நான் படித்த ஆரம்பப் பள்ளி எனது வீட்டுக்கு எதிர் சாரியிலேயே இருந்தது.
பள்ளி வாசலில் ஒரு பெண்மணி தின்பண்டங்கள் விற்பார். கொடுக்காப் புள்ளி,சவ்வு மிட்டாய்,கமர்கட்டு,இலந்த வடை இவைகளை விற்பார். விலை ஒரு பைசாவிலிருந்து ஐந்து பைசா வரை இருக்கும். அந்தப் பெண்மணியின் பெயர் காளியம்மா.
காளி என்றால் தின்பண்டம் விற்கும் அம்மா தான் நினைவில் வருவார்.
பின்பு மகாகவி காளிதாஸ் என்று ஒரு திரைப்படம் பார்த்தேன். காளி அருளால் படிப்பில்லாத தற்குறி ஆட்டு இடையன் பெருங் கவிஞன் ஆகி விடுவான். அதில் காளி ஒரு மூதாட்டியாக வருவார். அவர் பளீரென்று ஒரு சிரிப்பு சிரித்தார். எனக்கு முதுகு சில்லிட்டுப் போயிற்று.
அப்படி ஒரு சிரிப்பு. பின்பு ஒரு காட்சியில் காளி ஆடினாள். கையில் சூலம் இருந்தது. கூந்தல் அவிழ்ந்திருந்தது. கண்கள் அசைய தோள்கள் அசைய இடை அசைய காலினில் தண்டை ஒலிக்க ஆடினாள்.
நான் பயந்து போனேன். காளியின் பார்வை அப்படி இருந்தது.
காளிதாசன் கலக்கம் அடையும் போதெல்லாம் காளி வருவாள் மூதாட்டி வடிவில். கறுப்பு நிற புடவை அணிந்திருப்பாள். சிகப்பு அல்லது வேறு ஏதாவது அழுத்தமான நிறமாகத் கூட இருக்கலாம். கறுப்பு வெள்ளைப் படத்தில் கறுப்பாகத்தான் தெரிந்தது.
உணர்ச்சியில் விளையாடும் உன்னதக் கவிச் சிங்கம் தளர்ச்சியில் விழலாகுமா மகனே! என்று பாடுவார்.
காளிதாசன் படிக்காத ஆட்டு இடையனாக இருக்கும் போது பாடுவதாக ஒரு காட்சி வரும். அவன் பாடுவான்.
கல்லாய் வந்தவன் கடவுளம்மா அதில்
கனியாய் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் முளைச்சவ சக்தி அம்மா அதில்
பூவாய் மலர்ந்தவ காளியம்மா
என்று. காளியைப் புரிந்து கொள்ள அந்த வயதில் அது போதுமானதாக இல்லை.
பல வருடங்கள் சென்றது. ஒரு பிறந்த நாளில் பரிசாகப் பாரதி கவிதைகள் கிடைத்தது. நட்பு அப்படித்தான். நல்ல நினைவுகள் மேலும் நல்ல புத்தகங்களையும் நம்மிடம் விட்டுச் செல்லும். ஆழ்ந்து கவிதைகளைப் படித்தேன். அசை போட்டேன்.மனதில் ஏறி விட்டது. கலிதைகளில் காளி தோன்றினாள்.
யாதுமாகி நின்றாய் காளி
எங்கும் நீ நிறைந்தாய்
அன்பளித்து விட்டாய் காளி
ஆண்மை தந்து விட்டாய்
என்று வரிகளைப் படிக்க படிக்க மனம் பரவசம் கொண்டது. காளி மீது நெஞ்சம் கலந்து நின்றது. காளி மீது இருந்த பழைய அச்சம் அகன்றது.
மாகாளி உருசிய நாட்டிடைக் கண் வைத்தாள்
ஆகாவென எழுந்தது பார் யுகப் புரட்சி
என்று பாரதி பாட காளி முற்றிலும் வேறு ஒரு பரிமாணம் கொண்டாள்.
பின்னொரு சமயம் கல்கத்தா (அப்போது கொல்கத்தா இல்லை) சென்றேன். காளியை சென்று பார்த்தேன். எங்கும் பக்தர்கள் கூட்டம். கால்கள் எட்டு வைக்கத் தயங்கியது. எளிய மனிதர்கள் பலியிட ஆடுகளைக் கொண்டு வந்திருந்தார்கள். சிதறிய ரத்தத்தில் ஈக்கள் மொய்த்தபடி இருந்தன. காளி விழிகள் நிலைக்க இருந்தாள்.
இதெல்லாம் நடந்து பல வருடங்கள் கழிந்து காளி மீது சில கவிதைகள் புனைந்தேன். காளியே என்று கூவியே மனம் தாவியே எங்கும் ஓடுதே என்று அது துவங்கும். சந்தங்கள் பாய்ந்து செல்வது ஒரு ஆனந்தக் களிப்பு.
காளியை மனிதர்கள் விரும்புகிறார்கள். அவரவர் வழியில் அறிகிறார்கள். அவரவர் விரும்பியதை படைக்கிறார்கள். யாவற்றையும் ஒரு கொண்டாட்டமாக உணருகிறார்கள்.
இதை எல்லாம் ஏன் எழுதினேன் என்று கேட்கிறீர்களா?
என்னமோ தோணித்து. எழுதினேன்
தி சந்தானம்
ரசிக்கத்தக்க வகையில் எழுதியது பாராட்டுதலுக்குரியது
ReplyDeleteநன்றி படித்ததற்கும் இங்கே பதிவிட்டதற்கும்
Deleteமிக மிக அருமை
ReplyDeleteநன்றி
Delete