Skip to main content

மண்ணுலகத்து நல் ஓசைகள்

 



காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்

மாலின்  வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ 


இது நாச்சியார் திருமொழி. 


ஆண்டாளின் திருப்பாவையில் தான்  எத்தனை ஓசைகள். வலம்புரிச் சங்கு அதிரும் ஓசை. கீசு கீசென்று ஆனைச்சாத்தனின் பேச்சரவம். ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்தத் தயிர் அரவம். வெள்ளை விரிசங்கின் பேரரவம். மெள்ள எழும் ஹரி என்ற பேரரவம். சிங்கம் மூரி நிமிர்ந்து முழங்கும் ஓசை. மாதவிப் பந்தல் மேல் கூவும் குயில் இனங்களின் ஓசை. செந்தாமரைக் கையாளின் வளை ஓசை.

இப்படி எல்லாம்..


நண்ணி வருமணி யோசையும்,பின்னங்கு

நாய்கள் குலைப்பதுவும்,

எண்ணுமுன்னே‘அன்னக் காவடிப் பிச்சை’யென்

றேங்கிடு வான் குரலும்,


வீதிக் கதவை அடைப்பதும் கீழ்த்திசை

விம்மிடும் சங்கொலியும்,

வாதுகள் பேசிடு மாந்தர் குரலும்

மதலை யழுங் குரலும்,

ஏதெது கொண்டு வருகுது காற்றிவை

எண்ணி லகப்படுமோ?


அது பாரதி.. மணி ஒலிக்கிறது. நாய்கள் குலைக்கின்றன. அன்னக் காவடியின் பிச்சைக் குரல். வீதிக் கதவை அடைக்கும் ஓசை. கிழக்கு திசையிலிருந்து வரும் சங்கொலி.  மனிதர்கள் புரணி பேசும் குரல். குழந்தை அழும் குரல்.  எத்தனை எத்தனை ஓலிகள். அத்தனையும் காற்று கொண்டு வந்து காதில் சேர்க்கிறது


முன்பெல்லாம் காலை கண் விழிக்கும் போது பறவைகளின் ஒலி கேட்கும். இப்போதும் கேட்கலாம். அது நாம் வசிக்கும் இடத்தைப் பொருத்தது. சிறு வயதில் காலைப் பொழுதில் நான் வசித்த வீட்டின் பின்புறம் இருந்த பிள்ளையார் கோவிலில் இருந்து மணி ஒலிக்கும். பக்திப் பாடல்களை ஒலிக்குழாய் கொண்டு வந்து காதில் சேர்க்கும். வாசல் தெளிக்கும் சப்தம் கேட்கும். சரக்கு மூட்டை ஏற்றிச் செல்லும் வண்டியை இழுக்கும் இரட்டைக் காளைகளின் குளம்பு ஓசை கேட்கும். ஆட்களின் அரவம்  டைகர் லேலண்ட் டவுன் பஸ் கடந்து செல்லும் பிரத்யேக ஓலி, ரிக்க்ஷா மணி ஓசை , கீரை விற்பவள் குரல் என்று கொஞ்சம் கொஞ்சமாகச் சந்தடி பரவும்.


