ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே? அடக்குவித்தால்
ஆர் ஒருவர் அடங்காதாரே?
ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே? உருகுவித்தால்
ஆர் ஒருவர் உருகாதாரே?
பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே? பணிவித்தால் ஆர்
ஒருவர் பணியாதாரே?
காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே? காண்பார் ஆர்,
கண்ணுதலாய்! காட்டாக்காலே?.
இது அப்பர் பெருமானின் தனித்திருத்தாண்டகத்தில் ஒரு பாடல்.
நம் செயல் ஏதும் இல்லை. எல்லாம் அவன் செய்விக்கிறான் என்பதைச் சொன்ன பாடல்.
இந்தப் பாடலின் முதல் வரியைப் பற்றிக் கொண்டு கண்ணதாசன் எழுதிய திரைப் பாடல். அது அவன்தான் மனிதன் என்ற படத்தில் இடம் பெற்றது. ரவி தொழில் அதிபர். பெரும் செல்வந்தன். பரம்பரையாகப் பார்த்து வரும் செல்வம். காதல் மனைவி பிரசவத்தில் இறந்து விடுகிறாள். ஒரு மகளைப் பெற்றெடுத்த பின். ஆசையுடன் வளர்த்த சிறு மகளை அலை கொண்டு போகிறது.
முருகன் என்ற விசுவாசியான வேலைக்காரனுடன் தனியே வாழ்கிறான்.
ஆனந்த பவனம் என்ற மாளிகை வீட்டில்.
பரம்பரையாக வந்த பழக்கத்தில் ஏழை எளியவருக்கு அள்ளித் தருபவனாக இருக்கிறான். ரவியின் தனிச் செயலாளர் லலிதா. தந்தையை இழந்து தனியே இருக்கும் அவள் ரவி செய்த உதவிகளுக்கு நன்றி பாராட்டுபவளாக இருக்கிறாள்.
வேலையில் மட்டுமே கவனம் காட்டும் குமாஸ்தா சந்திரன். முதலாளி ரவி சொல்லும் ஜோக்கைக் கேட்டு எல்லாரும் ரசிக்கிறார்கள். சந்திரன் முகத்தில் எந்த சலனமும் இல்லை. ரவி அவனைக் கேட்க நீங்கள் சொன்னது ஜோக்கே இல்லை என்று நேரிடையாகச் சொல்கிறான். ரவிக்கு இவனது வெளிப்படையான பேச்சு பிடித்துப் போகிறது. அவனுக்குப் பதவி உயர்வு தருகிறான. சந்திரனும் கருத்தாக வேலை பார்க்கிறான். ரவி தொழிலில் புது உத்திகளைக் கற்று வர சந்திரனை அமெரிக்காவிற்கு அனுப்ப முடிவு செய்கிறான். குடும்ப சூழ்நிலையைக் காரணம் காட்டி சந்திரன் இயலாமையைச் சொல்ல வருகிறான். என்ன ஏது என்று கூட கேட்காமல் ரவி அதை நிராகரிக்கிறான். இதனால் இருவருக்கும் மனத்தாங்கல் ஏற்படுகிறது.
மாலை வேளையில் சிந்தனை வயப்பட்டவனாய் ரவி கடலை வெறித்தபடி இருக்கிறான். ஒரு சிறுமி நண்டைத் துரத்தியபடி அலையில் இறங்குகிறாள். ஒரு கணம் அலை கொண்டு போன தன் மகளின் தோற்றம் அவனுக்கு நினைவில் வருகிறது. வேகமாக அலையில் இறங்கி சிறுமியைக் காப்பாற்றுகிறான். காப்பாற்றிய சிறுமி சந்திரனின் மகள் என்று தெரிய வருகிறது. மனைவியை பிரசவத்தின் போது இழந்த சந்திரன் மகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் அமெரிக்கா போக மறுக்கிறான் என்றும் புரிகிறது. அவனுடைய மகளைப் பார்த்துக் கொள்வதாக பொறுப்பு ஏற்கிறான் ரவி. சந்திரனை அமெரிக்கா அனுப்பி வைக்கிறான். ரவி சந்திரன் மகளுக்கு விளையாட பொம்மைகள் தருவிக்கிறான்.
அது அவளுக்குப் போதுமானதாக இல்லை. இறந்து போன தன் அம்மாவைத் தருவிக்குமாறு கேட்கிறாள். ரவி ஒரு கணம் திகைத்துப் போகிறான். சமாளித்துக் கொண்டு நாளை உனது அம்மா பார்சலில் வருவாள் என்று சொல்கிறான். பார்சலில் வருவது லலிதா. அவளை அம்மா என்று கருதி சிறுமி நெருக்கம் கொள்கிறாள். இதற்கிடையில் வேலைக்காரன் முருகன் லலிதா நம் வீட்டு மருமகளாக வேண்டும் என்று ரவியின் மனதில் ஆசையை விதைக்கிறான்.
