அடைக்கலாங் குருவிகளைப் பாருங்கள். அவை விதைப்பதும் இல்லை, அறுப்பதும் இல்லை. இப்படி பைபிளில் ஒரு வாசகம் வரும்.
காலையில் குயில்கள் கண்ணில் படுகின்றன. மைனாக்கள் தென்படுகின்றன. புறாக்கள் கூட வருகின்றன. ஆனால் குருவியைப் பார்க்க முடிவதில்லை.
குருவியையும் குரங்கையும் வைத்து ஒரு கதை. ஒன்றாவது வகுப்பிவோ இரண்டாவது வகுப்பிலோ பாடமாக வந்தது. மரத்தில் இரண்டு குருவிகள் கூடு கட்டி வாழ்ந்து வந்தன. ஒரு நாள் மழை பெய்தது. மரத்தடியில் ஓரு குரங்கு வந்து அமர்ந்தது. குளிரில் கை கால்கள் நடுங்க இருந்தது. அப்போது மரத்தின் மேல் இருந்த குருவிகளின் ஒன்று சொன்னது. உனக்குத் தான் கை கால்கள் இருக்கின்றனவே? ஏன் குளிரில் நடுங்கியபடி கஷ்டப் படுகிறாய்? ஒரு கூடு கட்டிக் கொள்வது தானே? இதைக் கேட்ட குரங்குக்கு கோபம் வந்து விட்டது. ஊசி மூஞ்சி மூடா! எனக்கா புத்தி சொல்ல வந்தாய்?
எனக்குக் கூடு கட்டத் தெரியாது. ஆனால் கூட்டை பிரிக்கத் தெரியும்
என்று கூறியபடியே மரத்தில் ஏறி கூட்டைப் பிரித்து எறிந்தது. இப்படிக் கதை முடியும். மூடருக்கு அறிவுரை கூறலாகாது என்பது இதன் நீதி.
நான் பள்ளியில் படிக்கும் போது என்னை விட ஐந்து வயது மூத்தவர்களின் கல்லூரித் தமிழ் பாடங்களைப் படித்துப் பார்ப்பது வழக்கம். அப்படிப் படிக்கும் போது பாரதிதாசனின் ஒரு கவிதை கண்ணில் பட்டது. அதில் குருவி வந்தது.
அருவிகள் வயிரத் தொங்கல்
அடர்கொடி பச்சைப் பட்டே
குருவிகள் தங்கக் கட்டி
குளிர்மலர் மணியின் குப்பை
எருதின் மேல் பாயும் வேங்கை
நிலவின் மேல் எழுந்த மின்னல்…
மேலே நினைவில் இல்லை.
பாரதி குருவியைப் பாடுகிறார். சிட்டுக் குருவியைப் போல விட்டு விடுதலை ஆகிவிடு என்கிறார். கட்டுக்களை உதறி விடச் சொல்கிறார். எங்கும் மண்டிக் கிடக்கும் ஒளி வெள்ளத்தை உண்டு சுவைக்கச் சொல்கிறார். குழந்தையைச் சின்னஞ் சிறு குருவி போலத் திரிந்து பறந்து வா என்கிறார்.
மேலும் குருவிகளைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்.
குருவிகளைக் கண்களால் பார்
சிறிய தானியம் போன்ற மூக்கு; சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப் போர்த்த முதுகு; சிறிய தோகை, துளித் துளிக் கால்கள்.
என்ன ஒரு சொற் சித்திரம். ஒரு முறை கூடக் குருவியைத் தொட்டுப் பார்க்கவில்லையே என்று மனம் ஏங்குகிறது.
நாலைந்து வருடங்களுக்கு முன்னால் சிட்டுக் குருவியைப் பார்த்தேன். குணசீலம் என்று ஒரு அழகிய சிற்றூர். சாலையின் மறுபுறம் காவிரி வளைந்து ஓடியது.. இந்தப் பக்கம் சிறிய கோவில். அங்கே கோவிலுக்கு வெளியேதான் குருவியைப் பார்த்தேன். கைபேசியில் படம் எல்லாம் எடுக்க வில்லை. செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சு காரணமாகத் தான் குருவிகள் அழிந்து போயிற்று என்று சொல்கிறார்கள். ஒரு இனமே அழிந்து போவது எத்தனை துயரம்.
ஒரு முறை கால்வாயின் கரையில் இருந்த மரத்தடியில் சிறுவர்கள் கவணெறிந்து ஒரு குருவியை வீழ்த்தியதைப் பார்த்தேன். அது மெது மெதுவாய் கண்களை மூடியது.
உணர்வுகளின் கவணெறியில் உயிர்ப் பறவை துடித்து விழத்தானே செய்கிறது?
தி சந்தானம்


ஆஹா ஆஹா மிக அருமை
ReplyDeleteநன்றி
Deleteஅருமை 👌
ReplyDeletePoignant and Poetic.
ReplyDelete