Skip to main content

குருவிகள் தங்கக் கட்டி

 அடைக்கலாங் குருவிகளைப் பாருங்கள். அவை விதைப்பதும் இல்லை, அறுப்பதும் இல்லை. இப்படி பைபிளில் ஒரு வாசகம் வரும். 


காலையில் குயில்கள் கண்ணில் படுகின்றன. மைனாக்கள் தென்படுகின்றன. புறாக்கள் கூட வருகின்றன. ஆனால் குருவியைப் பார்க்க முடிவதில்லை.




குருவியையும் குரங்கையும் வைத்து ஒரு கதை. ஒன்றாவது வகுப்பிவோ இரண்டாவது வகுப்பிலோ பாடமாக வந்தது.  மரத்தில் இரண்டு குருவிகள் கூடு கட்டி வாழ்ந்து வந்தன. ஒரு நாள் மழை பெய்தது. மரத்தடியில் ஓரு குரங்கு வந்து அமர்ந்தது. குளிரில் கை கால்கள் நடுங்க இருந்தது. அப்போது மரத்தின் மேல் இருந்த குருவிகளின் ஒன்று சொன்னது.  உனக்குத் தான் கை கால்கள் இருக்கின்றனவே? ஏன் குளிரில் நடுங்கியபடி கஷ்டப் படுகிறாய்? ஒரு கூடு கட்டிக் கொள்வது தானே?  இதைக் கேட்ட குரங்குக்கு கோபம் வந்து விட்டது. ஊசி மூஞ்சி மூடா!  எனக்கா புத்தி சொல்ல வந்தாய்?

எனக்குக் கூடு கட்டத் தெரியாது. ஆனால் கூட்டை பிரிக்கத் தெரியும்

என்று கூறியபடியே மரத்தில் ஏறி கூட்டைப் பிரித்து எறிந்தது. இப்படிக் கதை முடியும். மூடருக்கு அறிவுரை கூறலாகாது என்பது இதன் நீதி.


நான் பள்ளியில் படிக்கும் போது என்னை விட ஐந்து வயது மூத்தவர்களின் கல்லூரித் தமிழ் பாடங்களைப் படித்துப் பார்ப்பது வழக்கம். அப்படிப் படிக்கும் போது பாரதிதாசனின் ஒரு கவிதை கண்ணில் பட்டது.  அதில் குருவி வந்தது.


அருவிகள் வயிரத் தொங்கல் 

அடர்கொடி பச்சைப் பட்டே 

குருவிகள் தங்கக் கட்டி

குளிர்மலர் மணியின் குப்பை

எருதின் மேல் பாயும் வேங்கை

நிலவின் மேல் எழுந்த மின்னல்…


மேலே நினைவில் இல்லை.


பாரதி குருவியைப் பாடுகிறார். சிட்டுக் குருவியைப் போல விட்டு விடுதலை ஆகிவிடு என்கிறார். கட்டுக்களை உதறி விடச் சொல்கிறார்.  எங்கும் மண்டிக் கிடக்கும் ஒளி வெள்ளத்தை உண்டு சுவைக்கச் சொல்கிறார். குழந்தையைச் சின்னஞ் சிறு குருவி போலத் திரிந்து பறந்து வா என்கிறார்.


மேலும் குருவிகளைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்.


குருவிகளைக் கண்களால் பார்

சிறிய தானியம் போன்ற மூக்கு; சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப் போர்த்த முதுகு; சிறிய தோகை, துளித் துளிக் கால்கள்.


என்ன ஒரு சொற் சித்திரம். ஒரு முறை கூடக் குருவியைத் தொட்டுப் பார்க்கவில்லையே என்று மனம் ஏங்குகிறது.


நாலைந்து வருடங்களுக்கு முன்னால் சிட்டுக் குருவியைப் பார்த்தேன். குணசீலம்  என்று ஒரு அழகிய சிற்றூர். சாலையின் மறுபுறம் காவிரி வளைந்து ஓடியது.. இந்தப் பக்கம் சிறிய கோவில். அங்கே கோவிலுக்கு வெளியேதான்   குருவியைப் பார்த்தேன்.  கைபேசியில் படம் எல்லாம் எடுக்க வில்லை. செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சு காரணமாகத் தான் குருவிகள் அழிந்து போயிற்று என்று சொல்கிறார்கள்.  ஒரு இனமே அழிந்து போவது எத்தனை துயரம்.


ஒரு முறை கால்வாயின் கரையில் இருந்த மரத்தடியில் சிறுவர்கள் கவணெறிந்து ஒரு குருவியை வீழ்த்தியதைப் பார்த்தேன். அது மெது மெதுவாய் கண்களை மூடியது.  


உணர்வுகளின் கவணெறியில் உயிர்ப் பறவை துடித்து விழத்தானே செய்கிறது?


தி சந்தானம் 

Comments

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...