பட்டாம் பூச்சிகள் அலைந்தபடியே இருக்கும். செடிகள் மீதும் சின்னப் பூக்களின் மேலும். மெதுவாக நெருங்கி சிறகைப் பிடித்தால் மற்றொரு சிறகு படபடக்கும். விடுபடத் துடிக்கும். கைகளில் குறுகுறுக்கும். சிறகின் வண்ணங்கள் எண்ணெய் பிசுபிசுப்பாய் கைகளில் சேரும். வண்ணத்தைப் பார்க்கும் போது பட்டாம் பூச்சி பறந்து விடும். வெறுமை வந்து சேரும். அது போலவே பழைய நினைவுகள்.
அப்போது பதினாறு என்ற இலக்கமிட்ட வீட்டில் இருந்தோம். நான் பதினாறு வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன். அது வடக்கு பார்த்த வீடு. முதல் அறையின் சன்னல் வழியாக முதல் சூரிய கிரணங்கள் வரும். பொன் தூசியைப் பரப்பி இருக்கும். அறையில் பாய் விரித்திருக்கும்.. ஹார்மோனியப் பெட்டி நடுவில் இருக்கும். ஒருபுறம் அக்கா. மறுபுறம் பாட்டு வாத்தியார். சங்கீத அலைகள் சுற்றிலும் பரவும். காது உடையவன் கேட்கிறான் என்பது பைபிள் வாசகம். பல காதுகளில் அது கேட்கும். நானும் கேட்பேன் பாடல்களை.. ராகங்களில் மனம் தோய்வேன். அந்த இலக்கணம் பிடிபடாது. அக்காவின் குரலும் பாடும் முறையும் கேட்க கேட்க பழகி விடும். அக்கா பாடிப் பார்த்துக் கொள்வார். சம்மணமிட்டு அமர்வார். அமரும் போது புடவைக் தலைப்பைப் பின்புறம் வழியாக இழுத்துச் செருகிக் கொள்ளுவார். தாளம் இட்டபடி பாடுவார். ராக பாவம் கூடி வரப் பாடுவார். அப்படி அவர் பாடிய பாடல்கள் பலபல. அவற்றில் ஒன்று சொகசுகா மிருதங்க தாளமு என்பது.
தியாகராஜர் இயற்றிய கிருதி. ஸ்ரீரஞ்சனி ராகத்தில் அமைந்தது. மொழி புரியாது. ஆனால் அந்த ராக தாள பாவத்தில் ஏதோ ஒன்று புரிந்து விடும். ராமா என்று சரணத்தில் முடித்து அக்கா மீண்டும் பல்லவியைத் தொடும்போது கண்களில் நீர் கட்டும்..
ராகங்களோடு பரிச்சயம் கூடி வந்தது அக்கா பாட்டு கற்ற போதுதான். ஆரோகணமும் தெரியாது. அவரோகணமும் தெரியாது. அக்கா பாடியதை வைத்து ஒரு அனுமானத்தில் இன்ன ராகம் என்று ஊகம் செய்வது உண்டு. அதாவது வானொலிப் பெட்டியில் சங்கீதம் எல்லோருக்கும் ஆனதாய் ஒலிக்கும் போது. முறையான கற்றல் இல்லாததால் சில சமயம் திக்குத் தெரியாத காட்டில் ராகத்தைத் தேடி இளைக்க நேரிடும். எப்படியாலது ஓரு சிறு கீற்று வெளிச்சமாய் ராகம் புலப்படும்.
நான் சொன்ன ஸ்ரீரஞ்சனி என்ற ராகம் கேட்கும் மனதை மேம்படுத்துவதாய் இருக்கும். இதே ராகத்தில் அக்கா பாடும் இன்னொரு பாடல் பர்வத ராஜகுமாரி என்பது. முத்துஸ்வாமி தீட்சிதர் கிருதி. அற்புதமான பாடல். சரத் சந்திரிகா தவள ப்ரகாஷினி என்று ஒரு வரி இந்தப் பாடலில் வரும்.
சந்திரன் ஒளியில் அவளைக் கண்டேன் என்று பாரதி பாடியது நினைவில் வரும்.
விரும்பி நாங்கள் கேட்கும் பொதெல்லாம் அக்கா தான் கற்ற பாடல்களை அவருடைய குருவின் முன்பு பாடும் அடக்கத்தோடு பாடுவார். வாழ்ந்த வரை. நாங்களும் அந்த இசையில் கட்டுண்டு இருப்போம்.
ஸ்ரீரஞ்சனி ராகத்தைக் கேட்டு கேட்டு திரை இசைப் பாடல்களில் அந்த ராகத்தை மனம் தேடும். ஒப்பிட்டு ஒப்பிட்டு அறிந்ததில் நாதமென்னும் கோவிலிலே என்ற பாடல் ஸ்ரீரஞ்சனி என்று மனம் தீர்மானிக்கும்.
தி சந்தானம்
.
Mathi : 👌🏻 👏👏 👏 👍
ReplyDeleteநன்றி மதி
DeleteM S பாட்டும் சரி ராகமெனும் கோவிலிலே பாட்டும் சரி பல முறை கேட்டிருக்கிறேன். பழையவற்றை நினைவு கூர்ந்து எழுதியது அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ராம்
Deleteஅற்புதம்..இசை உங்களுக்குள் எப்படி நுழைந்தது என்பது புரிந்தது. வாழ்க உங்கள் ரசனை.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteநன்றி நண்பரே. கேட்டதற்கும் இங்கே பதிவிட்டதற்கும். இசை குறித்த நமது பரிமாற்றங்களை என்றும் நினைத்திருப்பேன்
Deleteஅழ வச்சுட்டியே.. அக்கா பாடும் பாவயாமியும், ரெங்கபுரவிஹாராவும் அப்படியே என் நினைவில். அக்கா, அக்காதான்.💕💕
ReplyDeleteஎழுதும் போது அக்கா பற்றி எத்தனையோ நினைவுகள். உணர்ச்சிகரமாக இருந்தேன். வார்த்தைகளை ஒழுங்கமைக்க சிரமப்பட்டேன்
Deleteசந்தானம் என்றதும் நினைவுக்கு வருவது மருதமலை மாமுனியே முருகய்யா.. அப்டியே கண்ணெல்லாம் மூடிண்டு..🙂
ReplyDelete🙂
Delete