அந்தக் குழந்தை கூடையில் படுத்திருந்தது. வெள்ளை நிறக் குல்லாய் அணிந்திருந்தது. கூடை புதிதாக வண்ணம் தீட்டப்பட்டு பனி நீல ரிப்பன்களும் நீல மெத்தையும் கொண்டு விளங்கியது. மூன்று குட்டிச் சகோதரிகள் மற்றும் அப்போதுதான் படுக்கையில் எழுந்து அமர்ந்திருந்த அம்மா, பாட்டி எல்லோரும் குழந்தையைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள் அது விழிப்பதையும் மூடிய பிஞ்சுக் கைகளை உயர்த்தி வாயில் வைத்துக் கொள்வதையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். குழந்தை புன்னகைக்க வில்லை; சிரிக்க வில்லை. அவ்வப்போது கண்களைச் சிமிட்டியது. சிறுமிகளில் ஒருத்தி மோவாயை நிமிண்டும் போது உதடுகள் வழியாக நாக்கை முன்னும் பின்னும் அசைத்துக் கொண்டிருந்தது.
அப்பா சமையலறையில் இருந்தார். சிறுமிகள் குழந்தையுடன் விளையாடுவது அவருக்குக் கேட்டது.
"பாப்பாவுக்கு யாரைப் பிடிக்கும்?"
பிலிஸ் குழந்தையின் மோவாயை நிமிண்டியபடி கேட்டாள். பிலிஸ் தொடர்ந்தாள். "அவனுக்கு எல்லோரையும் பிடிக்கும். ஆனால் நிஜத்தில் அப்பாவைத் தான் பிடிக்கும். அப்பாவும் ஒரு பையன் இல்லையா?"
பாட்டி படுக்கையின் விளிம்பில் இருந்தபடி சொன்னாள்"அவனுடைய சின்னக் கைகளையும் சதையையும் பாருங்கள். எத்தனை குண்டாக இருக்கிறது! அந்தச் சின்ன விரல்கள் அம்மா மாதிரிதான்"
அழகு இல்ல? என் சின்னக் குட்டி" அம்மா குனிந்து குழந்தையின் முன் நெற்றியில் முத்தமிட்டாள்.
"ஆனால் அவன் யாரை மாதிரி இருக்கிறான்?" அலீஸ் கத்தினாள்.
எல்லோரும் நகரந்து கூடையை மிக நெருங்கிச் சுற்றி நின்றார்கள். யாரைப் போல் இருக்கிறான் என்று பார்க்க.
'அவன் கண் ரொம்ப அழகு" கரோல் சொன்னாள். "அவனுக்குத் தாத்தா போல உதடு" பாட்டி சொன்னாள்.
எனக்கு என்னவோ அப்படித் தோணல" அம்மா சொன்னாள்.
:மூக்கைப் பாருங்க.. மூக்கைப் பாருங்க" அலீஸ் கத்தினாள்.
"மூக்குக்கு என்ன?" அம்மா கேட்டாள்
மூக்கு யார் மாதிரியோ இருக்கு" சிறுமி சொன்னாள். "இல்ல.. எனக்குத் தெரியல. அப்படி ஒண்ணும் இல்ல" அம்மா சொன்னாள்.
"அந்த உதடுகள்.." பாட்டி முணுமுணுத்தாள். "அந்தச் சிறிய விரல்கள்.." பாட்டி மூடிய கைகளைப் பிரித்து குழந்தையின் விரல்களை விரித்தாள்.
"குழந்தை யாரை மாதிரி இருக்கான்?"
"யார் மாதிரியும் இல்ல" பிலிஸ் சொன்னாள். எல்லோரும் குழந்தையை இன்னும் நெருங்கினார்கள். கரோல் சொன்னாள். "எனக்குத் தெரிஞ்சு போச்சு. தெரிஞ்சு போச்சு. அப்பா மாதிரி இருக்கான்." எல்லோரும் குழந்தையை நன்கு உற்றுப் பார்த்தார்கள்.
"ஆனா அப்பா யாரை மாதிரி இருக்கார்?" பிலிஸ் கேட்டாள்.
"அப்பா யாரை மாதிரி இருக்கார்" அலீஸ் அப்படியே திரும்பச் சொன்னாள்.
எல்லோரும் சமையலறைப் பக்கம் பார்த்தார்கள். அப்பா அவர்களுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.
"யாரை மாதிரியும் இல்ல.." பிலிஸ் இப்படிச் சொல்லி விட்டு லேசாக அழ ஆரம்பித்தாள்.
"உஷ்" என்று பாட்டி சொல்லி விட்டு வெளியே பார்த்தாள். பின்பு குழந்தையைப் பார்த்தாள்.
"அப்பா யாரை மாதிரியும் இல்ல.." அலீஸ் சொன்னாள்.
"ஆனா அவர் யாரை மாதிரியாவது இருக்கணுமே" பிலிஸ் கண்களை ரிப்பனால் துடைத்தபடி சொன்னாள்.
பாட்டியைத் தவிர அனைவரும் மேசையருகே அமர்ந்திருந்த அப்பாவைப் பார்த்தார்கள்.
அவர் நாற்காலியைத் திருப்பி அமர்ந்தார். முகம் வெளிறியிருந்தது. அதில் எந்த உணர்ச்சியும் இல்லை.
மூலக்கதை ரேமண்ட் கார்வர்
தமிழில் தி சந்தானம்
கதை முடிவு சூப்பர். அப்பா யார் மாதிரியும் இல்லை. முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. ஏனென்றால் அவர் இது எல்லாவற்றையும் தாண்டி வேறு எதையோ ஒன்றை யோசித்துக் கொண்டிருப்பார்.
ReplyDeleteபல விதமாக யோசிக்கவும் விளங்கிக் கொள்ளவும் முடியும்
ReplyDeleteநன்றி ராம்
ReplyDeleteசிறுகதை இலக்கணத்துக்கு ஏற்ற சிறுகதை.மொழிபெயர்ப்பும் அருமை.
ReplyDeleteநன்றி மதி சிறுகதை மொழிபெயர்ப்பு முதல் முயற்சி
DeleteExcellent 👏👏👍🏻
ReplyDeleteThank you
Delete😂😂
ReplyDeleteசிறப்பான மொழிபெயர்ப்பு
ReplyDeleteநன்றி ஜெயந்தி
Delete