Skip to main content

கடலளவு கிடைத்தாலும்

 ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே? அடக்குவித்தால்

                          ஆர் ஒருவர் அடங்காதாரே?

ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே? உருகுவித்தால்

                            ஆர் ஒருவர் உருகாதாரே?

பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே? பணிவித்தால் ஆர்

                                 ஒருவர் பணியாதாரே?

காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே? காண்பார் ஆர்,

                         கண்ணுதலாய்! காட்டாக்காலே?.


இது அப்பர் பெருமானின் தனித்திருத்தாண்டகத்தில் ஒரு பாடல்.

நம் செயல் ஏதும் இல்லை. எல்லாம் அவன் செய்விக்கிறான் என்பதைச் சொன்ன பாடல்.


இந்தப் பாடலின் முதல் வரியைப் பற்றிக் கொண்டு கண்ணதாசன் எழுதிய திரைப் பாடல். அது அவன்தான் மனிதன் என்ற படத்தில் இடம் பெற்றது.  ரவி தொழில் அதிபர். பெரும் செல்வந்தன். பரம்பரையாகப்  பார்த்து வரும் செல்வம். காதல் மனைவி பிரசவத்தில் இறந்து விடுகிறாள். ஒரு மகளைப் பெற்றெடுத்த பின். ஆசையுடன் வளர்த்த சிறு மகளை அலை கொண்டு போகிறது.  


முருகன் என்ற விசுவாசியான வேலைக்காரனுடன் தனியே வாழ்கிறான்.

ஆனந்த பவனம் என்ற மாளிகை வீட்டில். 

பரம்பரையாக வந்த பழக்கத்தில் ஏழை எளியவருக்கு அள்ளித் தருபவனாக இருக்கிறான். ரவியின் தனிச் செயலாளர் லலிதா. தந்தையை இழந்து தனியே இருக்கும் அவள்  ரவி செய்த உதவிகளுக்கு நன்றி பாராட்டுபவளாக இருக்கிறாள். 


வேலையில் மட்டுமே கவனம் காட்டும் குமாஸ்தா சந்திரன். முதலாளி ரவி சொல்லும் ஜோக்கைக் கேட்டு எல்லாரும் ரசிக்கிறார்கள். சந்திரன் முகத்தில் எந்த சலனமும் இல்லை. ரவி அவனைக் கேட்க நீங்கள் சொன்னது ஜோக்கே இல்லை என்று நேரிடையாகச் சொல்கிறான். ரவிக்கு இவனது வெளிப்படையான பேச்சு பிடித்துப் போகிறது. அவனுக்குப் பதவி உயர்வு தருகிறான. சந்திரனும் கருத்தாக வேலை பார்க்கிறான். ரவி தொழிலில் புது உத்திகளைக் கற்று வர சந்திரனை அமெரிக்காவிற்கு அனுப்ப முடிவு செய்கிறான். குடும்ப சூழ்நிலையைக் காரணம் காட்டி சந்திரன் இயலாமையைச் சொல்ல வருகிறான். என்ன ஏது என்று கூட கேட்காமல் ரவி அதை நிராகரிக்கிறான். இதனால் இருவருக்கும் மனத்தாங்கல் ஏற்படுகிறது.


மாலை வேளையில் சிந்தனை வயப்பட்டவனாய் ரவி கடலை வெறித்தபடி இருக்கிறான். ஒரு சிறுமி நண்டைத் துரத்தியபடி அலையில் இறங்குகிறாள். ஒரு கணம் அலை கொண்டு போன தன் மகளின் தோற்றம் அவனுக்கு நினைவில் வருகிறது. வேகமாக அலையில் இறங்கி சிறுமியைக் காப்பாற்றுகிறான். காப்பாற்றிய சிறுமி சந்திரனின் மகள் என்று தெரிய வருகிறது. மனைவியை பிரசவத்தின் போது இழந்த சந்திரன் மகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் அமெரிக்கா போக மறுக்கிறான் என்றும் புரிகிறது. அவனுடைய மகளைப் பார்த்துக் கொள்வதாக பொறுப்பு ஏற்கிறான் ரவி. சந்திரனை அமெரிக்கா அனுப்பி வைக்கிறான். ரவி சந்திரன் மகளுக்கு விளையாட பொம்மைகள் தருவிக்கிறான்.

அது அவளுக்குப் போதுமானதாக இல்லை. இறந்து போன தன் அம்மாவைத் தருவிக்குமாறு கேட்கிறாள். ரவி ஒரு கணம் திகைத்துப் போகிறான். சமாளித்துக் கொண்டு நாளை உனது அம்மா பார்சலில் வருவாள் என்று சொல்கிறான். பார்சலில் வருவது லலிதா. அவளை அம்மா என்று கருதி சிறுமி நெருக்கம் கொள்கிறாள். இதற்கிடையில் வேலைக்காரன் முருகன் லலிதா நம் வீட்டு மருமகளாக வேண்டும் என்று ரவியின் மனதில் ஆசையை விதைக்கிறான்.


