பல வருடங்களுக்கு முன்னால் மதுரையில் சார்லி சாப்ளின் திரைப்பட விழா ஒரு வாரம் நடந்தது. மாப்பிள்ளை விநாயகர் என்ற தியேட்டர். City Lights, The Great Dictator Modern Times என்று வரிசையாக சாப்ளின் படங்கள். இறுதி நாளன்று Limelight என்ற திரைப்படம். அது மட்டும் முழுக்க முழுக்க பேசும் படம். The Great Dictator ல் கொஞ்சம் பேச்சு உண்டு. ஏனைய படங்கள் முழுக்க முழுக்க மெளனப் படங்கள். இந்த விழாவில் ஒரு படத்தைக் கூட தவறவிடவில்லை. நானும் நண்பர் ராமச்சந்திரனும். இன்று வாட்ஸப்பில் The Great Dictator என்ற படத்தில் சாப்ளின் பேசும் வசனத்தின் எழுத்து வடிவத்தை பதிவு செய்து அனுப்பியிருந்தார். ஏறக்குறைய அதே சமயத்தில் நானும் சாப்ளினை நினைத்தபடி இருந்தேன்.
இந்த தற்செயல் வியப்பு அளித்தது. இன்று 16 ஏப்ரல் சாப்ளின் பிறந்த தினம் வேறு.
நான் மேலே குறிப்பிட்ட சாப்ளின் திரைப்பட விழாவிற்கு முன்னரே பார்த்திருந்த திரைப்படம் City Lights.
சாப்ளினை முதன் முதல் அறிந்தது இந்தத் திரைப்படம் மூலமாகத்தான்.
மூக்குக்கு கீழே வித்தியாசமாக மீசை.
தலையில் தொப்பி. இறுக்கமான அளவில் சிறிய சட்டை மற்றும் கோட். தொளதொள பேண்ட். பழைய ஷூ. கைத்தடி. வாத்து நடப்பது போல ஒரு மாறுபட்ட நடை.
தோற்றத்தைப் பார்த்தவுடன் சிரிப்பு வரும். அது மட்டும் தானா சாப்ளின்.
சின்னச் சின்னதாய் எத்தனை உடல் மொழிகள். மெளனப் படத்தில் அவர் மெலிதாகத் தீட்டும் உணர்வுக் கோலங்கள் பிரமிக்க வைக்கும். சின்ன அசைவுகள் மானுடத்தைக் கேலி செய்யும். அதன் சிறுமையை பகைமையை போலித்தனத்தை அகந்தையை அன்பின்மையை.
இத்தனைக்கும் சாப்ளின் வீடு வாசல் இல்லாத நாடோடி.(Tramp) உலகம் அவரை விரட்டியடியே இருக்கும். ஆனால் அவரோ உலகின் மேல் பகைமை பாராட்டாது இருப்பார். உலகின் வழமைகளை அறியாதவராக. அப்பாவியாக. வலிமை அதிகாரம் இல்லாத சாதாரண மனிதராக. .
City Lights என்ற திரைப்படத்திற்கு வருவோம். படம் இப்படித் துவங்குகிறது. ஒரு பெரிய நினைவுச் சின்னம் திறக்கப்பட இருக்கிறது. திரையிட்டு மறைக்கப்பட்டு இருக்கிறது. கூட்டம் கூடி இருக்கிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் பேசுகிறார்கள். அது கூவிப் பிதற்றுவதாக தெளிவற்ற சத்தமாய் ஒலிக்கும். பின்பு நினைவுச் சின்னத்தை நாட்டுக்கு அர்ப்பணம் செய்யும் விதமாக கயிறு இழுக்கப்படும். திரை விலகும் போது நடுநாயகமாக இருக்கும் சிலையின் மடியில் ஒரு மனிதன் உறங்கிக் கொண்டு இருப்பான். இத்தனை ஆரவாரத்திற்கும் நடுவில். உறக்கத்தில் தலையைச் சொறிவான். சாவகாசமாக காலை மடித்து சொறிந்து கொள்வான். அது சாப்ளின். அதிகாரிகள் சத்தமிடுவார்கள். கீழே இறங்கச் சொல்லி சைகை செய்வார்கள். நினைவுச் சின்னமாயிற்றே. அதன் மாண்பு குலையக் கூடாதே. இந்த மனிதன் புரிந்து கொண்டததாக தெரியவில்லை. தலையில் இருந்த தொப்பியை சொற்ப நேரம் நீக்கி பின்பு அணிந்து கொள்கிறான். மரியாதை நிமித்தமாகவும் மன்னிப்புக் கோருதல் போலவும். ஒருவழியாக கீழே இறங்குகிறான்.