சந்திரன் அமெரிக்காவிலிருந்து திரும்புகிறான். மகளை அழைத்துச் செல்ல வரும்போது அம்மாவாகக் கருதும் லலிதா கூட வர வேண்டும் என்கிறாள். லலிதா தயங்குகிறாள். ரவி போகுமாறு ஜாடை செய்கிறான். லலிதா இரவும் சந்திரன் வீட்டிலேயே தங்க நேருகிறது. இது அவர்கள் இருவருக்கும் சங்கடமான சூழ்நிலையை உருவாக்குகிறது. மறுநாள் சந்திரன் ரவியிடம் லலிதாவும் தானும் சங்கடத்தில் தவிப்பதைக் கூறுகிறான். ரவி இதற்கு ஒரு தீர்வு காண்பதாக உறுதி கூறுகிறான். தானே லலிதாவை மணந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்து லலிதாவுக்கு கடிதம் எழுதி முருகனிடம் கொடுத்து விடுகிறான். இதற்குள் லலிதாவே ரவியைப் தேடி வருகிறாள். தான் இருக்கும் சூழ்நிலையில் சந்திரனை மணந்து கொள்வதாக முடிவு எடுத்திருப்பதைக் கூறுகிறாள். வினாடியில் தனது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு தானே இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாகக் கூறுகிறான். லலிதாவிடம் கடிதத்தைக் கொடுப்பதற்காக எங்கெங்கோ அலைந்து வந்து சேரும் முருகன் லலிதாவிடம் கடிதத்தை நீட்டுகிறான். ரவி அதனைப் பிடுங்கி கிழித்துப் போடுகிறான். லலிதா என்னவென்று கேட்க அது ஒரு காலாவதியான பத்திரம் என்று சொல்லியபடி நகர்ந்து விடுகிறான்.
லலிதாவுக்கும் சந்திரனுக்கும் திருமணம் நடக்கிறது. ரவி தன் விரலில் அணிந்திருக்கும் வைரக் கல் மோதிரத்தைக் கழற்றி சந்திரன் விரலில் அணிவிக்கிறான். முருகன் துடித்துப் போகிறான். அவனுக்குத் தெரியும் ராசியான அந்த மோதிரம் பரம்பரையாக அவர்கள் குடும்பத்தில் அணிவது என்று.
ரவியிடம் அங்கலாய்க்கிறான். ரவி நிதானமாக மோதிரத்தில் என்ன இருக்கிறது. எல்லாம்.. என்று நெற்றியில் விரலால் வரைந்து காட்டுகிறான். முருகன் பயந்தபடி ஆகிறது. ரவி வியாபாரத்தில் அடுத்தடுத்து சரிவை சந்திக்கிறான். சந்திரன் சுமுகமாகவே ரவியிடம் இருந்து பிரிந்து தொழில் புரிகிறான். பெரும் வெற்றியை அடைகிறான். ரவியின் தொழிலில் தொடர்ந்து சரிவு. அவன் குடியிருக்கும் ஆனந்த பவனமே ஏலத்திற்கு வருகிறது. சந்திரன் வீட்டை மீட்டு பத்திரத்தை ரவியிடம் தருகிறான். ரவி அதை மறுத்து அவுட் ஹவுஸில் வாடகைக்குக் குடியிருக்கிறான். சந்திரனின் மகள் மீது மாறாத பாசம் கொண்டிருக்கிறான்.
கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. வீட்டு வாசலில் கண்ணன் வாராது போல் வந்திருக்கிறான். உண்ணத் தருவது போல் கொணர்ந்து தாராது இருக்கிறான். ரவி அவன் விளையாட்டை எண்ணியபடியே பாடுகிறான். வாழ்வில் சேகரித்த அனுபவங்கள், சந்தித்த இழப்புகள் எல்லாம் தத்துவமாகப் பெருகி ஓடுகிறது.
இதுதான் பதிவின் முதலில் குறிப்பிட்ட கண்ணதாசன் பாடல். ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா?
அதில் ஒரு வரி
கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் அது
கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்.
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா இதை
உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா
கீதை சொன்ன கண்ணனிடமே கீதையின் சாரத்தை மொழியும் உன்னதமான வரிகள்.
மேலே சொன்ன வரிகளுக்கு நடிகனின் உடல் மொழியைக் காணொளியில் பாருங்கள்
Fantastic
ReplyDeleteThank you
Delete🙏🙏🙏👌👌👌
ReplyDeleteArumai Anna.
ReplyDeleteThank you
Delete