பர்மா தற்போது மியான்மர் என்று அழைக்கப்படுகிறது. அதன் தலைநகர் ரங்கூன் தற்போது யாங்கே என்று அழைக்கப்படுகிறது. இந்த ரங்கூன் ஒரு திரைப்பட நடிகரின் திரை வாழ்வோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அவர் சிவாஜி கணேசன். அது அவருடைய முதல் படம். பராசக்தி. ஓரு அழகான மாடுலேஷனில் ரங்கூன் என்ற பெயர் அவர் வாயில்புகுந்து புறப்படும். தமிழன் பிறக்க ஓரிடம் பிழைக்க ஓரிடம் என்று பரிகாசக் குரலில் சொன்ன பின்பு ரங்..கூன் என் உயிரை வளர்த்தது என்பார்.
சகோதரர்கள் மூவரும் பிழைப்புக்காக பர்மா சென்று வசிக்கிறார்கள். அதுவும் இந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த பகுதி. தமிழ் நாட்டில் தங்கைக்குத் திருமணம். சகோதரர்கள் வர இயலாத நிலை. காரணம் பர்மாவின் மீது ஜப்பானின் தாக்குதல். குண்டுகள் பொழிவு ஆரம்பம். கப்பலில் ஒரு டிக்கெட் தான் கிடைக்கிறது. எல்லோருக்கும் இளையவனான குணசேகரனை பெரும் பொருளோடு அனுப்பி வைக்கிறார்கள். போர் சூழ்நிலையின் காரணமாக கப்பல் மிகவும் தாமதமாக சென்னை வருகிறது. குணசேகரன் ஹோட்டலில் தங்கும் போது உடமைகளையும் பொருளையும் இழக்கிறான். பித்தனைப் போல் நடித்துத் திரிகிறான். தங்கை கல்யாணியை கைக்குழந்தையோடு கணவனை இழந்த நிலையில் காண்கிறான். தான் யாரென்று சொல்லிக் கொள்ள முடியாத நிலை. இது இப்படி இருக்க பர்மாவில் போர் முற்றுகிறது. ஜப்பானின் தீவிரத் தாக்குதல். எல்லோரும் வாழ்விடத்தைத் துறந்து வெளியேறி விடத் துடிக்கிறார்கள். கல்யாணியின் மூத்த சகோதரர் மனைவியுடன் எப்படியோ திருச்சி வந்து சேருகிறார். அடுத்த சகோதரன் ஞானசேகரன் குண்டு வீச்சில் கால் இழந்து அகதிகள் முகாமில் இடம் கிடைக்காமல் பிச்சைக்காரனாக அலைகிறான். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் பர்மாவைத் தாக்கியதில் ஒரு குடும்பம் சிதறுண்டு போவதுதான் திரைக்கதையின் ஆதார முடிச்சு.
பராசக்தி வெளிவந்த சில வருடங்களில் ரங்கோன் ராதா என்ற திரைப்படத்தில் சிவாஜி நடித்தார். இந்தத் திரைப்படத்தை நான் பார்த்தது இல்லை. சிவாஜி இதில் எதிர் நாயகனாக நடித்ததாகச் சொல்வார்கள். ரங்கோன் என்ற பெயர் மட்டுமே திரைப்படத்தோடு தொடர்பு உடையது என்று நினைக்கிறேன். பனியன் அணிந்த தோற்றத்தோடு சிவாஜி குழந்தையைப் பானுமதியிடமிருந்து கோபத்துடன் பறிப்பதைப் போல ஒரு ஸ்டில் சிறு வயதில் பாரத்திருக்கிறேன். அது எப்படி என்றால் பேசும் படம் என்ற திரைப்படப் பத்திரிக்கையின் பைண்டிங் தொகுப்பு எங்கள் வீட்டில் இருந்தது. அதில் தான் மேலே சொன்ன ஸ்டில்லைப் பார்த்தேன்.