அடுத்த காட்சி. நடைபாதையில் அந்தப் பெண் மலர்களை விற்கிறாள். சாப்ளின் கடந்து போகிறார். அந்தப் பெண் ரோஜாவை வாங்கிக் கொள்ள வேண்டுகிறாள். சாப்ளின் கை நீட்டுகிறார். ரோஜா நழுவிக் கீழே விழுகிறது. சாப்ளின் குனிந்து எடுக்கிறார். அந்தப் பெண் ரோஜாவிற்காக தரையைத் துழாவுகிறாள். அவளுக்கு பார்வையில்லை என்று தெரிகிறது. சாப்ளின் மனதில் கனிவு பிறக்கிறது.
பேண்டைத் துழாவி நாணயத்தை நீட்டுகிறார். பார்வையற்றவள் என்பதை ஒரு கணம் மறந்து. பின்பு நாணயத்தை அவள் கையைத் தொட்டு அழுத்துகிறார். அவள் ரோஜாவை அவரிடமிருந்து வாங்கி கோட்டைத் தடவி உணர்ந்து செருகி விடுகிறாள்.
சாப்ளின் தொப்பியைக் கழற்றி அணிந்து கொள்கிறார். அங்கே நினறு கொண்டிருந்த கார் கிளம்புகிறது. மலர் விற்ற பெண் பாக்கிச் சில்லறையை நீட்டுகிறாள். சாப்ளினை காரில் வந்த கனவான் என்று எண்ணிக் கொள்கிறாள்.
அன்று இரவு ஒரு பெரும் பணக்காரனை சாப்ளின் தற்கொவையிலிருந்து காப்பாற்றுகிறார். அவன் காரில் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். ஒயின் கொடுத்து உபசரிக்கிறான். விடிந்தபின் போதை தெளிகிறது. தனது உதவியாளரை அழைத்து இந்த மனிதனை வெளியே துரத்து என்கிறான். சாப்ளின் விரட்டப்படுகிறார். இப்படி டோதையில் சாப்ளினை நண்பனாகக் கொள்வதும் போதை தெளிந்த பின் வெளியே விரட்டுவதும் மாறி மாறி நடக்கிறது. அப்படி நட்பாக இருக்கும் தருணத்தில் மலர் விற்கும் பெண் தான் தங்கியிருக்கும் பணக்காரன் வீட்டைக் கடப்பதைப் பார்க்கிறார் சாப்ளின்.
உடனே உள்ளே ஓடி பணக்கார நண்பனிடம் பத்து ஷில்லிங்கை கேட்டுப் பெறுகிறார். பூ விற்கும் பெண்ணிடம் மொத்தப் பூவையும் வாங்கிக் கொள்கிறார். பணக்கார நண்பனின் காரில் அவளுடைய வீட்டில் கொண்டு வந்து
விடுகிறார். சாப்ளினை பெரும் பணக்காரர் என்றே அந்தப் பெண் முடிவு கட்டுகிறாள்.காரைத் திரும்ப கொண்டு தரும்போது பணக்கார நணபனுக்கு இவரை யாரென்றே தெரியவில்லை. அது போதை தெளிந்த நேரம்.
