Skip to main content

சர்மா.ரங்கூன்..சிவாஜி

 பர்மா தற்போது மியான்மர் என்று அழைக்கப்படுகிறது. அதன் தலைநகர் ரங்கூன் தற்போது யாங்கே என்று அழைக்கப்படுகிறது. இந்த ரங்கூன் ஒரு திரைப்பட நடிகரின் திரை வாழ்வோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அவர் சிவாஜி கணேசன்.  அது அவருடைய முதல் படம். பராசக்தி. ஓரு அழகான மாடுலேஷனில் ரங்கூன் என்ற பெயர் அவர் வாயில்புகுந்து புறப்படும்.  தமிழன் பிறக்க ஓரிடம் பிழைக்க ஓரிடம் என்று பரிகாசக் குரலில் சொன்ன பின்பு ரங்..கூன் என் உயிரை வளர்த்தது என்பார்.


சகோதரர்கள் மூவரும் பிழைப்புக்காக பர்மா சென்று வசிக்கிறார்கள். அதுவும் இந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த  பகுதி.  தமிழ் நாட்டில் தங்கைக்குத் திருமணம். சகோதரர்கள் வர இயலாத நிலை.  காரணம் பர்மாவின் மீது ஜப்பானின் தாக்குதல். குண்டுகள் பொழிவு ஆரம்பம். கப்பலில் ஒரு டிக்கெட் தான் கிடைக்கிறது.  எல்லோருக்கும் இளையவனான குணசேகரனை பெரும் பொருளோடு அனுப்பி வைக்கிறார்கள். போர் சூழ்நிலையின் காரணமாக கப்பல் மிகவும் தாமதமாக சென்னை வருகிறது. குணசேகரன் ஹோட்டலில் தங்கும் போது உடமைகளையும் பொருளையும் இழக்கிறான். பித்தனைப் போல் நடித்துத் திரிகிறான். தங்கை கல்யாணியை கைக்குழந்தையோடு கணவனை இழந்த நிலையில் காண்கிறான். தான் யாரென்று சொல்லிக் கொள்ள முடியாத நிலை. இது இப்படி இருக்க பர்மாவில் போர் முற்றுகிறது. ஜப்பானின் தீவிரத் தாக்குதல். எல்லோரும் வாழ்விடத்தைத் துறந்து வெளியேறி விடத் துடிக்கிறார்கள். கல்யாணியின் மூத்த சகோதரர் மனைவியுடன் எப்படியோ திருச்சி வந்து சேருகிறார். அடுத்த சகோதரன் ஞானசேகரன் குண்டு வீச்சில் கால் இழந்து அகதிகள் முகாமில் இடம் கிடைக்காமல் பிச்சைக்காரனாக அலைகிறான். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் பர்மாவைத் தாக்கியதில் ஒரு குடும்பம் சிதறுண்டு போவதுதான் திரைக்கதையின் ஆதார முடிச்சு.


பராசக்தி வெளிவந்த சில வருடங்களில் ரங்கோன் ராதா என்ற திரைப்படத்தில் சிவாஜி நடித்தார். இந்தத் திரைப்படத்தை நான் பார்த்தது இல்லை. சிவாஜி இதில் எதிர் நாயகனாக நடித்ததாகச் சொல்வார்கள். ரங்கோன் என்ற பெயர் மட்டுமே திரைப்படத்தோடு தொடர்பு உடையது என்று நினைக்கிறேன்.  பனியன் அணிந்த தோற்றத்தோடு சிவாஜி குழந்தையைப் பானுமதியிடமிருந்து கோபத்துடன் பறிப்பதைப் போல ஒரு ஸ்டில் சிறு வயதில் பாரத்திருக்கிறேன். அது எப்படி என்றால் பேசும் படம் என்ற திரைப்படப் பத்திரிக்கையின் பைண்டிங் தொகுப்பு எங்கள் வீட்டில் இருந்தது. அதில் தான் மேலே சொன்ன ஸ்டில்லைப் பார்த்தேன்.