சந்திரன் அமெரிக்காவிலிருந்து திரும்புகிறான். மகளை அழைத்துச் செல்ல வரும்போது அம்மாவாகக் கருதும் லலிதா கூட வர வேண்டும் என்கிறாள். லலிதா தயங்குகிறாள். ரவி போகுமாறு ஜாடை செய்கிறான். லலிதா இரவும் சந்திரன் வீட்டிலேயே தங்க நேருகிறது. இது அவர்கள் இருவருக்கும் சங்கடமான சூழ்நிலையை உருவாக்குகிறது. மறுநாள் சந்திரன் ரவியிடம் லலிதாவும் தானும் சங்கடத்தில் தவிப்பதைக் கூறுகிறான். ரவி இதற்கு ஒரு தீர்வு காண்பதாக உறுதி கூறுகிறான். தானே லலிதாவை மணந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்து லலிதாவுக்கு கடிதம் எழுதி முருகனிடம் கொடுத்து விடுகிறான். இதற்குள் லலிதாவே ரவியைப் தேடி வருகிறாள். தான் இருக்கும் சூழ்நிலையில் சந்திரனை மணந்து கொள்வதாக முடிவு எடுத்திருப்பதைக் கூறுகிறாள். வினாடியில் தனது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு தானே இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாகக் கூறுகிறான். லலிதாவிடம் கடிதத்தைக் கொடுப்பதற்காக எங்கெங்கோ அலைந்து வந்து சேரும் முருகன் லலிதாவிடம் கடிதத்தை நீட்டுகிறான். ரவி அதனைப் பிடுங்கி கிழித்துப் போடுகிறான். லலிதா என்னவென்று கேட்க அது ஒரு காலாவதியான பத்திரம் என்று சொல்லியபடி நகர்ந்து விடுகிறான். 


லலிதாவுக்கும் சந்திரனுக்கும் திருமணம் நடக்கிறது. ரவி தன் விரலில் அணிந்திருக்கும் வைரக் கல் மோதிரத்தைக் கழற்றி சந்திரன் விரலில் அணிவிக்கிறான். முருகன் துடித்துப் போகிறான். அவனுக்குத் தெரியும் ராசியான அந்த மோதிரம் பரம்பரையாக அவர்கள் குடும்பத்தில் அணிவது என்று.

ரவியிடம் அங்கலாய்க்கிறான். ரவி நிதானமாக மோதிரத்தில் என்ன இருக்கிறது. எல்லாம்..  என்று நெற்றியில் விரலால் வரைந்து காட்டுகிறான். முருகன் பயந்தபடி ஆகிறது. ரவி வியாபாரத்தில் அடுத்தடுத்து சரிவை சந்திக்கிறான். சந்திரன் சுமுகமாகவே ரவியிடம் இருந்து பிரிந்து தொழில் புரிகிறான். பெரும் வெற்றியை அடைகிறான். ரவியின் தொழிலில் தொடர்ந்து சரிவு. அவன் குடியிருக்கும் ஆனந்த பவனமே ஏலத்திற்கு வருகிறது. சந்திரன் வீட்டை மீட்டு பத்திரத்தை ரவியிடம் தருகிறான். ரவி அதை மறுத்து அவுட் ஹவுஸில் வாடகைக்குக் குடியிருக்கிறான். சந்திரனின் மகள் மீது மாறாத பாசம் கொண்டிருக்கிறான்.


கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. வீட்டு வாசலில் கண்ணன் வாராது போல் வந்திருக்கிறான். உண்ணத் தருவது போல் கொணர்ந்து தாராது இருக்கிறான்.  ரவி அவன்  விளையாட்டை எண்ணியபடியே பாடுகிறான். வாழ்வில் சேகரித்த அனுபவங்கள், சந்தித்த இழப்புகள் எல்லாம் தத்துவமாகப் பெருகி ஓடுகிறது.


இதுதான் பதிவின் முதலில் குறிப்பிட்ட கண்ணதாசன் பாடல். ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா?

அதில் ஒரு வரி 


கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் அது

கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்.

உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா இதை

உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா


கீதை சொன்ன கண்ணனிடமே கீதையின் சாரத்தை மொழியும் உன்னதமான வரிகள்.


மேலே சொன்ன வரிகளுக்கு நடிகனின் உடல் மொழியைக் காணொளியில் பாருங்கள்







Comments

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...