பின்னொரு சமயம் சாப்ளின் பூ விற்கும் பெண்ணை அவளுடைய வீட்டில் சந்திக்கிறார். ஒரு பேப்பர் செய்தியைப் படித்துக் காட்டி வியன்னாவிலிருந்து வருகை தரும் டாக்டர் மூலம் இழந்த பார்வையைப் பெறலாம் என்று நம்பிக்கை
தருகிறார் சாப்ளின். வாடகை பாக்கியையும் நான் சரிக்கட்டுகிறேன் என்கிறார். பணத்துக்கு என்ன செய்வது. சாப்ளின் வேலை பார்க்கிறார். வேலையைத் தொலைக்கிறார். பாக்ஸிங் சண்டை போடுகிறார். காயமடைகிறார். பணம் மட்டும் கிடைக்கவில்லை. அதிர்ஷ்ட வசமாக வெளிநாடு சென்ற பணக்கார நண்பர் வீடு.திரும்புகிறார். அவரிடம் நிலைமையைச் சொல்ல வீட்டிற்கு அழைத்துச் சென்று பணம் தருகிறார். அப்போது திருடும் நோக்கத்தோடு இருவர் திரையின் பின்னே மறைந்திருப்பதைக் கண்டறிகிறார்கள். சாப்ளின் திருடர்களைத் துரத்த, வந்த போலீஸ் இவரைத் திருடன் என்று முடிவு கட்டுகிறது. காரணம் இவர் கோட் பாக்கெட்டில் இருந்த பணம். பணக்காரனிடம் போலீஸ் கேட்க போதை தெளிந்த அவர் இந்த மனிதன் யார் என்று சாப்ளினைப் பார்த்துக் கேட்கிறார் பணம் கொடுத்ததையே மறந்து. போலீஸ் சாப்ளினைக் கைது செய்ய முற்பட சாப்ளின் தப்பி ஓடுகிறார். பூ விற்கும் பெண்ணின் வீட்டை அடைகிறார். பணத்தைத் தருகிறார் கண் சிகிச்சைக்கும் வாடகைப் பாக்கிக்கும் ஆகுமாறு.
வீட்டை விட்டு வெளியே வந்து திரியும் சாப்ளினை போலீஸ் பிடித்துச் சிறையில் தள்ளுகிறது. சிறையிலிருந்து வெளிவரும் சாப்ளின் பூ விறகும் பெண் வழக்கமாக நிற்கும் நடைபாதையைத் தேடி வருகிறார்.....
படத்தின் இறுதிக் காட்சியை இங்கே காணலாம்.
கோமாளிகள் இடறி விழும் போது நாம் சிரிப்பவர்களாக இருக்கிறோம். ஆனால் அவர்களுடைய மனதில் கருணையும் காதலும் மெல்லச் சுரந்தபடியே இருக்கிறது
மேலே கண்ட இறுதிக் காட்சியில் சாப்ளினின் நடிப்பிற்கு கண்கள் பனித்தது
மெலிதாக ஒரு சோகம் மனதில் கவிந்தது.
தி சந்தானம்
This comment has been removed by the author.
ReplyDeleteIt reminds me a scene from " Njan Prakashan, malayalam film, where the protagonist would suggest to his girlfriend that 'Chaplin is a comedian'to which she would say " no, he is a genius ''.
ReplyDeleteThat is an important scene in that wonderful film.
Available on Netflix.
That is right.. Not about comedy alone. More about the deep sensitivities and his brilliance an actor. I cherish our Limelight moments
Deleteநல்ல பதிவு. ரசித்தேன். நன்றி
ReplyDeleteநன்றி ராம்
ReplyDeleteWell Narrated ., Those Deep sensitivities which is also embedded in all of us were Fantastic ✍️✍️
ReplyDeleteஜீ! சாப்ளின் அவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. தான் மகிழ்ச்சியாக இல்லாவிடினும் உலக மக்களை மகிழ்ச்சி படுத்தினார். அவர் ஒரு மாமேதை. ஒருவரை மனம்விட்டு சிரிக்க வைப்பதென்பது சுலபமான காரியமில்லை. இன்று நாம் காணும் நகைச்சுவை காட்சிகளெல்லாம் அப்படிப்பட்டவைதானா!
ReplyDeleteஎன்ன பண்ணுவது மக்களின் தரமுமம் குறைந்துபோனதே அதற்கு காரணம்.
சாப்ளினின் படங்கள் அனைத்தையும் பார்த்த நான் அதிர்ஷ்டசாலி என்று எண்ணுகிறேன்.
நல்ல ஒரு செய்தியை பதிவிட்டதற்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி சுப்புராஜ். படித்ததற்கும் இங்கே பதிலிட்டதற்கும். நீங்கள் சொன்னது மிகவும் சரி. வாழ்க்கைத் துயரங்களைக் கடந்தபடியேதான் சாப்ளின் எல்லோரையும் சிரிக்க வைத்தார். சிரிப்பையும் மீறி வாழ்க்கை குறித்தும் மனிதர் குறித்தும் ஒரு நுட்பமான பார்வை அவருக்கு இருந்தது.
Deleteஅந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது உன் எழுத்தும், காணொலியும்.
ReplyDeleteபாரேன்
Delete