அந்தப் பாடலை சிறு வயதிலேயே கேட்டிருக்கிறேன். வானொலிப் பெட்டியிலிருந்து மெல்லக் கசிந்து வரும் அந்தப் பாடல். ஒரு மென்மையான ஆலாபனை சந்தனத்தை இழைத்தது போல. அது என்ன குரல்! என்னமாய் மனதை வருடுகிறது! பின்பு ஜல். ஜல்..ஜல்..ஜல்..ஜல்ஜல்.. என்று சலங்கையின் ஓசை. காலையும் நீயே மாலையும் நீயே என்று ஒரு மென்குரல் மனதை மயக்கும். பின்பு ஒரு தேன் குரல் பதில் போல மிழற்றும்.
ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு பருவத்திலும் இந்தப் பாடலைக் காது கொடுத்து கேட்பது ஒரு புது அனுபவம் தான்.
மேலே சொன்ன பாடல் தேன் நிலவு என்ற திரைப்படத்தில் வரும். 1962 ம் வருடம் இந்தத் திரைப்படம் வெளிவந்திருக்கிறது. ஸ்ரீதர் இயக்கம். ஏ எம். ராஜா இசையமைத்து பாடியிருந்தார். உடன் பாடியவர் எஸ்.ஜானகி. பல வருடங்கள் கழித்து மறு முறை வெளியான போது இந்தப் படத்தைப் பார்த்தேன். அப்போது தான் நான் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தேன். .பாடல் காட்சியில் வைஜயந்தி மாலா ஆடுவார். நாட்டியத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர். பாலில் விழுந்த பழங்களைப் போலே என்று ஒரு வரி இந்தப் பாடலில் வரும்.
பாலைக் கறப்பது போல் அபிநயித்து ஒரு குவளையில் நிரப்புவதைப் போல் நிரப்புவார். கையில் இல்லாத ஒரு பழத்தை குவளையில் தொப்பென்று போடுவார். பின்பு அதை ஜெமினி கணேசனிடம் தருவார். நிஜமாகவே பழம் நழுவிப் பாலில் விழும். பாருங்கள்.
அப்போது நான் ஒன்பது அல்லது பத்தாவது வகுப்பில் படித்துக் கொண்டிருப்பேன். எங்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரு கோவில் இருந்தது. அந்தக் கோவிலுக்கு கர்நாடக இசைப் பாடகர் வந்திருந்தார்.அவர் டி.என். சேஷகோபாலன். இளைஞர்.அடர்த்தியான புருவங்கள். வில்லினை ஒத்த என்ற வார்த்தைக்குப் பொருள் புரிந்தது. தாமரைக் கண்கள். லயித்துப் பாடும் போது மூடுவதும் சில போது திறந்தும் இருந்தது. மூடிய இமைகள் பெரிதாக இருந்தது. ஜிப்பா அணிந்திருந்தார். திண்மையான தோள்கள். பெண்கள் கூட்டம் சாடி முன்னேறி இருந்தது. பண்டுரீதி கோலோ என்ற பாடலைப் பாடியதாக ஞாபகம். ஸ்வரங்களை லாவகமாக கையாண்டார். நல்ல சாரீரம். அதற்குப் பிறகு அவரைக் கேட்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வெகு நாட்களுக்குப் பின் அவரது ராக ஆலாபனையைக் கேட்க வாய்த்தது. அற்புதம். நீங்களும் கேளுங்களேன்.
எண்பதுகளில் அலுவலக நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து போய் ஒரு திரைப்படம் பார்த்தோம். அது தங்க மகன்.
எம்ஜியாரை நாயகனாக வைத்தே படம் தயாரிக்கும் சத்யா மூவீஸ் நிறுவனத்தார் ரஜினிகாந்தை நாயகனாகக் கொண்டு இந்தப் படத்தை எடுத்திருந்தார்கள். அதில் ஒரு பாடல். ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை என்று துவங்கும். ராத்திரியிலாவது தாமரையாவது பூப்பதாவது என்று சிலர் கொந்தளித்தார்கள். பாடலை எழுதியவர் தமிழாசிரியர். அவர் சொன்னார் அது இல்பொருள் உவமை அணி என்று. எல்லோரும் வாயடைத்துப் போனார்கள். நல்ல பாடல். சிறப்பான இசை.
நான் இடையில் சொன்ன கர்நாடக இசைப் பாடகர் பாடிய ராகத்தில் தான் இரண்டு திரை இசைப் பாடல்களும் அமைந்திருக்கிறது. அந்த ராகத்தின் பெயர் ஹம்சாநந்தி.
👏 👌🏻
ReplyDeleteகாலையும் நீயே, பண்டுரீதீ, ராத்திரியில் பூத்திருக்கும் மூன்று பாடல்களுமே மிக மிக அருமை. இதில் ஷேஷகோபாலன் நன்றாக பாடியிருக்கிறார். மேலும் இதே பாட்டை செம்பை வைத்யநாத பாகவதர் பாடியிருப்பார்.
ReplyDeleteநன்றி ராம். ஆமாம் அந்தப் பாடலை செம்பையும் யேசுதாஸும் இணைந்து பாடியிருப்பார்கள்
Deleteஅது வெங்கலக்கடையில் யானை புகுந்தது போன்ற குரல். அதையும் கேட்டு அநுபவிக்கலாம்.
ReplyDelete😂
Delete