Skip to main content

பாரதியின் காதல்

  உலகமே பெரிய கனவு. அந்தக் கனவிலும் ஒரு கனவு.

உண்டு உறங்கி இடர் செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்வு. ஒளி பொருந்திய நெற்றியில் திலகம் அணிந்த பெண்ணிடம் கொள்ளும் மையல் தெய்வீக கனவு. அது சில தினங்கள் ஆனாலும் உயிர்க்கு அமுதம் சேர்க்கிறது. இப்படிச் சொன்னது பாரதி.



பாரதி ஸ்வசரிதை என்று ஒரு செய்யுள் நூலை 1910ம் ஆண்டு பதிப்பித்தார்-

கதாநாயகன் தன் கதையைத் தானே சொல்லும் நடை. இது நவீனமானது

என்று நூலின் முன்னுரையில்  குறிப்பிடுகிறார். இதில் தான் தனது பிள்ளைக் காதலைப் பற்றிப் பேசுகிறார்.  அதை ஒருவாறு சொல்ல முற்படுவோம்.


 அந்தப் பெண்ணிற்கு ஒன்பது வயது. காவியத்தில் வரும் சகுந்தலை போன்றவள். இதைக் கேட்பவர் வியக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. அன்பு என்னும் பெருவெள்ளம் இழுக்கிறது. தப்புவது எப்படி?  குமரகுருருபரன், சம்பந்தன், துருவன் போன்றோர் பிள்ளைப்பருவத்தில் கடவுள் மீது பக்தி செலுத்தினர். ஆனால் பாரதியோ காதல் வயப்பட்டார்.  அந்தப் பெண் தண்ணீர் எடுக்க வருகிறாள்.  முத்துப் போல அவள் புன்னகை சுடர் விடுகிறது. பாரதி அவள் வருகைக்குக் காத்திருக்கிறார். பார்க்கிறார். இப்படியே நாட்கள் கழிகின்றன. பூத்த ஜோதி வதனம் திரும்புமேல் புலன் அழிந்து ஒரு புத்துயிர் எய்துவேன் என்கிறார்.


புலன்களோடு உயிர் சேர்ந்த இயல்பான விருப்பம் நிறைவேறியே தீரும். அது இல்லாமல் ஆடு போல ஓன்றை விட்டு ஒன்றில் மேல் தாவும் மனம் படைத்தவர் விருப்பம் நிறைவேறுதல் கடினம். இந்தப் பெண்ணின் மீது கொண்ட காதலால் கவலை வந்து சேருகிறது. அது ஒரு கோடியாகப் பெருகுகிறது. பாரதி மேலும் கூறுகிறார்.  காதல் கடலிலே வரும் விஷம், ஒருபுறம் மட்டும் இருந்தால். அதுவே இருபுறமும் இருந்தால் இனிய அமிர்தம். சந்திரனை மேகம் மறைக்கிறது. மலரைப் பனி மூடுகிறது. பாலில் வேம்பு கலக்கிறது. கைக்கிளை அதாவது ஒருதலைக் காதல் அப்படித்தான். பெருந்துயரில் முடிகிறது.


பாரதியின் சகுந்தலை அவர் மீது அன்பு செலுத்துகிறாள். காட்டில் உள்ள பறவைகள் போல் அவர்கள் காதல் புரிகின்றனர். ஒரு திருவாதிரை நாள். சிவன் கோவிலில் ஒரு மண்டபம் இருக்கிறது. அங்கே தனித்து இருவரும் வார்த்தையாடிக் கொண்டிருக்கின்றனர். பாதிப் பேச்சிலே அவள் எங்கோ மறைகிறாள். திரும்ப வருகிறாள். அவள் கையில் மை இருக்கிறது. நான் பொட்டு வைப்பேன் என்கிறாள். திலகம் இட்டனள், செய்கை அழிந்தனன் என்கிறார் பாரதி.  பிறகு தாய்வழிப் பாட்டன் பூசை முடித்து வைத்திருந்த அர்ச்சனைப் பூக்களை அவளிடம் தருகிறார். அவளும் பூப்போல சிரிக்கிறாள். பாரதி இந்த இடத்தில் தனது காதல் கதையை நிறுத்தி விடுகிறார். பின்பு திருநெல்வேலிக்கு தான் படிக்கப் போனதைக் கூறுகிறார்.


காதல் ஒரு சின்ன மேகம் போல வாழ்வின் சிறு பகுதியில் கடந்து போகிறது. அதனுடைய தண்மை மனதில் தங்கி விடுகிறது.


எண்பதுகளில் கனவுகள் கற்பனைகள் என்று ஒரு திரைப்படம் வந்தது. உளவியல் சிக்கல்களைப் பேசிய படம். அதில் ஒரு பாரதியின் பாட்டு.


கேட்கலாம்.





Comments

  1. மதி : 👌🏻
    பாரதியார் படத்தில் ஞானசேகரன் இதை நன்கு எடுத்திருப்பார்.
    கனவுகள் கற்பனைகள் படம் நான் பார்க்கவில்லை.
    1983 - 87, நிறைய நல்ல படங்கள் பார்க்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் பாட்டு மு. மேத்தா அந்தப் பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. மயில் போல என்ற பாட்டு. பாடகி பவதாரிணிக்கு

      Delete
  2. கனவுகள் கற்பனைகள் படம் பார்த்த மாதிரி நினைவு. நல்ல பாடல். இதற்குப் பின் கவிஞர் மேத்தாவிற்கு கவிஞர்மீரா தலைமையில் ymca அரங்கில் பாராட்டுக் கூட்டம் நடந்தது. அதில் நானும் சந்தானமும் கலந்து கொண்டதாக நினைவு. பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம். YMCA அரங்கில் அப்துல் ரகுமானுக்கு ஒரு பாராட்டு விழா நடந்தது. அதிலும் கலந்து கொண்டோம்

      Delete
    2. கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது. இது மாதிரி எந்த நிகழ்வுக்குமே நான் சென்றதில்லை வாழ்வில். ஆண்களுக்கான வசதி . நினைத்த நேரத்தில் நண்பர்களுடன் கிளம்ப முடியும்.😀😀

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...