Skip to main content

யாதுமாகி நின்றாய்

 நான் படித்த ஆரம்பப் பள்ளி எனது வீட்டுக்கு எதிர் சாரியிலேயே இருந்தது.

பள்ளி வாசலில் ஒரு பெண்மணி தின்பண்டங்கள் விற்பார். கொடுக்காப் புள்ளி,சவ்வு மிட்டாய்,கமர்கட்டு,இலந்த வடை இவைகளை விற்பார்.  விலை ஒரு பைசாவிலிருந்து ஐந்து பைசா வரை இருக்கும். அந்தப் பெண்மணியின் பெயர் காளியம்மா.

காளி என்றால் தின்பண்டம் விற்கும் அம்மா தான் நினைவில் வருவார்.


பின்பு மகாகவி காளிதாஸ் என்று ஒரு திரைப்படம் பார்த்தேன். காளி அருளால் படிப்பில்லாத தற்குறி ஆட்டு இடையன் பெருங் கவிஞன் ஆகி விடுவான்.  அதில் காளி ஒரு மூதாட்டியாக வருவார். அவர் பளீரென்று ஒரு சிரிப்பு சிரித்தார். எனக்கு முதுகு சில்லிட்டுப் போயிற்று. 

அப்படி ஒரு சிரிப்பு. பின்பு ஒரு காட்சியில் காளி ஆடினாள். கையில் சூலம் இருந்தது. கூந்தல் அவிழ்ந்திருந்தது. கண்கள் அசைய தோள்கள் அசைய இடை அசைய காலினில் தண்டை ஒலிக்க ஆடினாள்.

நான் பயந்து போனேன். காளியின் பார்வை அப்படி இருந்தது.


காளிதாசன் கலக்கம் அடையும் போதெல்லாம் காளி வருவாள் மூதாட்டி வடிவில். கறுப்பு நிற புடவை அணிந்திருப்பாள். சிகப்பு அல்லது வேறு ஏதாவது அழுத்தமான நிறமாகத் கூட இருக்கலாம். கறுப்பு வெள்ளைப் படத்தில் கறுப்பாகத்தான் தெரிந்தது.




உணர்ச்சியில் விளையாடும் உன்னதக் கவிச் சிங்கம் தளர்ச்சியில் விழலாகுமா மகனே! என்று பாடுவார்.


காளிதாசன் படிக்காத ஆட்டு இடையனாக இருக்கும் போது பாடுவதாக ஒரு காட்சி வரும். அவன் பாடுவான்.

கல்லாய் வந்தவன் கடவுளம்மா அதில்

கனியாய் கனிஞ்சவ தேவியம்மா

புல்லாய் முளைச்சவ சக்தி அம்மா அதில்

பூவாய் மலர்ந்தவ காளியம்மா

என்று.  காளியைப் புரிந்து கொள்ள அந்த வயதில் அது போதுமானதாக இல்லை.


பல வருடங்கள் சென்றது. ஒரு பிறந்த நாளில் பரிசாகப் பாரதி கவிதைகள் கிடைத்தது. நட்பு அப்படித்தான். நல்ல நினைவுகள் மேலும் நல்ல புத்தகங்களையும் நம்மிடம் விட்டுச் செல்லும். ஆழ்ந்து கவிதைகளைப் படித்தேன்.  அசை போட்டேன்.மனதில் ஏறி விட்டது.  கலிதைகளில் காளி தோன்றினாள்.  

யாதுமாகி நின்றாய் காளி

எங்கும் நீ நிறைந்தாய்

அன்பளித்து விட்டாய் காளி

ஆண்மை தந்து விட்டாய்


என்று வரிகளைப் படிக்க படிக்க மனம் பரவசம் கொண்டது. காளி மீது நெஞ்சம் கலந்து நின்றது. காளி மீது இருந்த பழைய அச்சம் அகன்றது.


மாகாளி உருசிய நாட்டிடைக் கண் வைத்தாள்

ஆகாவென எழுந்தது பார் யுகப் புரட்சி

என்று பாரதி பாட காளி முற்றிலும் வேறு ஒரு பரிமாணம் கொண்டாள்.


பின்னொரு சமயம் கல்கத்தா (அப்போது கொல்கத்தா இல்லை)  சென்றேன். காளியை சென்று பார்த்தேன்.  எங்கும் பக்தர்கள் கூட்டம். கால்கள் எட்டு வைக்கத் தயங்கியது. எளிய மனிதர்கள் பலியிட ஆடுகளைக் கொண்டு வந்திருந்தார்கள். சிதறிய ரத்தத்தில் ஈக்கள் மொய்த்தபடி இருந்தன. காளி விழிகள் நிலைக்க இருந்தாள்.


இதெல்லாம் நடந்து பல வருடங்கள் கழிந்து காளி மீது சில கவிதைகள் புனைந்தேன். காளியே என்று கூவியே மனம் தாவியே எங்கும் ஓடுதே என்று அது துவங்கும். சந்தங்கள் பாய்ந்து செல்வது ஒரு ஆனந்தக் களிப்பு.


காளியை மனிதர்கள் விரும்புகிறார்கள். அவரவர் வழியில் அறிகிறார்கள். அவரவர் விரும்பியதை படைக்கிறார்கள். யாவற்றையும் ஒரு கொண்டாட்டமாக உணருகிறார்கள்.


இதை எல்லாம் ஏன் எழுதினேன் என்று கேட்கிறீர்களா?


என்னமோ தோணித்து. எழுதினேன்


தி சந்தானம்

Comments

  1. ரசிக்கத்தக்க வகையில் எழுதியது பாராட்டுதலுக்குரியது

    ReplyDelete
    Replies
    1. நன்றி படித்ததற்கும் இங்கே பதிவிட்டதற்கும்

      Delete
  2. மிக மிக அருமை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...