 வீட்டு வாசலில் பகற் பொழுதில் பல பலவாய் குரல்கள் கேட்கும். செட்டியார் அளந்த உப்பு என்று உரக்கக் கூவியபடி ஒருவர் தள்ளு வண்டியைத் தள்ளியபடி வருவார். வளோய் வளோய் என்று வளையல் விற்பவர் வருவார்.  கோலப்படி…அம்மா கோலப் பொடி ..கோலப்பொடி …என்று ஒரு பெண்மணி கோலப்பொடி கொண்டு வருவார்.  உரலு கல்லு அடிக்கிறியா அம்மி கல்லு அடிக்கறியா..  என்று  தகரக் குரலில் கூவியபடி கல் உரலும் அம்மியும் கொத்துபவர் வருவார்.  பழே பேப்பார் என்று குரல் எழுப்பியபடி பழைய பேப்பர் வாங்கிச் செல்ல வரும் மனிதர். கிணறுகளைத் தூர் வாரது என்று கிணறு தூர் வாருபவர் வருவார்.  குடை ரிப்பேர் செய்பவர்.  ஸ்டேட் ஐஸ்கிரீம் என்று கத்தியபடி தலையில் கோடை வெயிலுக்காகத் தொப்பி அணிந்து வருபவர். வெள்ளரிப் பிஞ்சைக் கூவி விற்கும் பெண்மணி.  நெய் கொண்டு வரும் கிழவி. காசாரெட்டு மாம்பழம் என்று மாம்பழம் போலவே இனிக்கும் குரலில் சொல்லும் பெண்மணி. இப்படிப் பல மனிதர்கள். பல விதமாய் குரல்கள். 

இரவு நேரங்களில் சிறு பெட்ரோமாகஸ் ஒளியுடன் ஒரு தள்ளு வண்டி வரும். அழகான கண்ணாடிக் குடுவையில் சோன் பப்டி மஞ்சளும் வெண்மையும் கலந்த நிறத்தில் இருக்கும். வாங்கித் தின்றால் தேனாக இனிக்கும். வண்டியின் கீழே இருக்கும் மணி ஒலிக்கும். மனதுக்கு இனிமை சேர்க்கும். வண்டியைத் தள்ளி வருபவர் தேவனைப் போலத் தெரிவார்.


இளம் வயதில் இப்படி எல்லாம் வாழ்க்கைக்கு வண்ணம் சேர்த்த மனிதர்கள் நினைவிலே வந்து வந்து போகிறார்கள். கூடவே அவர்களது தனித் தன்மை வாய்ந்த குரல்களும்….


ஆனால்  அம்மா.. ராப்பிச்சை தாயே என்று ஒலிக்கும் குரல் மனதைப் பதைக்க வைக்கும். என் போன்ற சிறுவர்களைப் பயப்படுத்த உதவும் குரல் அது. கந்தை மூட்டையும் கிழிந்த ஆடைய்ம் பசித்த கண்களும்….


இரந்தும் உயிர்வாழ்தல வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்


என்ற குறளெல்லாம் அறியாத பருவம் அல்லவா அது.?






Comments

  1. அருமை.
    சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அச்சோ.. சந்தானம். நா இதே மாரி யோசிச்சு ஓசைகள வச்சு ஒரு கதை எழுதினேன். உனக்கு அனுப்பறேன். என்னுடய உலகம் ஓசை சூழ்ந்தது.

    ReplyDelete
    Replies
    1. கதை படித்தேன். மிகவும் நன்றாக இருந்தது.

      Delete
  3. இன்னும் சில கரல்கள்
    புகை வண்டியின் " கூ கூ"
    பால் காரம்மாவின்"பால் வாங்க பால் வாங்க

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். பால் வாங்க வாங்கவை மறந்தேன். கூடவே மதுரா மில்ஸ் ஆலைச் சங்கொலி

      Delete
  4. அப்பப்பா எத்தனை ஓசைகள் இப்போதெல்லாம் இரு சக்ரம் மற்றும் கார் /ஆட்டோ ஓசை மற்றும் தன் கேக்கிறது

    ReplyDelete
  5. அந்நாளில் வீட்டு வாசலில் கேட்டவற்றை அழகாக பதிவு பண்ணியதைப் படிக்க மிக இனிமை. இது தற்போது குறைந்து விட்டது. நல்ல பதிவு

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம். சரியாகச் சொன்னாய். சின்னச் சின்ன சேவைகள், சின்னச் சின்ன வியாபாரிகள், சின்னச் சின்னதாய் சந்தோஷங்கள் இப்போது குறைந்து போனது.

      Delete
  6. sinthanadhiyil innoru suzhal engal la sa ra ve unafhu thondu valarha

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...