அந்தக் குரல் மென்மை கொண்டு இழைவது. ஆழமான சோகத்தை உள்ளே தரித்துக் கொண்டது. கேட்பவர் மனத்தைத் தவிப்பு கொள்ள வைப்பது.கேட்டு முடித்த உடன் மனம் வேறு எதிலும் லயிக்க விடாதது.. மனம் ஏதேதோ நினைவுகளில் மூழ்கி விடும். சென்னையில் ராஜகுமாரி என்று ஒரு தியேட்டர் இருந்தது. அங்குதான் அந்தக் குரலை முதலாகக் கேட்டேன்.அப்போது எனக்குப் பதினாறு வயது.
பரிச்சய் என்று ஒரு ஹிந்தித் திரைப்படம். ஆர்.டி.பர்மன் இசை. பாடலை எழுதியவர் குல்ஸார். லதா மங்கேஷ்கர் உடன் இணைந்து பாடிய அந்தக் குரலைப் பற்றி தான் மேலே குறிப்பிட்டேன். அது பூபேந்தர் சிங் என்ற பாடகரின் குரல். ஹிந்துஸ்தானி இசை திரைப் பாடல்களில் இருந்து முற்றிலும் நீங்கி விடாத காலம் அது.
எனக்கு ஹிந்தி ஓரளவு அப்போது பரிச்சயம் ஆகி இருந்தது. அதாவது பரிச்சய் என்றால் பரிச்சயம் என்று புரிந்து கொள்ளும் அளவிற்கு. நான் சொன்ன பாடல் பீதி நா பிதாயி ரயினா என்று துவங்கும். அந்தக் காட்சியில் ஜெயா பாதுரி யும் சஞ்சீவ் குமாரும் நடித்திருப்பார்கள். ஜெயா மகள். சஞ்சீவ் நோயுற்ற தந்தை. ஜெயா பாடுவார். பாதி பாடும் போது வரிகள் தவறி விடும். அப்போது சஞ்சீவ் அந்த வரிகளை தவறிய இடத்தில் இருந்து தொடர்ந்து பாடுவார். காட்சி அமைப்பிலிருந்து நான் ஒருவாறு அந்த வயதில் புரிந்து கொண்டது இதுதான். ஒரு காலத்தில் ஜெயாவின் அம்மா பாடும் பாடல் அது. அதை எழுதியவர் சஞ்சீவ். இப்போது அம்மா இல்லை. மனைவியின் நினைவு இழைகளை மனதில் கோத்தபடியே பாடுகிறார். வலியோடு பாடுகிறார். இந்தச் சூழலுக்கு மிகவும் பொருத்தமாக பூபேந்தரின் குரல் இருந்தது.
பெரு நகரங்கள் மிரள வைப்பதாக இருக்கிறது. இங்கும் அங்கும் பரபரத்துத் திரியும் மனிதர்கள். குறுக்கும் நெடுக்குமாக விரையும் வாகனங்கள். பிழைப்புக்கான இடையறாத ஓட்டத்தில் ஒரு ஆணும் பெண்ணும். இயல்பாக அவர்களிடையே மலரும் நட்பு ,காதல் ஜன்னல் மலரைப் போல.. நடுத்தர மக்களின் வாழ்க்கை போராட்டம் கடல் அலையருகே கட்டும் மணல் வீடு தானே? கனவுகள் கலைந்து போனாலும் மீண்டும் மீண்டும் கட்டி எழுப்புவார்கள் தானே நடுத்தர மக்கள்.
கரெளண்டா என்று ஒரு திரைப்படம்.
1977 அல்லது 1978 வாக்கில் வந்தது. பம்பாய் போன்ற பெருநகரில் நடுத்தர வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டியது. அமோல் பாலேகர் மற்றும் ஜரீனா வஹாப் நடித்திருந்தார்கள்.. இந்தப் படத்தின் திரைக்கதைபை குல்ஸார் எழுதினார். சுதிர் (அமோல் பாலேகர்) சாயா (ஜரினா வஹாப்) இரு வரும் ஒரே அலுவலகத்தில் வேலை பாரக்கிறார்கள். மணம் புரியத் தீர்மானிக்கிறார்கள். திருமணத்திற்கு முன்பே எப்படியாவது பணம் சேர்த்து நகரில் வளர்ந்து வரும் அடுக்ககங்களில் ஒரு வீட்டை வாங்கி விடத் துடிக்கிறார்கள். ஆனால் யாரிடம் முன்பணம் கொடுத்தார்களோ அவன் எங்கோ ஒடி விடுகிறான். நிராசை அவர்களைச் சூழ்கிறது. பெருநகரம் நடுத்தர மக்களை என்ன பாடுபடுத்துகிறது. அவர்கள் வாழ்க்கையை எப்படி எல்லாம் புரட்டிப் போடுகிறது. இதுதான் கரெளண்டா திரைப்படம். கரெளண்டா என்றால் கூடு என்று பொருள். சுதிர் தனியனாக இரவும் பகலும் திரிகிறான். அவனது கனவுகள் நொறுங்கி இருக்கின்றன. அவனது கூடு கலைந்து போயிருக்கிறது. இப்படித்தான் பாடல் துவங்குகிறது. பூபேந்தர் குரலைத் தவிர வேறு எந்தக் குரல் இந்த சூழலுக்குப் பொருந்தும்? மேலும் குல்ஸாரின் உயிரோட்டமான வரிகள்.
பூபேந்தர் சிங் ஒரு தமிழ் திரைப்படத்தில் பாடி இருக்கிறார். ஆனால் அவர் பாடியது ஒரு ஹிந்திப் பாடல். ஜானகியுடன் இணைந்து பாடியிருந்தார். இளையராஜாவின் இசையில். நண்டு என்ற திரைப்படத்தில். கைஸே கஹூம் என்று துவங்கும் பாடல். சற்றே மகிழ்ச்சியான சூழலில் அமைந்த பாடல். எனினும் திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்கு ஒரு மெல்லிய சோகம் நிழலாடுவதை உணர முடியும்.
பூபேந்தர் சிங்கின் குரல் பிரத்தியேகமான ஒன்று. ஆழமான உணர்வுகளைத் தன்னிச்சையாக ஏந்தி வரும் குரல் அது. பூபேந்தர் சிங் மறைந்து இரண்டு மூன்று தினங்களே ஆகிறது. ஆனால் அவர் குரல் காலமெல்லாம் நம்மோடு உறவாடுவதாய் இருக்கிறது.
தி சந்தானம்
மூன்று பாடல்களையும் கேட்டு ரசித்தேன். நல்ல குரல் வளம் / பாவம். அருமை. கேட்க வாய்ப்புக் கொடுத்த சந்தானத்திற்கு நன்றி
ReplyDeleteநன்றி கேட்டதற்கும் இங்கே பதிவிட்டதற்கும்
Deleteஅருமை
ReplyDeleteநன்றி மதி
Delete