குரு தத் மேன்மையான கலைஞன். சினிமாவின் மேல் அவர் தீராத தாகம் கொண்டிருந்தார். சொந்த வாழ்க்கையில் அவர் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். கீதா உடன் ஆன அவரது திருமண உறவு முறிந்து போனது. அதனால் அவர் பெரிதும் பாசம் வைத்திருந்த மகளையும் பிரிந்து வாழ நேர்ந்தது. தன்னை மாய்த்துக் கொண்ட இரவு வரை அவர் மகளின் நினைவாகவே இருந்தார்.
குரு தத்தின் படங்கள் வெற்றி அடைந்திருக்கின்றன. படு தோல்வியையும் சந்தித்திருக்கின்றன. அப்படி தோல்வியை சந்தித்த திரைப்படம் காகஸ் கே பூல் (காகித மலர்கள்) குரு தத் மற்றும் வஹீதா ரஹ்மான் முக்கிய வேடம் ஏற்றிருந்தார்கள். 1959 ல் வெளி வந்தது. குரு தத் தயாரித்து இயக்கியிருந்தார். அது ஒரு சினிமாஸ்கோப் படம்.
சுரேஷ் சின்ஹா புகழின் உச்சியில் இருக்கும் சினிமா இயக்குனர். சினிமாவில் அவர் இருப்பது அவருடைய மனைவிக்கும் மனைவியின் பெற்றோருக்கும் பிடிக்கவில்லை. எனவே மனைவியைப் பிரிந்து இருக்கிறார். இவருடைய சினிமா வாடையே படாமல் ஒரே மகள் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறாள். பெண்ணைச் சந்திக்கச் சென்றால் அங்கே அனுமதி மறுக்கப்படுகிறது.
சாந்தி மருந்துக் கம்பனியில் வேலை பார்க்கும் எளிய பெண். யாருமற்ற அனாதை.ஒரு மழை நாளில் இருவரும் சந்திக்க நேருகிறது. குளிரில் நடுங்கும் அவளுக்கு தான் அணிந்திருந்த கோட்டைக் கழற்றித் தருகிறார். சிறிய அறிமுக வாரத்தைகளுக்குப் பின் டாக்ஸியை அழைத்துச் சென்று விடுகிறார் சுரேஷ். சாந்தி கோட்டைத் திருப்பித் தருவதற்காக சுரேஷ் இருக்கும் சினிமா ஸ்டூடியோவிற்கு வருகிறாள். படப்பிடிப்புத் தளம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பதில் சொல்வார் யாரும் இல்லை. திடீரென்று சுரேஷ் வருகிறார் சாந்தி மழை நாளையும் மரத்தடியையும் நினைவு படுத்த முபலுகிறாள். அவர் ஏதோ சிந்தனையில் இவளைக் கவனியாது கடந்து சென்று ஒரு சிறு கதவைத் திறந்து மறைகிறார். இவள் சிறிது தாமதிக்கிறாள். பின்பு அவர் சென்ற கதவைத் திறக்கிறாள். அது ஒரு தெருவைப் போலத் தெரிகிறது. அந்தத் தெருவில் அவள் நடக்கிறாள். ஒளி வெள்ளம் எங்கும் பாய்ந்து கண்களைக் கூச வைக்கிறது. எதிரே ஓரு கிரேன் உயர்ந்து நிற்கிறது. காமிராவின் கண் அவளையே உற்று நோக்குகிறது.மருண்டு போனவளாக அவள் பின் வாங்குகிறாள். படப்பிடிப்பில் குறுக்கிட்டதற்காக பல குரல்கள் அவளை வசைபாடுகின்றன.
அப்போது கிரேன் மீது இயக்குனர் சுரேஷ் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறாள். அவரிடம் தான் ஓவர்கோட்டைத் திருப்பித் தர வந்திருப்பதாகக் கூறுகிறாள். சுரேஷ் அவளைக் காத்திருக்கச் சொல்கிறார். உதவியாளரிடம் அவள் அமருவதற்கு நாற்காலி தரச் சொல்கிறார்.
சாந்தி கண்களில் மருட்சியுடன் பின் வாங்கும் காட்சி படச் சுருளில் பதிவாகி விடுகிறது. சுரேஷ் சின்ஹா ரஷ் பார்க்கும் போது அந்த முகத்தில் தெரியும் கள்ளமின்மையால் கவரப்படுகிறார். உடனே இவளை அழைத்து வாருங்கள். எனது அடுத்த படத்தின் நாயகி இவள் தான் என்று உரக்கக் கூவுகிறார். அனைவரும் வியந்து போகின்றனர். இயக்குநர் அப்படி எல்லாம் எளிதில் உணர்ச்சியைக் காட்டுபவரும் அல்ல. உரக்கக் கூவுபவரும் அல்ல. சாந்தி வருகிறாள். சினிமா உலகம் மிரள வைப்பதாக இருக்கிறது. நடிக்கத் தயங்குகிறாள். சுரேஷ் சின்ஹா நம்பிக்கை தருகிறார். தன்னை நம்புவதைக் காட்டிலும் தான் பெரிதும் நம்பும் ஒருவராக சின்ஹா இருப்பதை உணருகிறாள். ஒரு அழகான உறவு அவர்களிடையே மலர்கிறது. படம் வளர்கிறது. இருவரையும் இணைத்து வதந்திகளும் பரவுகிறது. வெளிப்புறப் படப்பிடிப்பிற்காக சுரேஷும் சாந்தியும் ஒரே காரில் செல்கிறார்கள். கார் விபத்துக்குள்ளாகிறது. சுரேஷுக்கு காயம் ஏற்படுகிறது. சாந்தி காயமின்றித் தப்பி விடுகிறாள்.