மோட்டார் சுந்தரம் பிள்ளை என்று ஓரு திரைப்படம். 1966 ம் ஆண்டு வெளி வந்தது. இந்தத் திரைப்படத்திலும் ரங்கூன் சிவாஜி கணேசனின் வாழ்க்கையில் விளையாடுகிறது. இரண்டு பெண்கள்.. அவர்களுடைய தந்தை. சிவாஜியை மற்றும்  அவர் சகோதரியை சிறு வயது முதல் ஆதரித்து அரவணைத்த பெரியவர். சிவாஜி மட்டும் இவர்கள் வீட்டு மாடியில் தங்கியிருக்கிறார். சிவாஜியின் அக்கா திருமணமாகி ரங்கூனில் இருக்கிறார். சிவாஜி இரண்டு பெண்களில் இளையவளை விரும்புகிறார். இப்படி இருக்க ரங்கூனில் சிவாஜிக்கு நல்ல வேலை காத்திருப்பதாக அக்கா எழுதுகிறார். சிவாஜி பெரியவரிடம் சொல்கிறார். மகிழ்ந்த அவர் என் மகளைத் திருமணம் செய்து கொண்டு கூட அழைத்துச் செல் என்கிறார். சிவாஜியும் இளைய மகளைத் தான் திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார் என்று தவறாகப் புரிந்து கொள்கிறார். ஆனால் பெரியவர் தன் முதல் மகளைத் தான் மணம் பேசியிருக்கிறார் என்று தெரிகிறது. விஷயம் கை மீறிய நிலையில் காதலர் இருவரும் நிராசையில் விழுகிறார்கள். அக்காவிற்கு தங்கையின் காதல் தெரியாது. தெரியாமலே இருக்கட்டும் என்று தங்கை சிவாஜியுடன் சொல்லி விடுகிறார். திருமணம் நடக்கிறது. மூத்தவளோடு சிவாஜி கப்பலில் பர்மா செல்கிறார். ஓரு நாள் நடன நிகழ்ச்சிக்கு டிக்கட் வருகிறது. சிவாஜியின் அக்கா அக்காவின் மகன் சிவாஜியின் மனைவி மூவரும் செல்கிறார்கள். அக்காவின் கணவர் வீட்டில் இருக்கிறார். திடீரென்று ஜப்பானிய போர் விமானங்கள் குண்டு மழை பொழிகின்றன. அலுவலகத்தில் இருந்த சிவாஜி தப்பி விடுகிறார். குடும்பத்தினர் யாவரும் இறந்து விட்டனர் என்று கருதி தமிழ்நாடு வருகிறார். அக்காவின் கணவர்தான் இறந்து விட்டார். மற்றவர்கள் உயிர் தப்பிவிட்டனர் என்று பின்னால் தெரிகிறது. இந்த முக்கியத் திருப்பத்தால் சிவாஜியின் வாழ்வில் என்னென்ன பிழைகள் நேர்கின்றன என்பதுதான் கதை.


பர்மாவும் ரங்கூனும் மேலே சொன்ன திரைப்படங்களும் ஏன் நினைவில் வந்தன? சொல்கிறேன்.  "எனது பர்மா வழிநடைப் பயணம்"  என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். இதை எழுதியவர் வெ.சாமிநாத சர்மா. தமிழின் முக்கியமான ஆளுமை. தமிழில் முதலாக அரசியல் இலக்கியம் படைத்தவர். பிளேடோவைத் தமிழில் தந்தவர். பர்மாவில் பத்து ஆண்டுகள் வசித்தவர். அங்கே ஜோதி என்ற பத்திரிக்கையை பொறுப்பேற்று நடத்தி வந்தவர்.


இரண்டாம் உலகப் போரின் பிற்பகுதி. 1941 ம் வருடம். டிசம்பர் மாதம் இரண்டாவது வாரம்  ஓரு முற்பகலில் ஜப்பானிய விமானங்கள் வான் வெளியில் வெறுமனே ரங்கூன் நகரத்தின் மேலே

வட்டமிட்டுக் செல்கின்றன. இதிலிருந்து தன் அனுபவத்தைப் பதிவு செய்கிறார் சர்மா.  போர் சூழ்நிலையில் எழுதப்பட்ட தமிழ் புத்தகம் இது ஒன்றாகத்தான் இருக்கக் கூடும். எளிய மொழி. சரளமான நடை. நேர்மையான உண்மை கூடி வந்த எழுத்து. 150 மைல் தூரம் நடந்து வந்திருக்கிறார்.  கார் லாரி நீராவிப் படகு ரயில் என்று தூரங்களைக் கடந்திருக்கிறார். சந்தித்த சிக்கல்களை அவர் அணுகும் விதம் சாந்தமாக இருக்கிறது. கிடைக்கும் உதவிகளுக்கு எல்லாம் நன்றி பாராட்டும் பெரும் குணம் தொனிக்கிறது. எங்கும் தன்னை முன்னிறுத்துவது இல்லை.  மனிதர்கள் எத்தனை நல்லவர்களாக இருந்திருக்கிறார்கள்! 




"பர்மா வழிநடைப் பயணம் "எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம். தங்கள் சேகரிப்பில் கொள்ள வேண்டிய புத்தகம்.


சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.


தி சந்தானம்





Comments

  1. அருமை.
    சர்மாவின் இந்த புத்தகம் நான் படித்ததில்லை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மதி நான் சமீபமாக புத்தகக் கண்காட்சியில் வாங்கிப் படித்தேன்

      Delete
  2. ஜனவரி பு க லிஸ்ட்ல சேத்துக்கறேன். நன்றி

    ReplyDelete
  3. இந்த புத்தகம் படித்ததில்லை. முயற்சி செய்கிறேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம். கிடைத்தால் வாசியுங்கள். அந்த எழுத்து நடை உங்களுக்குப் பிடிக்கும்.

      Delete
  4. தமிழ் digital library ல் இந்தப் புத்தகம் இருந்தது. உடனே படிக்க ஆரம்பித்து விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. நானும் டவுன்லோடிட்டேன். நாளைக்கு படிக்க ஆரமிக்கனும்.👍

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...