Skip to main content

நான் தான் அவன்

 

அவர் சொன்னார். நானே உண்மையாக இருக்கிறேன் என்று. அவர் பெயர் மன்சூர் அல் ஹல்லஜ். பாரசீகத்தைச் சேர்ந்தவர். சூஃபி அறிஞர். சூஃபி என்பது கடவுளுடன் ஆன அன்பு. தெய்வீக உறவு. கடவுளை ஒவ்வொருவரும் தானே அனுபவித்து அறிவது. இதைத்தான் சூஃபிக்கள் மக்களிடையே பரப்பினர். கவிதையால், பேச்சால், எழுத்தால். அதைத்தான் மன்சூர் செய்தார்.

மன்சூர் பிறந்தது ஒன்பதாம் நூற்றாண்டு மத்தியில். ஈரானில். மறைந்தது அடுத்த நூற்றாண்டின் இருபத்தியிரண்டாம் வருடம் ஈராக்கில்.  நானே உண்மை என்று அவர் சொன்னதை மேலே பார்த்தோம். அவர் அத்தோடு நிற்கவில்லை. உங்கள் நெஞ்சங்களிலே காபாவை எழுப்பிக் கொள்ளுங்கள் என்றார். காபா என்பது இஸ்லாமியரின் தொழுகை இடம். மெக்காவில் இருப்பது.  நானே உண்மை என்று அவர் சொன்னது நானே கடவுள் என்று  அவர் சொன்னதாகக் கருதப்பட்டது. அதனாலேயே அவர் தண்டிக்கப்பட்டார். 

தண்டனை பாக்தாத் நகரில் யூப்ரடீஸ் ந்திக்கரையில் மக்கள் பார்க்க நிறைவேற்றப்பட்டது. அவரை ஊன் ஊனாகச் சிதைத்தார்கள். அவர் சிரித்தபடியே இருந்தார். அவர் கண்கள் சிரித்தன. கண்களைப் பிடுங்கினார்கள். அவருடைய மொத்த இருப்பும் சிரித்தபடி இருந்தது. தண்டனை நிறைவேற்றி முடிக்கும் வரை.

மன்சூரின் கவிதைகள் எனக்கு ஆங்கிலத்தில் படிக்கக் கிடைத்தன. அவற்றை தமிழில் செய்தேன். அவை வருமாறு.


1.  அன்பெனும் பெருங்கடலிலே

      நீந்துவதை நான் நிறுத்துவதில்லை

      அலையோடு எழுந்து

      அலையோடு விழுந்து

      எனது இருத்தல் அலைகளோடு

      எனது அமிழ்தல் அலைகளோடு

      அன்பு என்னை ஏந்திச் செல்லும்

       எங்கே கரைகள் இல்லையோ  அங்கு


2.    நான் தான் அவன்

       நான் விரும்பும் அவன்

       அவன் தான் நான்

       அவனை விரும்பும் நான்

       நாங்கள் ஈருயிர் ஓருடல்

       என்னைக் கண்டால்

       அவனைக் காண்பீர் 

       அவனைக் கண்டால் எம்மிருவரையும்

    

3.    உனது பிரார்த்தனை என் உதடுகளில்

        உனது இருப்பிடம் என் இதயம்

        நீ எப்படி இல்லாது போவாய்?


4.     உன் பொருட்டு

        நிலத்தின் மேலும் நீரின் மேலும்

        நான் விரைகிறேன்

        உன் பொருட்டு பாலையைக் கடக்கிறேன்

        மலையை இரண்டாகப் பிளக்கிறேன்

        எல்லாப் பொருட்களிடமிருந்தும்

        எனது முகத்தைத் திருப்பிக் கொள்கிறேன்

        உன்னோடு தனித்து இருக்கும் இடத்தை

        நான் அடைகின்ற அத்தருணம் வரை


 5.   நண்பர்களே

       நம்பிக்கைக்கு உரியவர்களே 

       கொன்றுவிடுங்கள் என்னை

       கொல்லப்படுவதில் தான் என் வாழ்வு

       அன்பு என்பது அன்புக்குரியவர் முன்னே நிற்பது

        உனது தன்மை எல்லாம் களைந்தால்

        அவனது தன்மை உனது குணங்கள்

        எனக்கும் உனக்கும் நடுவே நான் மட்டிலுமே 

        என்னை எடுத்துச் சென்றுவிடு 

        நீ மட்டும் எஞ்சும் வண்ணம்


எத்தனை ஆழம்! எத்தனை நுட்பம்!! தன்மைகள் எல்லாம் களைந்து கரையற்ற பெருவெளிக்கு நம்மை இட்டுச் செல்கின்றன அல்லவா?


தி சந்தானம்



Comments

  1. மதி :
    இஸ்லாமியர்களில் ஒரு பகுதியினர் மன்சூர்,
    நபிகள் நாயகத்திற்க்குப்பின்
    வந்த இறைத்தூதன் என்று இப்போதும் நம்புகின்றனர்.
    தமிழ் மொழிபெயர்ப்பு அருமை.

    ReplyDelete
  2. உன்னுடைய பதிவுகள் படிக்க படிக்க எனக்கும் மொழிபெயர்க்க ஆசை வருகிறது. அழகாக மொழி பெயர்க்கிறாய்

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் பல. நீயும் செய்யலாமே

      Delete
  3. அருமையான மொழி பெயர்ப்பு. சூபிக்கள் பற்றி தெரிந்து கொள்ள ஆவல். இன்று விளக்கம் கிடைத்தது. நன்றி சந்தானம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம் படித்ததற்கும் கருத்தைப் பதிவிட்டதற்கும்

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...