Skip to main content

சொக சுகா மிருதங்க தாளமு

 பட்டாம் பூச்சிகள் அலைந்தபடியே இருக்கும். செடிகள் மீதும் சின்னப் பூக்களின் மேலும். மெதுவாக நெருங்கி சிறகைப் பிடித்தால் மற்றொரு சிறகு படபடக்கும். விடுபடத் துடிக்கும். கைகளில் குறுகுறுக்கும். சிறகின் வண்ணங்கள் எண்ணெய் பிசுபிசுப்பாய் கைகளில் சேரும். வண்ணத்தைப் பார்க்கும் போது பட்டாம் பூச்சி பறந்து விடும். வெறுமை வந்து சேரும்.  அது போலவே  பழைய நினைவுகள். 


அப்போது பதினாறு என்ற இலக்கமிட்ட வீட்டில் இருந்தோம். நான் பதினாறு வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன். அது வடக்கு பார்த்த வீடு. முதல் அறையின் சன்னல் வழியாக  முதல் சூரிய கிரணங்கள் வரும்.  பொன் தூசியைப் பரப்பி இருக்கும். அறையில் பாய் விரித்திருக்கும்.. ஹார்மோனியப் பெட்டி நடுவில் இருக்கும். ஒருபுறம் அக்கா. மறுபுறம் பாட்டு வாத்தியார். சங்கீத அலைகள் சுற்றிலும் பரவும். காது உடையவன் கேட்கிறான் என்பது பைபிள் வாசகம். பல காதுகளில் அது கேட்கும். நானும் கேட்பேன் பாடல்களை.. ராகங்களில் மனம் தோய்வேன். அந்த இலக்கணம் பிடிபடாது. அக்காவின் குரலும் பாடும் முறையும் கேட்க கேட்க பழகி விடும். அக்கா பாடிப் பார்த்துக் கொள்வார். சம்மணமிட்டு அமர்வார். அமரும் போது புடவைக் தலைப்பைப் பின்புறம் வழியாக இழுத்துச் செருகிக் கொள்ளுவார். தாளம் இட்டபடி பாடுவார். ராக பாவம் கூடி வரப் பாடுவார். அப்படி அவர் பாடிய பாடல்கள் பலபல.  அவற்றில் ஒன்று சொகசுகா மிருதங்க தாளமு என்பது. 

தியாகராஜர் இயற்றிய கிருதி. ஸ்ரீரஞ்சனி ராகத்தில் அமைந்தது. மொழி புரியாது. ஆனால் அந்த ராக தாள பாவத்தில் ஏதோ ஒன்று புரிந்து விடும்.  ராமா  என்று சரணத்தில் முடித்து அக்கா மீண்டும் பல்லவியைத் தொடும்போது கண்களில் நீர் கட்டும்..



ராகங்களோடு பரிச்சயம் கூடி வந்தது அக்கா பாட்டு கற்ற போதுதான். ஆரோகணமும் தெரியாது. அவரோகணமும் தெரியாது. அக்கா பாடியதை வைத்து ஒரு அனுமானத்தில்  இன்ன ராகம் என்று ஊகம் செய்வது உண்டு. அதாவது வானொலிப் பெட்டியில் சங்கீதம் எல்லோருக்கும் ஆனதாய் ஒலிக்கும் போது. முறையான கற்றல் இல்லாததால் சில சமயம் திக்குத் தெரியாத காட்டில் ராகத்தைத் தேடி இளைக்க நேரிடும். எப்படியாலது ஓரு சிறு கீற்று வெளிச்சமாய் ராகம் புலப்படும்.


நான் சொன்ன ஸ்ரீரஞ்சனி என்ற ராகம் கேட்கும் மனதை மேம்படுத்துவதாய் இருக்கும். இதே ராகத்தில் அக்கா பாடும் இன்னொரு பாடல் பர்வத ராஜகுமாரி என்பது. முத்துஸ்வாமி தீட்சிதர் கிருதி. அற்புதமான பாடல். சரத் சந்திரிகா தவள ப்ரகாஷினி என்று ஒரு வரி இந்தப் பாடலில் வரும்.

சந்திரன் ஒளியில் அவளைக் கண்டேன் என்று பாரதி பாடியது நினைவில் வரும்.


விரும்பி நாங்கள் கேட்கும் பொதெல்லாம் அக்கா தான் கற்ற பாடல்களை அவருடைய குருவின் முன்பு பாடும் அடக்கத்தோடு பாடுவார். வாழ்ந்த வரை. நாங்களும் அந்த இசையில் கட்டுண்டு இருப்போம்.


ஸ்ரீரஞ்சனி ராகத்தைக் கேட்டு கேட்டு திரை இசைப் பாடல்களில் அந்த ராகத்தை மனம் தேடும். ஒப்பிட்டு ஒப்பிட்டு அறிந்ததில் நாதமென்னும் கோவிலிலே என்ற பாடல் ஸ்ரீரஞ்சனி என்று மனம் தீர்மானிக்கும்.




ஏற்றி வைத்த தீபத்தில் எண்ணெய் விட யாராவது வேண்டுமே? அக்கா அப்படித்தான் இருந்தார். மேலும் காலை வெளிச்சமாகவும். கனிவு தரும் பாட்டாகவும்

தி சந்தானம்





.





Comments

  1. M S பாட்டும் சரி ராகமெனும் கோவிலிலே பாட்டும் சரி பல முறை கேட்டிருக்கிறேன். பழையவற்றை நினைவு கூர்ந்து எழுதியது அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அற்புதம்..இசை உங்களுக்குள் எப்படி நுழைந்தது என்பது புரிந்தது. வாழ்க உங்கள் ரசனை.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நன்றி நண்பரே. கேட்டதற்கும் இங்கே பதிவிட்டதற்கும். இசை குறித்த நமது பரிமாற்றங்களை என்றும் நினைத்திருப்பேன்

      Delete
  3. அழ வச்சுட்டியே.. அக்கா பாடும் பாவயாமியும், ரெங்கபுரவிஹாராவும் அப்படியே என் நினைவில். அக்கா, அக்காதான்.💕💕

    ReplyDelete
    Replies
    1. எழுதும் போது அக்கா பற்றி எத்தனையோ நினைவுகள். உணர்ச்சிகரமாக இருந்தேன். வார்த்தைகளை ஒழுங்கமைக்க சிரமப்பட்டேன்

      Delete
  4. சந்தானம் என்றதும் நினைவுக்கு வருவது மருதமலை மாமுனியே முருகய்யா.. அப்டியே கண்ணெல்லாம் மூடிண்டு..🙂

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...