சுரேஷ் சின்ஹா குணமடைந்து ஸ்டூடியோவிற்கு வருகிறார். சீக்கிரமே வருவது அவர் பழக்கம். அவருக்கு முன்னமே சாந்தி வந்திருக்கிறாள். யாரும் இல்லாத படப்பிடிப்புத் தளத்தில் ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருக்கிறாள். இது யாருக்காக என்று கேட்கிறார். என்னைப் போலவே தனிமை கொண்ட ஒருவருக்காக என்கிறாள். சின்ஹாவுக்கு முகம் மாறுகிறது. நான் மணமானவன் தெரியுமா என்கிறார். தெரியும் என்று பதில் வருகிறது. நான் குறிப்பிடப் போகும் பாடல் காட்சி துவங்குகிறது. பாடியவர் கீதா தத். இசை எஸ்.டி
பர்மன். பாடல் வரிகள் கைஃபி ஆஸ்மியுடையது. பாடல் வரிகளைத் தமிழில் மொழி பெயர்த்து கீழே தந்திருக்கிறேன்.
காலம் செய்து விட்டது
ஒரு இனிமையான கொடுமையை
நீ நீயாக இல்லை
நான் நானாக இல்லை
நமது இதயம் அமைதி இழந்தது
ஒருவரை ஒருவர் காணத் துடித்தது
ஏதோ நாம் பிரியாமலே இருந்ததைப் போல
நீ உன் வழியை இழந்தாய்
நானும் என் வழியை இழந்தேன்
சிறிது காலம் நாம் சேர்ந்து
நடந்து இருந்தாலும்
நான் எங்கே செல்வேன்
யோசிக்கக் கூட வில்லை
செல்லத துவங்கினேன் ஆனால்
பாதை தெரியவில்லை
நான் என்ன தேடுகிறேன்
ஓன்றும் புரியவில்லை
எனது இதயத்தைத் தடுக்க முடியவில்லை
கனவுகளின் இழையை நெய்வதிலிருந்து
மென்மையான இசையும் குரலும் பாடல் வரிகளும் மனதைத் தொடும் விதமாக அமைந்திருக்கிறது.
மேலே திரைப்படத்தின் கதையைத் தொடரலாம். சாந்தியின் முதல் படமே பெரும் வெற்றியைப் பெறுகிறது. சின்ஹாவின் மகள் சாந்தியைச் சந்தித்துக் கடிந்து பேசுகிறாள். விளைவாக சாந்தி ஒரே படத்தோடு திரை உலகை விட்டு விலக முடிவு செப்கிறாள். காரணமான தன் மகளை சின்ஹா கடிந்து கொள்கிறார். சாந்தியைச் சந்திக்கிறார்.. அப்போது இப்படி ஒரு உரையாடல் அவர்களுக்கு இடையே நடக்கிறது.
சுரேஷ்: நீ போகிறாயா?
சாந்தி: ஆமாம். உங்களிடம் சொல்லிக்
கொண்டுதான் போக இருந்தேன்
சுரேஷ்: நீ ஏன் போகிறாய் என்று எனக்குத் தெரியும்
சாந்தி: உங்களுக்குப் புரியும் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்
சுரேஷ்: நாம் எப்போதும் ஒருவரை ஓருவர் புரிந்து கொண்டவர்கள் தானே?
சாந்தி: ஆமாம் எப்பொழுதும்
சுரேஷ்: ஏன் மனிதர்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்கிறார்கள்? ஏன்?....
இது இப்படி நடந்து இருக்க வேண்டாம். இப்படி நடக்காமல் இருந்தால், எல்லாவற்றையும் விட்டு விட்டு நீ போக நேர்ந்திருக்காது
சாந்தி: நீங்கள் யாவற்றிலிருந்தும் தப்பி விட முடியும். எனக்கு அத்தனை அதிர்ஷ்டம் வாய்க்குமா என்ன?
பொறுங்கள்..
சாந்தி தான் பின்னிய ஸ்வெட்டரை அவரிடம் தருகிறாள். அவரை விட்டு விலகிச் சென்று விடுகிறாள் தொலைவாக. சின்ஹா தனது மகளைத் தன்னோடு வைத்துக் கொள்ள நினைக்கிறார். வழக்கில் தீர்ப்பு அலருக்குச் சாதகமாக இல்லை. தனிமை அவரை வந்து சூழ்கிறது. தீராத குடி நோயாளி ஆகிவிடுகிறார். அவருடைய படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்திக்கின்றன புகழின் உச்சத்திலிருந்து சரிகிறார். வீடு செல்வம் யாவற்றையும் இழக்கிறார்.
திரைப் படத்தின் இறுதியில் ஒரு பாடல் பின்னணிக் குரலாக வரும். அந்த வரிகளைச் சொல்லி நிறைவு செய்கிறேன்.
வண்டே! நீ பறந்து சென்று விடு விரைவாக
நீ உண்பதற்கு தேன் ஒன்றும் இங்கு இல்லை
இங்கே இந்தத் தோட்டத்தில் காகிதப் பூக்கள் தான் மலர்கிறது
தி சந்தானம்
We don't have someone like guru Datt.,but kanavu tholirchalai could be a good film about cinema and the people there ...
ReplyDeleteGuru Dutt had a keen sense and greater grasp of cinema. He had a very good cinematographer in :V K Murthy
ReplyDeleteMore than Kanavu thozhirchalai, Karaondha nizhalgal would have made a much more serious film
ReplyDeleteYes you are right.
DeleteSince I have read kt recently, it came to my mind.
Yes you are right, since I have read kt recently it came to my mind
Deleteகுருதத்தின் பங்கு ஹிந்தி சினிமா வில் முக்கியமானது.
ReplyDeleteஆமாம் மதி. அவருடைய மறைவு அகாலமானது
Delete