள்ளைக் காதலைப் பற்றிப் பேசுகிறார். அதை ஒருவாறு சொல்ல முற்படுவோம்.
அந்தப் பெண்ணிற்கு ஒன்பது வயது. காவியத்தில் வரும் சகுந்தலை போன்றவள். இதைக் கேட்பவர் வியக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. அன்பு என்னும் பெருவெள்ளம் இழுக்கிறது. தப்புவது எப்படி? குமரகுருருபரன், சம்பந்தன், துருவன் போன்றோர் பிள்ளைப்பருவத்தில் கடவுள் மீது பக்தி செலுத்தினர். ஆனால் பாரதியோ காதல் வயப்பட்டார். அந்தப் பெண் தண்ணீர் எடுக்க வருகிறாள். முத்துப் போல அவள் புன்னகை சுடர் விடுகிறது. பாரதி அவள் வருகைக்குக் காத்திருக்கிறார். பார்க்கிறார். இப்படியே நாட்கள் கழிகின்றன. பூத்த ஜோதி வதனம் திரும்புமேல் புலன் அழிந்து ஒரு புத்துயிர் எய்துவேன் என்கிறார்.
புலன்களோடு உயிர் சேர்ந்த இயல்பான விருப்பம் நிறைவேறியே தீரும். அது இல்லாமல் ஆடு போல ஓன்றை விட்டு ஒன்றில் மேல் தாவும் மனம் படைத்தவர் விருப்பம் நிறைவேறுதல் கடினம். இந்தப் பெண்ணின் மீது கொண்ட காதலால் கவலை வந்து சேருகிறது. அது ஒரு கோடியாகப் பெருகுகிறது. பாரதி மேலும் கூறுகிறார். காதல் கடலிலே வரும் விஷம், ஒருபுறம் மட்டும் இருந்தால். அதுவே இருபுறமும் இருந்தால் இனிய அமிர்தம். சந்திரனை மேகம் மறைக்கிறது. மலரைப் பனி மூடுகிறது. பாலில் வேம்பு கலக்கிறது. கைக்கிளை அதாவது ஒருதலைக் காதல் அப்படித்தான். பெருந்துயரில் முடிகிறது.
பாரதியின் சகுந்தலை அவர் மீது அன்பு செலுத்துகிறாள். காட்டில் உள்ள பறவைகள் போல் அவர்கள் காதல் புரிகின்றனர். ஒரு திருவாதிரை நாள். சிவன் கோவிலில் ஒரு மண்டபம் இருக்கிறது. அங்கே தனித்து இருவரும் வார்த்தையாடிக் கொண்டிருக்கின்றனர். பாதிப் பேச்சிலே அவள் எங்கோ மறைகிறாள். திரும்ப வருகிறாள். அவள் கையில் மை இருக்கிறது. நான் பொட்டு வைப்பேன் என்கிறாள். திலகம் இட்டனள், செய்கை அழிந்தனன் என்கிறார் பாரதி. பிறகு தாய்வழிப் பாட்டன் பூசை முடித்து வைத்திருந்த அர்ச்சனைப் பூக்களை அவளிடம் தருகிறார். அவளும் பூப்போல சிரிக்கிறாள். பாரதி இந்த இடத்தில் தனது காதல் கதையை நிறுத்தி விடுகிறார். பின்பு திருநெல்வேலிக்கு தான் படிக்கப் போனதைக் கூறுகிறார்.
காதல் ஒரு சின்ன மேகம் போல வாழ்வின் சிறு பகுதியில் கடந்து போகிறது. அதனுடைய தண்மை மனதில் தங்கி விடுகிறது.
எண்பதுகளில் கனவுகள் கற்பனைகள் என்று ஒரு திரைப்படம் வந்தது. உளவியல் சிக்கல்களைப் பேசிய படம். அதில் ஒரு பாரதியின் பாட்டு.
கேட்கலாம்.
மதி : 👌🏻
ReplyDeleteபாரதியார் படத்தில் ஞானசேகரன் இதை நன்கு எடுத்திருப்பார்.
கனவுகள் கற்பனைகள் படம் நான் பார்க்கவில்லை.
1983 - 87, நிறைய நல்ல படங்கள் பார்க்கவில்லை.
ஆனால் பாட்டு மு. மேத்தா அந்தப் பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. மயில் போல என்ற பாட்டு. பாடகி பவதாரிணிக்கு
Deleteகனவுகள் கற்பனைகள் படம் பார்த்த மாதிரி நினைவு. நல்ல பாடல். இதற்குப் பின் கவிஞர் மேத்தாவிற்கு கவிஞர்மீரா தலைமையில் ymca அரங்கில் பாராட்டுக் கூட்டம் நடந்தது. அதில் நானும் சந்தானமும் கலந்து கொண்டதாக நினைவு. பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ராம். YMCA அரங்கில் அப்துல் ரகுமானுக்கு ஒரு பாராட்டு விழா நடந்தது. அதிலும் கலந்து கொண்டோம்
Deleteகொஞ்சம் பொறாமையாக இருக்கிறது. இது மாதிரி எந்த நிகழ்வுக்குமே நான் சென்றதில்லை வாழ்வில். ஆண்களுக்கான வசதி . நினைத்த நேரத்தில் நண்பர்களுடன் கிளம்ப முடியும்.😀😀
Deleteநியாயம் தான்
ReplyDeleteஅதாவது பொறாமை
ReplyDelete