மோட்டார் சுந்தரம் பிள்ளை என்று ஓரு திரைப்படம். 1966 ம் ஆண்டு வெளி வந்தது. இந்தத் திரைப்படத்திலும் ரங்கூன் சிவாஜி கணேசனின் வாழ்க்கையில் விளையாடுகிறது. இரண்டு பெண்கள்.. அவர்களுடைய தந்தை. சிவாஜியை மற்றும் அவர் சகோதரியை சிறு வயது முதல் ஆதரித்து அரவணைத்த பெரியவர். சிவாஜி மட்டும் இவர்கள் வீட்டு மாடியில் தங்கியிருக்கிறார். சிவாஜியின் அக்கா திருமணமாகி ரங்கூனில் இருக்கிறார். சிவாஜி இரண்டு பெண்களில் இளையவளை விரும்புகிறார். இப்படி இருக்க ரங்கூனில் சிவாஜிக்கு நல்ல வேலை காத்திருப்பதாக அக்கா எழுதுகிறார். சிவாஜி பெரியவரிடம் சொல்கிறார். மகிழ்ந்த அவர் என் மகளைத் திருமணம் செய்து கொண்டு கூட அழைத்துச் செல் என்கிறார். சிவாஜியும் இளைய மகளைத் தான் திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறார் என்று தவறாகப் புரிந்து கொள்கிறார். ஆனால் பெரியவர் தன் முதல் மகளைத் தான் மணம் பேசியிருக்கிறார் என்று தெரிகிறது. விஷயம் கை மீறிய நிலையில் காதலர் இருவரும் நிராசையில் விழுகிறார்கள். அக்காவிற்கு தங்கையின் காதல் தெரியாது. தெரியாமலே இருக்கட்டும் என்று தங்கை சிவாஜியுடன் சொல்லி விடுகிறார். திருமணம் நடக்கிறது. மூத்தவளோடு சிவாஜி கப்பலில் பர்மா செல்கிறார். ஓரு நாள் நடன நிகழ்ச்சிக்கு டிக்கட் வருகிறது. சிவாஜியின் அக்கா அக்காவின் மகன் சிவாஜியின் மனைவி மூவரும் செல்கிறார்கள். அக்காவின் கணவர் வீட்டில் இருக்கிறார். திடீரென்று ஜப்பானிய போர் விமானங்கள் குண்டு மழை பொழிகின்றன. அலுவலகத்தில் இருந்த சிவாஜி தப்பி விடுகிறார். குடும்பத்தினர் யாவரும் இறந்து விட்டனர் என்று கருதி தமிழ்நாடு வருகிறார். அக்காவின் கணவர்தான் இறந்து விட்டார். மற்றவர்கள் உயிர் தப்பிவிட்டனர் என்று பின்னால் தெரிகிறது. இந்த முக்கியத் திருப்பத்தால் சிவாஜியின் வாழ்வில் என்னென்ன பிழைகள் நேர்கின்றன என்பதுதான் கதை.
பர்மாவும் ரங்கூனும் மேலே சொன்ன திரைப்படங்களும் ஏன் நினைவில் வந்தன? சொல்கிறேன். "எனது பர்மா வழிநடைப் பயணம்" என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். இதை எழுதியவர் வெ.சாமிநாத சர்மா. தமிழின் முக்கியமான ஆளுமை. தமிழில் முதலாக அரசியல் இலக்கியம் படைத்தவர். பிளேடோவைத் தமிழில் தந்தவர். பர்மாவில் பத்து ஆண்டுகள் வசித்தவர். அங்கே ஜோதி என்ற பத்திரிக்கையை பொறுப்பேற்று நடத்தி வந்தவர்.
இரண்டாம் உலகப் போரின் பிற்பகுதி. 1941 ம் வருடம். டிசம்பர் மாதம் இரண்டாவது வாரம் ஓரு முற்பகலில் ஜப்பானிய விமானங்கள் வான் வெளியில் வெறுமனே ரங்கூன் நகரத்தின் மேலே
வட்டமிட்டுக் செல்கின்றன. இதிலிருந்து தன் அனுபவத்தைப் பதிவு செய்கிறார் சர்மா. போர் சூழ்நிலையில் எழுதப்பட்ட தமிழ் புத்தகம் இது ஒன்றாகத்தான் இருக்கக் கூடும். எளிய மொழி. சரளமான நடை. நேர்மையான உண்மை கூடி வந்த எழுத்து. 150 மைல் தூரம் நடந்து வந்திருக்கிறார். கார் லாரி நீராவிப் படகு ரயில் என்று தூரங்களைக் கடந்திருக்கிறார். சந்தித்த சிக்கல்களை அவர் அணுகும் விதம் சாந்தமாக இருக்கிறது. கிடைக்கும் உதவிகளுக்கு எல்லாம் நன்றி பாராட்டும் பெரும் குணம் தொனிக்கிறது. எங்கும் தன்னை முன்னிறுத்துவது இல்லை. மனிதர்கள் எத்தனை நல்லவர்களாக இருந்திருக்கிறார்கள்!
"பர்மா வழிநடைப் பயணம் "எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம். தங்கள் சேகரிப்பில் கொள்ள வேண்டிய புத்தகம்.
சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
தி சந்தானம்
அருமை.
ReplyDeleteசர்மாவின் இந்த புத்தகம் நான் படித்ததில்லை.
வாழ்த்துக்கள்.
நன்றி மதி நான் சமீபமாக புத்தகக் கண்காட்சியில் வாங்கிப் படித்தேன்
Deleteஜனவரி பு க லிஸ்ட்ல சேத்துக்கறேன். நன்றி
ReplyDeleteநன்று
Deleteஇந்த புத்தகம் படித்ததில்லை. முயற்சி செய்கிறேன். நன்றி
ReplyDeleteநன்றி ராம். கிடைத்தால் வாசியுங்கள். அந்த எழுத்து நடை உங்களுக்குப் பிடிக்கும்.
Deleteதமிழ் digital library ல் இந்தப் புத்தகம் இருந்தது. உடனே படிக்க ஆரம்பித்து விட்டேன்.
ReplyDeleteநன்றி. நானும் டவுன்லோடிட்டேன். நாளைக்கு படிக்க ஆரமிக்கனும்.👍
Deleteமகிழ்ச்சி
Delete