அவர் சொன்னார். நானே உண்மையாக இருக்கிறேன் என்று. அவர் பெயர் மன்சூர் அல் ஹல்லஜ். பாரசீகத்தைச் சேர்ந்தவர். சூஃபி அறிஞர். சூஃபி என்பது கடவுளுடன் ஆன அன்பு. தெய்வீக உறவு. கடவுளை ஒவ்வொருவரும் தானே அனுபவித்து அறிவது. இதைத்தான் சூஃபிக்கள் மக்களிடையே பரப்பினர். கவிதையால், பேச்சால், எழுத்தால். அதைத்தான் மன்சூர் செய்தார்.
மன்சூர் பிறந்தது ஒன்பதாம் நூற்றாண்டு மத்தியில். ஈரானில். மறைந்தது அடுத்த நூற்றாண்டின் இருபத்தியிரண்டாம் வருடம் ஈராக்கில். நானே உண்மை என்று அவர் சொன்னதை மேலே பார்த்தோம். அவர் அத்தோடு நிற்கவில்லை. உங்கள் நெஞ்சங்களிலே காபாவை எழுப்பிக் கொள்ளுங்கள் என்றார். காபா என்பது இஸ்லாமியரின் தொழுகை இடம். மெக்காவில் இருப்பது. நானே உண்மை என்று அவர் சொன்னது நானே கடவுள் என்று அவர் சொன்னதாகக் கருதப்பட்டது. அதனாலேயே அவர் தண்டிக்கப்பட்டார்.
தண்டனை பாக்தாத் நகரில் யூப்ரடீஸ் ந்திக்கரையில் மக்கள் பார்க்க நிறைவேற்றப்பட்டது. அவரை ஊன் ஊனாகச் சிதைத்தார்கள். அவர் சிரித்தபடியே இருந்தார். அவர் கண்கள் சிரித்தன. கண்களைப் பிடுங்கினார்கள். அவருடைய மொத்த இருப்பும் சிரித்தபடி இருந்தது. தண்டனை நிறைவேற்றி முடிக்கும் வரை.
மன்சூரின் கவிதைகள் எனக்கு ஆங்கிலத்தில் படிக்கக் கிடைத்தன. அவற்றை தமிழில் செய்தேன். அவை வருமாறு.
1. அன்பெனும் பெருங்கடலிலே
நீந்துவதை நான் நிறுத்துவதில்லை
அலையோடு எழுந்து
அலையோடு விழுந்து
எனது இருத்தல் அலைகளோடு
எனது அமிழ்தல் அலைகளோடு
அன்பு என்னை ஏந்திச் செல்லும்
எங்கே கரைகள் இல்லையோ அங்கு
2. நான் தான் அவன்
நான் விரும்பும் அவன்
அவன் தான் நான்
அவனை விரும்பும் நான்
நாங்கள் ஈருயிர் ஓருடல்
என்னைக் கண்டால்
அவனைக் காண்பீர்
அவனைக் கண்டால் எம்மிருவரையும்
3. உனது பிரார்த்தனை என் உதடுகளில்
உனது இருப்பிடம் என் இதயம்
நீ எப்படி இல்லாது போவாய்?
4. உன் பொருட்டு
நிலத்தின் மேலும் நீரின் மேலும்
நான் விரைகிறேன்
உன் பொருட்டு பாலையைக் கடக்கிறேன்
மலையை இரண்டாகப் பிளக்கிறேன்
எல்லாப் பொருட்களிடமிருந்தும்
எனது முகத்தைத் திருப்பிக் கொள்கிறேன்
உன்னோடு தனித்து இருக்கும் இடத்தை
நான் அடைகின்ற அத்தருணம் வரை
5. நண்பர்களே
நம்பிக்கைக்கு உரியவர்களே
கொன்றுவிடுங்கள் என்னை
கொல்லப்படுவதில் தான் என் வாழ்வு
அன்பு என்பது அன்புக்குரியவர் முன்னே நிற்பது
உனது தன்மை எல்லாம் களைந்தால்
அவனது தன்மை உனது குணங்கள்
எனக்கும் உனக்கும் நடுவே நான் மட்டிலுமே
என்னை எடுத்துச் சென்றுவிடு
நீ மட்டும் எஞ்சும் வண்ணம்
எத்தனை ஆழம்! எத்தனை நுட்பம்!! தன்மைகள் எல்லாம் களைந்து கரையற்ற பெருவெளிக்கு நம்மை இட்டுச் செல்கின்றன அல்லவா?
தி சந்தானம்
மதி :
ReplyDeleteஇஸ்லாமியர்களில் ஒரு பகுதியினர் மன்சூர்,
நபிகள் நாயகத்திற்க்குப்பின்
வந்த இறைத்தூதன் என்று இப்போதும் நம்புகின்றனர்.
தமிழ் மொழிபெயர்ப்பு அருமை.
நன்றி மதி
Deleteஉன்னுடைய பதிவுகள் படிக்க படிக்க எனக்கும் மொழிபெயர்க்க ஆசை வருகிறது. அழகாக மொழி பெயர்க்கிறாய்
ReplyDeleteநன்றிகள் பல. நீயும் செய்யலாமே
Deleteஅருமையான மொழி பெயர்ப்பு. சூபிக்கள் பற்றி தெரிந்து கொள்ள ஆவல். இன்று விளக்கம் கிடைத்தது. நன்றி சந்தானம்.
ReplyDeleteநன்றி ராம் படித்ததற்கும் கருத்தைப் பதிவிட்டதற்கும்
Delete