Skip to main content

ஒரு குரல் ஒரு அடையாளம்

 அந்தக் குரல் மென்மை கொண்டு இழைவது. ஆழமான சோகத்தை உள்ளே தரித்துக் கொண்டது. கேட்பவர் மனத்தைத் தவிப்பு கொள்ள வைப்பது.கேட்டு முடித்த உடன் மனம் வேறு எதிலும் லயிக்க விடாதது.. மனம் ஏதேதோ நினைவுகளில் மூழ்கி விடும். சென்னையில் ராஜகுமாரி என்று ஒரு தியேட்டர் இருந்தது. அங்குதான் அந்தக் குரலை முதலாகக் கேட்டேன்.அப்போது எனக்குப் பதினாறு வயது.

பரிச்சய் என்று ஒரு ஹிந்தித் திரைப்படம். ஆர்.டி.பர்மன் இசை. பாடலை எழுதியவர் குல்ஸார். லதா மங்கேஷ்கர் உடன் இணைந்து பாடிய அந்தக் குரலைப் பற்றி தான் மேலே குறிப்பிட்டேன்.  அது பூபேந்தர் சிங் என்ற பாடகரின் குரல். ஹிந்துஸ்தானி இசை திரைப் பாடல்களில்  இருந்து முற்றிலும் நீங்கி விடாத காலம் அது.

எனக்கு ஹிந்தி ஓரளவு அப்போது பரிச்சயம் ஆகி இருந்தது. அதாவது பரிச்சய் என்றால் பரிச்சயம் என்று புரிந்து கொள்ளும் அளவிற்கு.  நான் சொன்ன பாடல் பீதி நா பிதாயி ரயினா என்று துவங்கும். அந்தக் காட்சியில் ஜெயா பாதுரி யும் சஞ்சீவ் குமாரும் நடித்திருப்பார்கள். ஜெயா மகள். சஞ்சீவ் நோயுற்ற தந்தை. ஜெயா பாடுவார். பாதி பாடும் போது  வரிகள் தவறி விடும். அப்போது சஞ்சீவ் அந்த வரிகளை தவறிய இடத்தில் இருந்து தொடர்ந்து பாடுவார். காட்சி அமைப்பிலிருந்து நான் ஒருவாறு அந்த வயதில் புரிந்து கொண்டது இதுதான். ஒரு காலத்தில் ஜெயாவின் அம்மா பாடும் பாடல் அது. அதை எழுதியவர் சஞ்சீவ். இப்போது அம்மா இல்லை. மனைவியின் நினைவு இழைகளை மனதில் கோத்தபடியே பாடுகிறார். வலியோடு பாடுகிறார். இந்தச் சூழலுக்கு மிகவும் பொருத்தமாக பூபேந்தரின் குரல் இருந்தது. 




பெரு நகரங்கள் மிரள வைப்பதாக இருக்கிறது.  இங்கும் அங்கும் பரபரத்துத் திரியும் மனிதர்கள். குறுக்கும் நெடுக்குமாக விரையும் வாகனங்கள். பிழைப்புக்கான இடையறாத ஓட்டத்தில் ஒரு ஆணும் பெண்ணும்.  இயல்பாக அவர்களிடையே மலரும் நட்பு ,காதல் ஜன்னல் மலரைப் போல.. நடுத்தர மக்களின் வாழ்க்கை போராட்டம் கடல் அலையருகே கட்டும் மணல் வீடு தானே?  கனவுகள் கலைந்து போனாலும் மீண்டும் மீண்டும் கட்டி எழுப்புவார்கள் தானே நடுத்தர மக்கள்.


கரெளண்டா என்று ஒரு திரைப்படம். 

1977 அல்லது 1978 வாக்கில் வந்தது. பம்பாய் போன்ற பெருநகரில் நடுத்தர வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டியது.  அமோல் பாலேகர் மற்றும் ஜரீனா வஹாப் நடித்திருந்தார்கள்..  இந்தப் படத்தின் திரைக்கதைபை குல்ஸார் எழுதினார். சுதிர் (அமோல் பாலேகர்) சாயா (ஜரினா வஹாப்)  இரு வரும் ஒரே அலுவலகத்தில் வேலை பாரக்கிறார்கள். மணம் புரியத் தீர்மானிக்கிறார்கள். திருமணத்திற்கு முன்பே எப்படியாவது பணம் சேர்த்து நகரில் வளர்ந்து வரும் அடுக்ககங்களில் ஒரு வீட்டை வாங்கி விடத் துடிக்கிறார்கள். ஆனால் யாரிடம் முன்பணம் கொடுத்தார்களோ அவன் எங்கோ ஒடி விடுகிறான். நிராசை அவர்களைச்  சூழ்கிறது. பெருநகரம் நடுத்தர மக்களை என்ன பாடுபடுத்துகிறது. அவர்கள் வாழ்க்கையை எப்படி எல்லாம் புரட்டிப் போடுகிறது. இதுதான் கரெளண்டா திரைப்படம்.  கரெளண்டா என்றால் கூடு என்று பொருள்.  சுதிர் தனியனாக இரவும் பகலும் திரிகிறான்.  அவனது கனவுகள் நொறுங்கி இருக்கின்றன. அவனது கூடு கலைந்து போயிருக்கிறது. இப்படித்தான் பாடல் துவங்குகிறது. பூபேந்தர் குரலைத் தவிர வேறு எந்தக் குரல் இந்த சூழலுக்குப் பொருந்தும்?  மேலும் குல்ஸாரின் உயிரோட்டமான வரிகள்.



பூபேந்தர் சிங் ஒரு தமிழ் திரைப்படத்தில் பாடி இருக்கிறார். ஆனால் அவர் பாடியது ஒரு ஹிந்திப் பாடல். ஜானகியுடன் இணைந்து பாடியிருந்தார். இளையராஜாவின் இசையில். நண்டு என்ற திரைப்படத்தில்.  கைஸே கஹூம் என்று துவங்கும் பாடல். சற்றே மகிழ்ச்சியான சூழலில் அமைந்த பாடல். எனினும் திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு ஒரு மெல்லிய சோகம் நிழலாடுவதை உணர முடியும்.



பூபேந்தர் சிங்கின் குரல்  பிரத்தியேகமான ஒன்று. ஆழமான உணர்வுகளைத் தன்னிச்சையாக ஏந்தி வரும் குரல் அது. பூபேந்தர் சிங் மறைந்து இரண்டு மூன்று தினங்களே ஆகிறது. ஆனால் அவர் குரல் காலமெல்லாம் நம்மோடு உறவாடுவதாய் இருக்கிறது.


தி சந்தானம்




Comments

  1. மூன்று பாடல்களையும் கேட்டு ரசித்தேன். நல்ல குரல் வளம் / பாவம். அருமை. கேட்க வாய்ப்புக் கொடுத்த சந்தானத்திற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி கேட்டதற்கும் இங்கே பதிவிட்டதற்கும்

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...